காலப் பயணம் செய்யலாமா?
கால இயந்திரம்
சரவணா இராஜேந்திரன்
காலப்பயணம் _ நாம் எல்லோரும் இந்த வார்த்தையைக் கேட்டிருக்க வாய்ப்புகள் உண்டு. காலம், கடந்து பயணம் செய்யும் கற்பனைக் கதைகளைக் கேட்டிருப்போம். நாம் காலம் கடந்து பயணிக்கலாம். அதாவது இன்று நாம் 2019 பிப்ரவரியில் இருக்கிறோம் என்றால், நாம் 2030-வரை செல்ல அறிவியல் நமக்கு சில வழிமுறைகளைக் கூறியுள்ளது. ஆனால் இன்றைய அறிவியலில் அது நமக்குச் சாத்தியமில்லை. அப்படியே அறிவியலின்படி நாம் 2030க்குச் சென்று விட்டாலும் மீண்டும் 2019க்குத் -திரும்ப முடியாது.
அதாவது பின்னோக்கிச் செல்ல முடியாது. அறிவியலின்படி பின்னோக்கிச் செல்வது சாத்தியமில்லாத ஒன்று, அதனால் தான் தமிழில் இறந்த காலம் என்று அழகாகக் கூறிவிட்டார்கள். இறந்தவர்களை உயிர்ப்பிக்க இயலாது; அதே போல் தான் இறந்த காலத்தை மீண்டும் நாம் கொண்டுவர முடியாது.
ஆனால் நாம் இறந்த காலத்திற்கு எளிதில் பயணம் செய்யும் வாய்ப்பு உள்ளது. அது நாள்குறிப்புகள், நாளிதழ்கள், நூல்களின் வழியாக! இதில் நாள்குறிப்புகளும் நாளிதழ்களும் இறந்த காலத்திற்குப் பயணம் செய்ய அதிக வாய்ப்புகளை நமக்குத் தருகின்றன. நாளிதழ்களைப் பொறுத்தவரை, பொதுவெளியில் அன்று என்ன நடந்தது என்பதை அறிய ஒரு பின்னோக்கிய காலப்பயணம் செல்ல நமக்கு உதவுகிறது. அதேபோல், நம்முடைய வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை அறிய நம்முடைய நாள்குறிப்புகள் உதவும். இன்றும் பல தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றில் நடந்த நிகழ்வுகளை எப்படி அறிகிறோம் என்றால் அவர்களது நாள்குறிப்பின் மூலம்தான்.
தந்தை பெரியாரின் நாள்குறிப்புகள் மூலம் அந்த மாபெரும் தலைவரின் வாழ்க்கை எவ்வளவு போராட்டம் நிறைந்தது! அந்தப் போராட்டத்தை எப்படி எதிர்கொண்டு எதிர்நீச்சல் போட்டுள்ளார் என்பதை உலகம் அறிந்து வியக்கிறது. நாள்குறிப்பு எழுதுவதை நாம் அன்றாடம் வாழ்க்கையில் ஓர் அங்கமாக எடுத்துக்கொள்ள வேண்டும். நான் என்னுடைய கல்லூரி இறுதியாண்டில் இருந்து நாள்குறிப்பு எழுதி வருகின்றேன். இதற்கு ஊக்கமாக இருந்தது என்னுடைய தாத்தாவின் நாள்குறிப்புகள்தான். என்னுடைய தாத்தா கொழும்பில் ஆங்கிலேய வழக்கறிஞர் ஒருவரிடம் குமாஸ்தாவாக இருந்தவர். சுதந்திரத்திற்குப் பின்பு சில காலம் இங்கிலாந்திற்குச் சென்று பிறகு ஊருக்கு வந்து தங்கிவிட்டார். தான் குமாஸ்தாவாக இருந்த காலத்தில் வழக்குகள் குறித்து நாள்குறிப்புகளை எழுதும் பழக்கம் அவரிடம் இருந்து வந்தது. அதைப் படித்த எனக்கும் தொடர்ந்து நாள்குறிப்பு எழுதும் பழக்கம் உருவானது. நாள்குறிப்பு நம்மை நாமே செம்மைப்படுத்திக் கொள்ள கற்றுகொடுக்கும் ஆசிரியர் போன்றதாகும். நாள்தோறும் நாள்குறிப்பை நாம் எழுத பழகவேண்டும்.