இருளில் ஒளிரும் தூக்கணாங்குருவிக் கூடு
சிறுவர் கதை
உமையவன்
கருமலைக்காட்டுல மரங்கள் நிறைய இருக்கும். அரச மரம், ஆலமரம், பூவரச, வாதனா மரம், வேம்பு, இப்படி சொல்லிட்டே போகலாம் அவ்வளவு மரங்கள்.
சூரிய ஒளி காட்டுக்குள்ள வர்றதுக்கே மதியம் ஆகும். அந்த அளவுக்கு மரங்கள் அடர்த்தியாகவும், உயரமாகவும் இருக்கும்.
இதனாலேயே பல பறவைகளும், விலங்குகளும் காலை என்று நினைத்து மதியம்தான் தூங்கி எழும்.
நம்ம ஊரிலும் இப்படி இருந்தா நல்லா இருக்குமுல்ல.
இந்த கருமலைக்காட்டுல உள்ள மரங்களில் கிளி, புறா, மயில், கரிக்குருவி, தூக்கணாங்குருவி உள்ளிட்ட பல பறவைகள் வாழ்ந்து வந்தன.
பறவைகளின் கூடுகளிலேயே தூக்கணாங்-குருவிக் கூடுதான் ரொம்ப அழகா இருக்கும். அப்பா, அம்மா பறவைகள் அவ்வளவு அழகா அந்தக் கூட்டைக் கட்டியிருக்கும்.
காடே அமைதியா இருந்தாலும் பூவரச மரத்தில் மட்டும் எப்பவும் சத்தமும், பரபரப்பும் இருந்துகொண்டே இருக்கும்.
ஏன்னா, அங்கிருந்த தூக்கணாங்குருவிக் குஞ்சுக்கு இப்பதான் இறகு முளைத்து மெல்ல மெல்ல பறக்கத் தொடங்கியிருக்கு. அதுதான் இத்தனை அலப்பறை.
அந்த வழியாக எந்தப் பறவை, விலங்கு வந்தாலும் அவற்றுடன் விளையாடுவதுதான் இந்தக் குருவிக் குஞ்சின் வேலை. அம்மா பறவை, கூட்டில் இருக்கும்வரை அமைதியாக நல்ல புள்ளை மாதிரி இருக்கும். அம்மா பறவை இரைதேடப் போன பிறகு ஒரே ஆட்டம்தான்.
சிறகு முளைத்து பறக்கத் தொடங்கியதிலிருந்து அதன் சேட்டைகள் கொஞ்ச நஞ்சமல்ல.
அந்தப் பூவரச மரத்துக்கடியில் ஓய்வெடுக்க வரும் மான்கள்தான் குருவிக் குஞ்சுக்கு உற்ற நண்பர்கள். மான்களின் கொம்புகளில் அமர்ந்து விளையாடுவது, அவற்றோடு சின்னச் சின்ன சண்டை போடுவது என மகிழ்ச்சியாக இருந்தது குருவிக்குஞ்சு.
அம்மா பறவை இரை கொண்டு வந்ததும் அதை உண்டு பசியாறும். இன்னும் குருவிக்குஞ்சுக்கு தனியாக ரொம்ப தூரம் பறந்து இரை உண்ணத் தெரியாது.
இப்படியே பல நாட்கள் கழிந்தன. குருவிக்குஞ்சு பெரியதாகிவிட்டது என்றாலும், கூட்டைவிட்டு வெளியே போகக் கூடாது என்பது அம்மா பறவையின் கட்டளை. காரணம் அங்கு வேட்டையர்களின் எண்ணிக்கை அதிகம்.
ஆனால், குருவிக்குஞ்சுக்கு கூட்டில் இருக்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அதுவும் கூடு எப்பவும் இருட்டாவே இருக்கும். மதியத்திற்கு மேலதான் கொஞ்ச கொஞ்சமா வெளிச்சம் வரும்.
அன்றைய தினம் மாலை நேரத்துலே குருவிக்குஞ்சு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது அதனுடன் அதே மரத்தில் வசிக்கும் கிளிக் குஞ்சும் சேர்ந்து கொண்டது. இரண்டும் ரொம்ப நேரம் விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது கிளிக்குஞ்சு ஒரு யோசனை சொன்னது.
