உங்கா, சிங்கா, மங்கா
விழியன்
பள்ளி முடித்துவிட்டு மகிழ்வாக வீடு நோக்கி வந்துகொண்டிருந்தது உங்கா. உங்கா வெள்ளையும் ஆங்காங்கே கறுப்பு வட்டங்களையும் கொண்ட குட்டி முயல். சில நிமிடங்கள் முன்னர் தான் மங்காவும் சிங்காவும் உங்காவும் ஒன்றாக நடந்து வந்தனர். இப்போது உங்கா மட்டும் தனியாக நடக்கின்றது; மற்றவர்கள் வேறு திசையில் அவர்கள் இல்லத்திற்குச் சென்றுவிட்டனர். அண்மையில் கேட்ட இசையை உதட்டில் பாடிக்கொண்டே நடந்தது உங்கா.
அப்போது பெரும் இரைச்சல் கேட்க, நின்றது உங்கா. அதற்குப் பிடித்தமான குழந்தை ரியாவின் வீட்டில் இருந்து தான் அந்த சத்தம் கேட்டது. ரியா இப்போதுதான் பள்ளிக்குச் செல்ல துவங்கி இருக்கின்றாள். அவள் அம்மா அவளை திட்டிக்கொண்டு இருந்தார்கள். சாப்பாட்டு டப்பாவை ஒழுங்கா எடுத்துட்டு வரமாட்டியா? உன்னுடையது என்ன நிற டப்பா? அதுகூட நினைவில்லையா உனக்கு என காச் மூச் என கத்தினார். பின்னர் போன் எடுத்து, பள்ளி நிர்வாகிகளிடம் கடிந்துகொண்டார் இது கூட சரியா செய்ய மாட்டீங்களா? என கத்தினார். உங்கா இதை எல்லாவற்றையும் ஒரு கண்ணாடி ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டு இருந்தது. ரியா ஜன்னலுக்கு அருகே வந்து உங்காவை பார்த்தாள். உங்கா புன்னகைத்தது; ரியாவும் புன்னகைத்தாள்.
உங்கா தன் இல்லம் நோக்கி நடந்தது. உங்காவின் அப்பாவும் அம்மாவும் வீட்டில் காத்திருந்தனர். அதன் வீட்டிற்குள் நுழையும் முன்னர் வாசலில் இருந்த பலகையில் உங்கா உள்ளே என்று மாற்றிவிட்டு சென்றது. முயல்களின் வீடுகளில் எல்லாம் அந்தப் பலகை தொங்கும். அதில் அந்த பொந்திற்குள் யாரெல்லாம் வசிக்கின்றார்கள் என்ற பெயர் பட்டியலும், அவர்கள் பொந்திற்குள் உள்ளே இருக்கின்றார்களா வெளியே இருக்கின்றார்களா என்ற தகவலும் இருக்கும். வீட்டிற்கு வெளியே செல்பவர்கள் வெளியே என்று அட்டையை அவர்கள் பெயருக்கு அருகே வைத்துவிட்டு செல்வார்கள்.
“உங்கா, இன்று பள்ளியில் மகிழ்வாக இருந்தாயா? என்று பேச்சை ஆரம்பித்து அன்றைய தினம் நடந்ததை எல்லாம் பெற்றோர் இருவரும் கேட்டறிந்தனர். கொஞ்ச நேரத்தில், என் எலித்தோழனுடன் ஒளிந்து விளையாடும் விளையாட்டு விளையாடி வருகின்றேன் என உங்கா கிளம்பிவிட்டது. திரும்பி வரும்போது தான் அந்த செய்தி தெரிந்தது. உங்காவின் மதிய சாப்பாட்டு டப்பாவும் சிங்காவின் டப்பாவும் மாறிவிட்டது. அம்மா திட்டுவார்களோ என பயந்தது உங்கா. உங்கா, உன் நண்பன் சிங்காவிற்கு என்ன உணவு ரொம்ப பிடிக்கும்? என்றது அம்மா.
