மடப் பேர்வழிகளுக்கு மகத்துவம் உண்டா?

காரணமின்றி ஏற்காதீர்கள்
சிகரம்
பொதுவாகவே, உலகில், குறிப்பாக இந்தியாவில் உழைப்பவனையும் உண்மையானவனையும் உதாசீனப்படுத்திவிட்டு – ஒதுக்கிவிட்டு, வேடதாரி-களுக்கும், வெட்டிப் பேர்வழிகளுக்கும் மரியாதை கொடுப்பது தொடர்ந்து நடக்கிறது. இது மிகப் பெருந் தவறு ஆகும்.
இந்த உலகம் வாழ, கடும் வெய்யிலிலும் கடினப் பாறையிலும் உழைக்கிறவன் உழைப்பாளி. உண்மையிலே இந்த உலகிற்குப் பயன்படக்-கூடியவன் அவனே. என்றாலும் அவன் அலட்சியப்-படுத்தப்பட்டு, அவலங்களோடு வாழ்கிறான்.
ஆனால், வெட்டிப் பேர்வழிகளாய் உதவாத வார்த்தைகளைப் பேசிக் கொண்டு, மடத்திலே அடைந்து கிடக்கும் மடப் பேர்வழிகளை மந்திரிகள் உள்ளிட்டோர் மதித்து துதிப்பது எவ்வளவு மடமை; தவறு.
இவர்களால் இந்த நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் என்ன லாபம்? மாறாக இழப்புத்தானே அதிகம். பயனற்று கோயில் கட்டச் சொல்வதும், வேள்வி நடத்துவதும், மக்களின் அறிவை மழுங்கடித்து, மடமை வளர்ப்பதும் தானே அவர்கள் செய்யும் செயல்கள். அவை அனைத்தும் நாட்டிற்கு இழப்பல்லவா? வெறும் பொருள் இழப்பு மட்டுமா? மான இழப்பு, அறிவு இழப்பு, ஆற்றல் இழப்பு. இப்படி எத்தனையோ இழப்புகள் அல்லவா?
அறிவாளிகளையும், சான்றோர்களையும், தொண்டறச் செம்மல்களையும் மறந்துவிட்டு, சுயநலத்திற்காகக் கவர்ச்சிக் காட்டி கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நடிகர்களையும், ஊழலில் பொருள் குவித்து, மக்களை மறந்து போகும் அரசியல்வாதி-களையும் மதித்து அலைவது மடத்தனம் அல்லவா? இப்படிப்பட்ட பேர்வழிகளுக்குத் தீக்குளிக்கிறார்களே அது காட்டுச் செயல் அல்லவா?
ஆடம்பரங்களையும், அந்தஸ்தையும் மதிக்கும் நிலை மாறி, நாட்டிற்குப் பயன்படும் தொண்டர்-களையும், விஞ்ஞானிகளையும், சான்றோர்களையும், உழைப்பவர்களையும் மதிக்கின்ற, பாராட்டுகின்ற பக்குவம் வர வேண்டும்!
தவறாகப் போடும் தாளத்தை சரியாகப் போட வேண்டும். உண்மையை உழைப்பை, உரியதை உயரியதை மதிப்பதில்கூட ஒரு நாட்டின் உயர்வு உள்ளது.
உலகில் கடவுள் நம்பிக்கை வளர்ந்துள்ளதா?
நாளுக்கு நாள் கடவுள் நம்பிக்கை வளர்ந்து வருகிறது. நாத்திக வாதம் எடுபடவில்லை என்று சிலர் கூறி வருகின்றனர். ஆனால், இது ஒரு தவறான மதிப்பீடு ஆகும்.
கடவுள் மறுப்புக் கொள்கையும், கடவுள் சார்ந்த மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரமும் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளன என்பதே உண்மை.
ஆத்திகம் வளர எடுத்துக் கொண்ட காலம் எவ்வளவு? அதை அறவே அகற்றுவதற்கு எவ்வளவு காலம் பிடிக்கும்? எவ்வளவு கடினம் என்பது கணக்கிட்டுப் பார்ப்பின் நாத்திகத்தின் வெற்றி புலப்படும்.
மேலும், ஆத்திக நடைமுறையும், கடவுள் நம்பிக்கையும் இன்று தகர்ந்து, மறைந்தே வருகின்றன.