குருவி நண்பா நாம எங்கேயாவது வெளியே பறந்து போலாமா
என்னது? வெளியவா? அய்யோ, நா வரமாட்டேன், எங்க அம்மா வந்தா திட்டும் என்றது குருவி.
உங்க அம்மா வர்றதுக்குள்ள வந்துர்லாம், வா
இல்லை, இல்லை நா வரமாட்டேன். என்றது குருவி.
அட நா இருக்கன்ல. என்கூட பறந்து பார் எவ்வளவு சூப்பரா இருக்கும்! தெரியுமா? என்று ஆசை வார்த்தைகளைக் கூறியது கிளி.
அப்படின்னா, நாம போயிட்டு சீக்கிரம் வந்தரனும் சரியா? என்றபடி இரண்டும் பறக்கத் தொடங்கின.
மரத்தைச் சுற்றியே பறந்து வாழ்ந்து வந்த குருவிக் குஞ்சுக்கு இந்த உயர, நீண்டப் பறத்தல் ரொம்ப வித்தியாசமாகவும், மகிழ்வாகவும் இருந்தது.
நீண்டு நீண்டு பறந்த பறவைகள் இரண்டும் பக்கத்து ஊரை அடைந்தன.
அங்கிருந்த கொன்றை மரத்தில் இரண்டு பறவைகளும் அமர்ந்து கொண்டன. சற்று கீழே பார்த்த குருவிக்குஞ்சுக்கு ஒரே அதிர்ச்சி…
இத்தனை நாட்கள் பெரும்பாலும் இருட்டையே பார்த்து வந்த குருவிக்குஞ்சுக்கு அந்த வெளிச்சத்தைப் பார்த்ததும் ஆச்சர்யமாகத்தானே இருக்கும்.
டேய்…. கிளி நண்பா அங்க மட்டும் எப்படி வெளிச்சம்? என்றது.
இது கிளிக்கும் புதியதுதான்.
அதுவா, எனக்கு தெரியலைடா என்றது
ஆனால், குருவிக்குஞ்சுக்கு அதைப் பற்றி தெரிந்தாக வேண்டும். அதேமாதிரி நம்ம கூட்டுலையும் வெளிச்சம் கொண்டுவர வேண்டும் என்ற ஆசை. ஆனால், எப்படி என்று மட்டும் தெரியவில்லை.
சரி, வா நேரமாச்சு போகலாம் என்றது கிளி. இரண்டும் தங்கள் கூட்டை நோக்கி பறந்து சென்றன.
குருவிக்குஞ்சு பயந்துகொண்டே கூட்டை அடைந்தது. நல்லவேளையாக அம்மா பறவை வரவில்லை.
சரி, நண்பா நாளை சந்திப்போம் என்றபடி இரண்டும் தத்தமது கூட்டிற்கு சென்றுவிட்டன.
சற்று நேரத்திற்குள் அம்மா பறவை கூட்டிற்குள் வந்தது. குருவிக்குஞ்சுக்கு ரொம்ப புடிச்ச சோளத்தை இரையாகக் கொண்டு வந்து ஊட்டிவிட்டது. ஆனால், குருவிக்குஞ்சு அதை விருப்பமில்லாமல் சாப்பிட்டது. இதைப் பார்த்த அம்மா பறவை உனக்கு என்ன ஆச்சு?
ஏன் ஒரு மாதிரியா இருக்கிற? உடம்பு சரியில்லையா? என்றது.
இல்லம்மா, அது வந்து, நானும் கிளியும் பக்கத்து ஊருக்குப் போனோமா, அங்க ஒரு இடத்துல வெளிச்சமா இருந்துச்சு. அதனால அங்க, இருட்டே இல்லை.
நம்ம வீட்டுக்கு எப்பம்மா அப்படி வெளிச்சம் வரும்? என்றது குருவிக்குஞ்சு.
என்னது, பக்கத்து ஊருக்குப் போனிங்களா, நீ என்ன சொன்னாலும் கேட்க மாட்டியா? என்று திட்டியது அம்மா பறவை.
இப்ப குருவிக்குஞ்சு ரொம்ப சோகமாயிடுச்சு.
சரி, சரி அம்மா திட்டமாட்டேன். இந்தா இத சாப்பிடு. இரவு சாப்பிடாம படுக்கக் கூடாது என்றது.
