’அவ்னி’யைக் கொன்றது சரியா?
இயற்கை
இளஞ்செழியன்
காடுகள் என்பவை, பொதுவாக விலங்குகள் வாழும் பகுதி. அதாவது மனிதர்கள் தங்களின் சுயலாபத்திற்காக, உலகில் உள்ள யாவற்றையும் அழித்து தனதாக்கிக் கொண்ட பொழுது, இந்த விலங்குகளும், அய்ந்தறிவு கொண்டதாக சொல்லப்படும் உயிரினங்களும், தமது வாழ்விட எல்லையைச் சுருக்கிக் கொண்டு தங்களது வாழ்க்கை சூழலுக்கேற்ற நிலப்பரப்பைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு இம்மனிதர்களிட மிருந்தும், அவர்களின் சமூக வாழ்க்கையிலிருந்தும் விலகி ஒதுங்கி காடுகளில் வாழ்கின்றன.
அவற்றுக்கென்று தனிக் குணங்கள் உண்டு. அவற்றுக்கு எந்த ஒரு இலட்சியமோ, குறிக்கோளோ, அதனை அடைய வேண்டிய வழிமுறைகளோ கிடையாது.
அவற்றுக்குத் தேவை _ பசியாறுவதற்கான உணவு! அதனை கைக்கொள்ள பதுங்கியும், பாய்ந்தும் சென்று பிடித்து இரையைக் கொன்று பசியாறுகின்றன. ஏனெனில், அதன் இயல்பு _ குணம் அத்தகையது.
எதனையும் பகுத்தறியும் உணர்வோ, இவற்றை எதிர்கொள்வது எப்படி என்ற அறிவோ அவற்றுக்குக் கிடையாது.
ஆனால், ஆறறிவு உள்ளதாக கூறிக்கொள்ளும் மனிதர்களுக்கு இவை யாவற்றையும் பகுத்து அறியக்கூடிய ஆற்றலும் அறிவும் உள்ளது. இவ்வளவு அறிவுடையவன் செய்ய வேண்டியது என்ன?
நமது நாட்டைப் பொறுத்தவரை மனிதர்களும், இரைக் கொல்லிகளான சிறுத்தை, புலி போன்ற விலங்குகளும் அருகருகே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
இதனிடையே, அவ்வுயிர்களின் வாழ்வாதாரமான உணவுப் பாதைகள் மனிதர்களால் மறிக்கப்பட்டு நகரமயமாக்கப்படும்பொழுதும், தமக்கான உணவு தமது வாழ்விட எல்லையில் கிடைக்காதபொழுதும் தமது அன்றாட உணவுத் தேவைகளுக்காகவும், நீருக்காக நீர்நிலைகளைத் தேடியும் நகரங்களிலும் மனிதர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட அதன் வாழ்விடப் பகுதிகளிலும் அவை உலாவர ஆரம்பிக்கின்றன.
உலாவருகின்றன என்று சொல்வதைவிட தம் வலசைப் பாதைகளும், வாழ்விடமும் மறிக்கப்பட்ட காரணத்தால் வழி தெரியாமல் ஊருக்குள் நுழைந்து, திக்குத் தெரியாமல் அக்காட்டுயிர்கள் தடுமாறுகின்றன என்பதுதான் உண்மை நிலை.
இதுபோன்ற சமயங்களில்தான் மனித _ விலங்கு மோதல்கள் நடைபெறுகின்றன.
தமக்கான உணவு தனது வாழ்விட எல்லைகளில் கிடைக்காதபொழுது, அக்காடுகளின் அருகாமையிலோ அல்லது காடுகளின் வேறு பகுதியிலோ அமைந்திருக்கும் கிராமங்களில் வசிக்கும் ஆடு, மாடு, நாய்களைக்கூட இவை தாக்குவதுண்டு.