அவனுக்கு கேரட் கட்லெட் என்றால் உசுரு என்றது உங்கா. அம்மா, நீங்க ஏன் திட்டவே இல்லை என்று கேட்டதற்கு அம்மா சிரித்தபடியே சென்றுவிட்டது.
மறுநாள் காலையில் உங்காவின் அப்பா சிங்காவிற்காக கேரட் கட்லெட் செய்துகொடுத்தது. வாசனை அள்ளியது. பள்ளிக்கு அதனை எடுத்துச்சென்றது. வகுப்பறைக்குள் நுழைந்ததும் டேய், என் டப்பாவை மாற்றி எடுத்துட்டு போயிட்டியா? உனக்கு பிடிச்ச கேரட் கட்லெட்டை என் அப்பா உனக்காக செஞ்சிருக்காரு என்றது. நண்பர்கள் மூவரும் எப்போது மதிய இடைவேளை வருமென காத்திருந்தனர். டிரிங்… என்ற மதிய இடைவேளை விடப்பட்டது. நண்பர்கள் எல்லோரும் கூடி அமர்ந்து கொண்டனர். ஆசிரியர் ஒழுங்காக சாப்பிடுகின்றார்களா என பார்த்துக்கொண்டே வந்தார். எல்லோரும் பகிர்ந்து உண்ணுங்கள் எனச் சொல்லிக்கொண்டே சென்றார்.
மங்காவிற்கு உங்காவின் அப்பா செய்த கேரட் கட்லெட் அவ்வளவு பிடித்திருந்தது. மதியம் எல்லோரையும் உறங்க வைத்தார்கள். ஆனால் நண்பர்கள் மூவரும் குறைந்த ஓசையில் குசுகுசுவென பேசிக்கொண்டே இருந்தார்கள். ஒரு மூன்று முறையேனும் மங்கா தனக்குப் பிடித்த உணவு திராட்சை பொடிமாஸ் என சொல்லி விட்டது. உறங்கி எழுந்ததும் எல்லோரையும் பள்ளி நூலகத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கே சென்றும் மங்கா தித்திக்கும் திராட்சை என்ற புத்தகத்தைக் காட்டி, எனக்கு திராட்சை பொடிமாஸ்னா ரொம்ப பிடிக்கும் உங்கா என்றது. ஒருமணி நேர வாசிப்பிற்கு பின்னர் திரும்ப வகுப்பிற்கு வந்து இல்லங்களுக்கு கிளம்பினர்.
வழக்கம்போல மூன்று நண்பர்களும் ஒரு இடத்தில் கையசைத்து விடைபெற்றார்கள். வீட்டிற்கு சென்றதும் என்ன உங்கா, சிங்காவிற்கு கேரட் கட்லெட் பிடித்து இருந்ததா? என கேட்டது அப்பா முயல். ஓ ரொம்பவே என மகிழ்வாகச் சொன்னது உங்கா.
இரவு உணவின் போது என்ன உங்கா, இன்னைக்கும் சாப்பாட்டு டப்பாவை மாற்றி எடுத்துட்டு வந்துட்டியா? இன்னைக்கு மங்காவின் டப்பா வந்திருக்கு. கொஞ்ச நேரம் யோசித்தது உங்கா. மதியம் சாப்பிட்டு தன் டப்பாவை சரியாக எடுத்து வைத்தேனே எப்படி மாறியது என யோசித்தது. பின்னர் தான் விஷயம் புரிந்தது. அம்மா இது மங்காவின் வேலை தான். மதியத்தில் இருந்து எனக்கு திராட்சை பொடிமாஸ் பிடிக்கும் திராட்சை பொடிமாஸ் பிடிக்கும்னு பத்து முறை சொல்லியது, இதற்குத்தான் போல. நாளைக்கு அந்த டப்பாவில் திராட்சை பொடிமாஸ் செய்திடுங்க என்றது.
மூவரும் மங்காவின் குறும்பினை நினைத்து சிரித்தபடியே இரவு உணவினை முடித்தனர்.