பெரியாரின் விவாதத்திறமை
தந்தை பெரியாரின் கதை
சுகுமாரன்
ஓவியம்: கி.சொ
பெரியாரிடம் விவாதத்தில் ஈடுபட்டு யாரும் வெல்ல முடியாது. அடுக்கடுக்காக கேள்விகள் கேட்பார். சொற்களின் பொருளை விளக்க வேண்டுவார். வழக்கத்தில் உள்ள சொற்களுக்குக் கூட அதற்கென்ன அர்த்தம்? என்பார். நரகம் என்றால் யாருடைய நரகம்? எல்லோருக்கும் ஒரு நரகந்தானா? கடவுள் என்றால் எந்தக் கடவுள்? கடவுள் என்னும் சொல்லுக்குப் பொருள் என்ன? என்று கேட்பார்.
எதிரிகள் கேள்விகள் கேட்டால் அவர்கள் சொற்களைக் கொண்டே அவர்களை மடக்கி விடுவார். பெரியாரின் விவாதத் திறமையை பார்த்துவிட்டு ஒரு சமயம் ராஜாஜி, நல்ல வேளையாக நீங்கள் சட்டப் படிப்புப் படித்து வழக்கறிஞராக வராமற் போனீர்கள். நீங்கள் வழக்கறிஞராக வந்திருந்தால் வழக்கறிஞர்கள் பாடு திண்டாட்டமாகயிருக்கும் என்று சொன்னாராம்.
பெரியார் மலேயா நாட்டிற்குச் சென்றிருந்தபோது ஒரு சம்பவம் நடந்தது. அங்கு ஏற்பாடாகியிருந்த கூட்டத்தில் பெரியார் பேசினார். கூட்டத்தில் ஒரு விவாதம் கிளம்பியது. அமெரிக்கப் பெண் எழுத்தாளர் மிஸ். மேயோ இந்தியாவைப் பற்றி எழுதியது உண்மையா? பொய்யா? என்று சூடாக பெரியாரிடம் கேட்கப்பட்டது.
மிஸ்.மேயோ எழுதியது உண்மைதான் என்றார் பெரியார்.
அதைப் பலர் மறுத்து எழுதியிருக்கிறார்களே? என்று கேட்டார் ஒருவர்.
பெரியார் பதிலளித்தார். மேயோ சொன்னவற்றை யாரும் முழுதும் மறுக்கவில்லை. மிஸ்.மேயோவின் நாட்டிலும் மூடப்பழக்கவழக்கங்கள் இல்லையா என்றுதான் எழுதியிருக்கிறார்கள். நீ மாத்திரம் யோக்கியனா என்றால், இதற்குப் பெயர் மறுப்பு ஆகுமா? ஒப்புக்கொள்வதாகும்.
இவ்வாறு பெரியார் தனது விவாதத்திறமையால் அழகாகப் பேசினார். கேள்வி கேட்டவர் அடங்கிப் போய்விட்டார்.
பெரியாரின் போக்கும் நோக்கும்
பெரியார் 1953ஆம் ஆண்டில் பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம் நடத்தினார்.
1956ஆம் ஆண்டில் இராமர் பட எரிப்புப் போராட்டம் நடத்தினார்.
1965ஆம் ஆண்டு கம்பராமாயண நூலுக்கு தீ வைத்துக் கொளுத்தினார்.
பெரியாரின் போராட்டப் போக்குகள் மக்களைத் திடுக்கிட வைத்தன.
எரிப்பது, உடைப்பது போன்ற போராட்ட முறைகளை பெரியார் தேர்ந்தெடுத்ததற்கு காரணம் உண்டு.
பழமைப்பாசி படிந்துகிடந்த தமிழ் மக்களின் சிந்தனைக் குட்டையைக் கலக்குவதற்கு இப்போராட்ட முறைகளே உதவும் என்று நம்பினார். அப்போது கலங்கிய குட்டை தெளியும் அல்லவா?
பெரியார் கூட்டத்தில் பேசும்போது சில நேரங்களில் மக்களைப் பார்த்து கடும் சொற்களைப் பயன்படுத்துவார். ஒரு தந்தைக்குரிய உரிமையுடன் பேசும் பெரியாரின் நோக்கத்தை மக்கள் புரிந்துகொண்டதால் யாருடைய மனமும் புண்படுவதில்லை.
ஒரு சமயம், கூட்டமொன்றில் பெரியாரைப் பார்த்து ஒருவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். இந்து மதம் வேண்டாம் என்கிறீர்கள். நீங்களாவது ஒரு புது மதம் சொல்லக்கூடாதா?
அதற்குப் பெரியாரின் பதில் இது! நான் புது மதத்தைப் போதிக்க வரவில்லை. ஒழுக்கமாகவும், உண்மையாகவும், பிறரிடத்தில் அன்பாகவும் இருந்தால் போதும் என்று சொல்லுகிறேன்!
கேட்டவர்: இருப்பதை ஒழிப்பதானால் இன்னொன்றைக் காட்ட வேண்டாமா?
பெரியாரின் பதில்: வீட்டிற்குள் அசிங்கம் இருக்கிறது. நாறுகிறது. எடுத்து எறியுங்கள் என்றால் அதற்குப் பதில் அந்த இடத்தில் என்ன வைக்கிறது என்று கேட்கிறீர்களே, சரியா?