சமயங்களில் மனிதர்களையும் அவை தாக்குகின்றன. மனிதர்களும் அவற்றை விரட்டிச்சென்று தாக்கிக் கொல்கிறார்கள் அல்லது அரசாங்கமே மக்களின் பாதுகாப்பு என்ற பெயரில் சிறப்பு அதிரடிப் படையினரின் மூலமோ அல்லது குறிபார்த்து சுடுவதில் வல்லமையுள்ள வேட்டையாளர்களை நியமித்தோ அவர்களுக்கு எல்லா உதவிகளையும் துப்பாக்கி, தோட்டா, வாகனங்கள், படையணிகளையும் அளித்து பல நாட்களாக வியூகங்கள் அமைத்து அவ்விலங்குகளை சுட்டுக்கொல்கிறார்கள். இப்படியாகத்தான், அவ்னி என்ற பெண் புலி சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 13 நபர்களை அப்பெண் புலி கொன்றுவிட்டதாம், ஆதலால் குறிபார்த்து சுடுவதில் வல்லவரான அஸ்கர் அலி என்பவரை வரவழைத்து 32 மாதங்களாக 150 நபர்களைக் கொண்ட குழு ஒன்று நவீன ஆயுதங்களோடு அப்பெண்புலியை கண்டுபிடித்து சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இத்தனைக்கும் அவ்னி, 10 மாதங்களே உடைய இரண்டு குழந்தைக-ளுக்குத் தாய்.
இன்று அச்சிறு புலிக்குட்டிகளின் நிலை என்ன? அதன் எதிர்காலம்?
இது முறையான செயலா? சரியா இவர்கள் செய்வது?
இவர்களுக்கும், வேட்டைக்காரர்களுக்கும் என்ன வேறுபாடு?
வேட்டைக்காரர்கள் எவ்வித வரம்புமின்றி இயற்கையை அழிக்கிறார்கள். ஆனால், அரசாங்கமோ சட்டத்தின் துணைக்கொண்டு சுட்டுக்கொல்கிறது. நமது நாட்டு அரசியல் சட்டம் இப்படித்தானா சொல்கிறது?
என்ன சொல்கிறது?
It Shall be the duty of every cititzen of Indian to protect and improve the Natural Environment including Forests, Rivers, Lakes and Wildlife and to have compassion for living creatures.
51 A(G)
இந்திய வனப் பகுதிகளில் 2,690 கிராமங்கள் உள்ளன. 1,70,379 கிராமங்கள் வனங்களையே தங்களின் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளன.
ஏறக்குறைய 30 லட்சம் மக்கள் வனங்களையே வசிப்பிடமாகக் கொண்டு மேற்கண்ட கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கு காட்டுயிர்களால் பொருளிழப்போ, உயிரிழப்புகளோ ஏற்படுவதில்லையா?
அப்படி ஏதேனும் இழப்புகள் ஏற்படும்பட்சத்தில் அம்மக்கள் குய்யோ, முறையோ என கூக்குரலிட்டு அரசையும் அரசு சாதனங்களையும் அழைப்-பதில்லையே ஏன்? உண்மையை அம்மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
இயற்கையின் படைப்புகளில் விலங்குகளும், பறவைகளும், பூச்சிகளும், காட்டுயிர்களும் ஒரு சமநிலையை ஏற்படுத்துகின்றன.
அதில் மனித சமூகத்திற்கென்று எதுவும் முதன்மை இல்லை என்பதை அறிந்திருப்பதால்தான் அக்காட்டுயிர்களுக்கு எவ்வித இடையூறும் செய்யாமல் அவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து அதனுடன் இணைந்து வாழ்கிறார்கள்.
இப்புரிதல் அம்மக்களுக்கும் சரி, அவ்வுயிர்களுக்கும் சரி வழிவழியாக இயற்கையின் மூலமாக உணர்த்தப்பட்டு, அவ்வியற்கையோடு இணைந்தும் இயைந்தும் வாழ்ந்து வருகிறார்கள்.
அங்கு இழப்புகள் என்பது விலங்குகளுக்கும் உண்டு, மனிதர்களுக்கும் உண்டு என்பதை யாரும் மறக்கக் கூடாது.
இதை அரசுகளும் உணர்ந்து இரு சாராருக்கும் இணக்கமானதோர் சூழலை ஏற்படுத்தித் தர வேண்டுமே ஒழிய, மக்களை காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் காட்டுயிர்களை சுட்டுக் கொல்வதும், இயற்கையை அழிப்பதும் ஏற்றுக் கொள்ளக்கூடிய செயல் அல்ல.
இதை அரசும், மக்களும் முழுமையாக உணர்ந்து செயல்பட்டால் இனிவரும் காலங்களில் வனம் வளமானதாக இருக்கும், மனித சமூகம் நலம் மிக்கதாக வாழும்.