அடுத்த தலைமுறை அறிவியல் தலைமுறை. ஆத்திகம் அடிச்சுவடே இல்லாமல் போகும்!
பிள்ளையார் பால் குடிக்கிறார் என்றவுடன், கரண்டியும் பாலுமாக நின்றனர்.
பிரச்சாரம் செய்தவனே சிறைச்சாலைக்குப் போனபின் சாயம் வெளுத்து விட்டது. பால் குடித்ததாகச் சொன்னது மோசடி என்று பலருக்கும் புரிந்து விட்டது.
முட்டாளாக்குவது எளிது; அறிவாளி ஆக்குவதுதானே அரிது!
அம்மை மாரியாத்தாள் தருவது; காலரா காளியாத்தாள் தருவது என்று முன்னர் நம்பினர். அம்மனுக்கும், காளிக்கும் படையல் போட்டனர். இவை ஒழிக்கப்பட்டதும், அந்த நம்பிக்கையும் ஒழிந்துவிட்டது.
பிள்ளைகளின் எண்ணிக்கை கடவுளால் நிர்ணயிக்கப்படுகிறது என்று முன்னர் நம்பினர். ஆனால், இன்றைக்கு நாமே குறைத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை முழுமையாக வந்து, கிராம மக்கள் கூட குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர்.
இன்றைக்குப் பிள்ளைக்கறி கேட்டால் எவனும் தரமாட்டான் சிறுத்தொண்டனைப் போல!
பெண்டாட்டியை சாமியார் கேட்டால் கொடுக்கமாட்டான் இயற்பகை நாயனாரைப் போல!
இதற்கெல்லாம் என்ன காரணம்? ஆத்திகம் அழிந்து பகுத்தறிவு வளர்ந்து வருகிறது என்பதுதானே!
உலகில் நடைபெறும் நிகழ்வுகளைப் பார்த்தால் நாத்திக நடைமுறைகளே அதிகம்!
கோயில் பூட்டைப் பூட்டாமல் வா, சாமி பார்த்துக் கொள்ளும் என்றால் எந்தப் பக்தனும் கேட்கமாட்டான்!
அன்றைக்கு இருந்த சடங்குகளும் சம்பிரதாயங்களும் இன்றைக்கு இல்லை. பெரும்பாலும் கைவிடப்பட்டன.
இன்றைக்கு இருக்கின்ற கடவுள் நம்பிக்கை ஆய்ந்த, தெளிந்த அறிவினால் அல்ல. இருந்தால் நமக்கென்ன? இல்லாவிட்டால் நமக்கென்ன? நமக்கு ஏன் வம்பு! ஒரு கும்பிடு போட்டு வைப்போம் என்ற அளவில்தான் இன்றைக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது!
மற்றபடி உண்மையான கடவுள் நம்பிக்கை பெரும்பாலும் இல்லை.
பன்றிக் காய்ச்சல் பன்றியிடமிருந்து வருகிறதா?
பன்றிக் காய்ச்சல் பன்றியிடமிருந்து வருவதில்லை. இது ஒரு மனிதரிடமிருந்தே இன்னொரு மனிதருக்கு வருகிறது.
இக்காய்ச்சல் உள்ள மனிதன் தும்மினால், இருமினால், சளி சிந்தினால், எச்சில் துப்பினால் அதன் வழி மற்றவருக்குப் பரவுகிறது.
ஸ்வைன் என்றால் பன்றி என்று பொருள். இக்காய்ச்சல் முதன்முதல் பன்றியைத் தாக்கியதால் அதற்குப் பன்றிக் காய்ச்சல் என்று பெயர் வந்தது.
பன்றியைத் தாக்கிய இந்நோய்க் கிருமி வீரியம் பெற்று, மனிதனையும் தாக்கியது. ஆனால், இப்போது பன்றியிடமிருந்து மனிதர்க்கு வருவதில்லை. மனிதனிடமிருந்தே மற்ற மனிதர்க்குப் பரவுகிறது. எனவே, நோயாளியும் மற்றவர்களும் பொது இடங்களில் கைக்குட்டையால் வாய், மூக்கு இவற்றை மூடுவதும், சளியை பொது இடங்களில் துப்பாமல், தடவாமல் இருப்பதும் இந்நோயைத் தடுக்கும் வழிகளாகும்.