தொண்டறம்
தெளிவோம்
கெ.நா.சாமி
முகிலன் எழிலனுக்காகக் காத்துக் கொண்டிருந்-தான். நேரம் மாலை நான்கு மணி. 3.30 மணிக்கெல்லாம் மற்ற நண்பர்கள் வந்துவிட்டிருப்-பார்களே! எழிலனை இன்னும் காணோமே என்று எண்ணமிட்டுக் கொண்டு மாமரத்தடியில் நின்று கொண்டிருந்தபோது தூரத்தில் அவன் வருவது தெரிந்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் மாலை நேரத்தில் நண்பர்கள் கூடி கபடி விளையாடுவது வழக்கம். அதற்காகத்தான் எழிலன் வருகைக்கு முகிலன் காத்திருந்தான். இருவரும் சேர்ந்து போவதே அவர்கள் பழக்கம்.
எழிலன் அருகில் வந்ததும் என்ன எழிலா ஏன் இன்று இவ்வளவு தாமதம்? என்று கேட்டான் முகிலன். எழிலன்: அது ஒன்றுமில்லடா! என் தங்கை இரண்டாவது படிக்கிறாள் இல்லையா! அவளுக்கு ஆத்திச்சூடியில் சில சந்தேகங்கள். அவற்றைக் கேட்டாள். அதைச் சொல்லிவிட்டு வந்தேன். கொஞ்சம் நேரமாயிடுச்சி.
முகிலன்: ஆத்திச்சூடி, அவ்வையார் எழுதியதுதானே!
எழிலன்: ஆமாம்! ஆமாம்!
முகிலன்: எனக்குக் கூடத்தான் அதிலே சில சந்தேகங்கள்.
எழிலன்: என்னடா. நாம் அவற்றையெல்லாம் கடந்துதான் ஏழாம் வகுப்பு வந்துவிட்டோமே!
முகிலன்: ஆமாம். ஆமாம். இரண்டாம் வகுப்பில் நாம் சிறு வயது. அப்போது ஆசிரியர் சொன்னதை அப்படியே படித்தோம். இப்போது அதைவிட சற்று அதிகம் புரிந்துகொள்கிற வயசில்லையா! அதுதான் சந்தேகம்.
எழிலன்: என்ன தான் சந்தேகம்? சொல்லேன்டா!
முகிலன்: இப்போது அதையெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால் கபடிக்குப் போக முடியாது. நேரமாகிவிடும். பிறகு பேசலாம்.
எழிலன்: நாம ரெண்டு பேர் போகலைன்னா விளையாட்டு நின்றா போயிடும். மற்றவர்கள் சேர்ந்து விளையாடத்தான் செய்வார்கள். இப்படி உட்கார்ந்து உன் சந்தேகத்தைத்தான் தீர்த்துக்குவோமே!
முகிலன்: அதுவும் சரிதான். சரி வா, அதோ அந்த வேப்ப மரத்தடியில் உட்கார்ந்து பேசுவோம்.
(இருவரும் சென்று வேப்ப மரத்தடியில் அமர்ந்தனர்.)
எழிலன்: இப்போ சொல்லு. உனக்கு என்ன சந்தேகம்?
முகிலன்: அவ்வை ஆத்திச்சூடியில் அறஞ்செய விரும்பு என்று கூறுகிறார். அதற்கு என்ன பொருள்?
எழிலன்: இதென்னடா பெரிய சந்தேகம். அறம் செய்ய ஆசைப்படு. அடுத்தவருக்கு உதவு என்பதுதான் அர்த்தம். இதுதான் நம்ம ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்தார்கள்.
முகிலன்: உதவி செய்வது என்றால் என்ன?
எழிலன்: இதென்னடா கேள்வி? எத்தனை பேர் எதுவும் இல்லாமல் கையேந்தி நிற்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்வதைத்தான் சொல்கிறார்.
முகிலன்: சரி. அதே ஔவையார் ஏற்பது இகழ்ச்சி என்று சொல்லியிருக்கிறாரே! அதற்கு என்ன அர்த்தம்?
எழிலன்: அடுத்தவரிடம் பிச்சையெடுப்பது கேவலம். பிச்சையெடுக்கக் கூடாது என்று சொல்கிறார்.
முகிலன்: இரண்டையும் நாம் படிக்கிறபோது குழப்பமாக இல்லையா?
எழிலன்: ஆமா. ஏற்பவர் இல்லைன்னா யாருக்கு தருமம் செய்வது, உதவுவது என்ற கேள்வி வருகிறது என்கிறாய் அப்படித்தானே!
முகிலன்: அதேதான். இது முரண்பாடாக இல்லையா? பெரியார் தாத்தா என்ன சொன்னார். எல்லார்க்கும் எல்லாமும் கிடைக்கிற சமதர்ம சமுதாயம் வேண்டும் என்றார். அந்தச் சமுதாயம் அவ்வையார் காலத்திலும் இல்லை. இன்றும் இல்லை. அந்தச் சமுதாயம் அமைய வேண்டும் இல்லையா!
எழிலன்: ஆமாம். ஆமாம். அதற்குத்தான் வீரமணி தாத்தாகூட இந்த அறம் என்ற சொல்லுக்கு ஒரு புது விளக்கம் தந்துள்ளார். முகிலன்: என்ன விளக்கம்?
எழிலன்: தொண்டறம் என்று சொல்லுகின்றார். நம்முடைய தொண்டையே _ சேவையையே நாம் அறமாகச் செய்ய வேண்டும் என்று சொல்கிறார். பொதுவில் தருமம் என்பதுகூட மனிதர்களிடையே பேதம் பார்க்கும் சனாதன தர்மத்தைத்தான் குறிக்குமாம். எனவே அறம் என்றே சொல்வதுதான் சரி.
முகிலன்: எப்போது கேட்டாய்?
எழிலன்: நேற்று வீரமணி தாத்தா பேசிய கூட்டத்துக்கு என் அப்பா அழைத்துப் போனார். அங்கேதான் கேட்டேன்.
முகிலன்: மிகச் சரியான விளக்கம்தான். அறம் என்றால் நல்லன செய்தல். அதில் பலன் எதிர்பார்ப்பில்லாமல் தொண்டறம் செய்தல். நாம் அவர் சொல்வதுபோல் சமுதாயத் தொண்டையே அறமாகச் செய்யப் பழகுவோமே.
முகிலன்: நம் படிப்பு நேரம் போக மீதி நேரத்தில் அப்படி என்ன செய்யலாம் என்பதை இன்னொரு நாள் பேசுவோமா? நேரமாகிவிட்டது போவோம் வீட்டுக்கு.