இல்லம்மா, எனக்கு எதுவும் வேண்டாம். எனக்கு இப்பவே வெளிச்சம் வேண்டும் என்றது பிடிவாதமாக.
நம்ம கூட்டுல எல்லாம் வெளிச்சத்தைக் கொண்டுவர முடியாது. அதெல்லாம் மனிதர்களால் மட்டுமே முடியும் என்றது.
அதெல்லாம் எனக்குத் தெரியாது. என்னாலே இதுக்குமேல இருட்டுல இருக்க முடியாது. நா அங்கேயே பறந்து போறேன் என்று வெளியே செல்ல முற்பட்டது குஞ்சுக்குருவி.
அம்மா பறவைக்கு ரொம்ப அதிர்ச்சியா போயிடுச்சு.
நீ எங்கேயும் போகாதே இங்கேயே இரு. நான் போய் எப்படியாவது வெளிச்சத்தைக் கொண்டு வர்றேன் என்று சொல்லிவிட்டு கூட்டைவிட்டு வெளியே வந்து அந்த மரத்தில் அமர்ந்து கொண்டது.
அம்மா குருவிக்கு என்ன பண்றதுன்னே தெரியலை. வெளிச்சத்துக்கு எங்கே போறதுன்னு தெரியாம யோசனை செய்தபடியே இருந்துச்சு.
அந்த நேரம் பார்த்து ஒரு மின்மினிப் பூச்சி அதன் முன் பறந்து சென்றது. அம்மா குருவிக்கு ஒரே சந்தோசம். அதப்புடுச்சு தன் கூண்டுக்கு கொண்டு சென்றது.
தன் கூண்டுக்குள் வெளிச்சம் வருவதைப் பார்த்து சந்தோசப்பட்டது குருவிக்குஞ்சு. தான் அடம் பிடித்ததற்கான தாயிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டது.
ஆனால், குருவிக்குஞ்சின் சந்தோசம் ரொம்ப நேரம் நிலைக்கல. கொண்டுவந்த மின்மினி மறுபடியும் வெளியே பறந்து போயிடுச்சு.
வெளிச்சம் கிடைத்தும் அதைத் தக்க வைக்க முடியலையே என்று வருத்தப்பட்டது அம்மா குருவி.
என்ன பண்ணலாம் என்று யோசித்தபோது ஒரு வழி கிடைத்தது. உடனே வெளியே போய் கொஞ்சம் களிமண்ணை எடுத்து வந்து கூட்டுக்குள் வைத்தது அம்மா குருவி.
அதன் பின்பு, மறுபடியும் வெளியே போய் ஒரு மின்மினிப் பூச்சியை பிடித்து வந்து அந்த களிமண்ணில் ஒட்ட வைத்தது. இப்போது அந்த மின்மினியால் எங்கேயும் பறந்து போக முடியவில்லை.
மின்மினியின் வெளிச்சம்கூட நிறைய இருந்தது. குருவிக்குஞ்சுக்கு ஒரே மகிழ்ச்சி. அம்மா குருவி கொண்டு வந்த சோளத்தை இப்போ உண்டு மகிழ்ந்தது. தன் ஆசையை உடனடியாக நிறைவேற்றிய தன் அம்மாவுக்கு நன்றி சொன்னது.
அடுத்த நாள் காலை புது வெளிச்சத்தோடு விடிந்தது குருவிகளின் விடியல்.
அன்றிலிருந்து அம்மா குருவி, தான் இரை தேடப் போகும்போது மின்மினியை களிமண்ணில் இருந்து எடுத்து விட்டுவிடும். மாலை இரை கொண்டு வரும்போது மீண்டும் இன்னொரு மின்மினியைக் கொண்டு வரும்.
பிறகு, களிமண் தேவைப்படவில்லை, குருவிக்குஞ்சின் ஆசைக்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மின்மினிப் பூச்சி வந்து வெளிச்சம் தருவதாக மகிழ்வுடன் ஒப்புக் கொண்டன.
தன் குஞ்சுக்கு இரை தேடும்போதும் மின்மினிக்கான உணவையும் சேகரித்துக் கொண்டு வரும் அம்மா பறவை. அம்மா அனைவருக்குமான அம்மாதானே.