உழைப்பு
சின்னச் சின்னக் கதைகள்
கதை: மு,கலைவாணன்
ஓவியம் மு.க.பகலவன்
மலை உச்சியில் உயர்ந்த மரம். அதன் கிளையில் ஒரு தேன் கூடு. ஆயிரக்கணக்கான தேனீக்கள் அதை மொய்த்துக் கொண்டிருந்தன.
அந்த வழியே பறந்து வந்த ஒரு தேன் சிட்டு அந்த மரத்தின் கிளையில் அமர்ந்தது.
அருகில் பறந்த தேனீயை அழைத்தது.
இந்த அடையில் இத்தனை தேனீக்கள் தேன் கொண்டு வந்து சேர்க்கின்றனவே இதில் உன் பங்கு எங்கே இருக்கிறது? என்று கேட்டது.
பங்கா அப்படியெல்லாம் எதுவும் கிடையாது
எல்லோரும் சேர்ந்து எல்லோருக்காகவும் வாழ்கிறோம்.
யாரும் யாரையும் ஏமாற்றாமல் உழைக்கிறோம்.
யாரும் சும்மா இருப்பதில்லை.
எனக்கு, உனக்கு என்பதைவிட, நமக்கு என்பதுதானே நல்லது! என்றது தேனீ.
ஆனாலும், ஒரு சந்தேகம். நீங்கள் பாடுபட்டுச் சேர்க்கும் தேனை யாராவது எடுத்துப் போய் விடுகிறார்களே… அப்போது வருத்தமாக இல்லையா உங்களுக்கு? என்று கேட்டது தேன்சிட்டு.
நாங்கள் ஏன் வருந்த வேண்டும்?
ஆயிரம் தேனீக்களின் உழைப்பைச் சுரண்டித் தின்ன நினைப்பவர்கள்தான் வருந்த வேண்டும்.
ஆனாலும் நாங்கள் சேர்த்த தேன் எவ்வளவு காலமானாலும் கெட்டுப் போகாமல் இருந்து நோய் தீர்க்கும் மருந்தாகப் பயன்படுவதை எண்ணிப் பெருமைப்பட்டுக் கொள்வோம்.
இந்தக் காடும் மரங்களும், பூக்களும் இருக்கும்வரை எங்களுக்குக் கவலையே இல்லை.
எனக்கு நிறைய வேலையிருக்கு… பேச நேரமில்லை நான் வருகிறேன் என்ற தன் கடமையை உணர்ந்து பறந்தது தேனீ.
தேனீயின் பேச்சு தேனாய் இனித்தது தேன் சிட்டுக்கு.
உழைப்பின் பெருமையை எடுத்துச் சொன்ன தேனியைப் புகழ்ந்து பாடியபடி பறந்தது தேன் சிட்டு.
“உழைக்கும் கரங்களுக்கே
இனிக்கும் வாழ்க்கை”