எப்போது வேண்டுமானாலும் படிக்கலாமே!
தேர்வுக்குத் தயாராகும் மாணவ மாணவிகள் அதிகாலையில் படித்தால் மனதில் நன்றாகப் பதியும். இத்தகைய எண்ணத்தில் பல வீடுகளில் காலை நேரத்தில் மாணவர்களைப் படிக்க வைப்பதற்காக பெற்றோர் பல வழிகளையும் கையாள்கிறார்கள்.
ஆனால், இது எல்லா மாணவர்களுக்கும் பொருந்துமா எனக் கேட்டால் இல்லை என்பதே மருத்துவர்களின் பதில். ஒவ்வொரு மனிதனக்குள்ளும் பயோ கிளாக் எனப்படும் உயிரியல் கடிகாரம் இயங்குகிறது. மனிதன் பிறந்த நொடி முதல் அவனது அக, புறக் காரணிகளைக் கொண்டு மனிதனின் மனநிலை, உடல்நிலை போன்றவற்றை நிர்ணயிப்பதில் பெரும்பங்கு வகிக்கும் இக்கடிகாரம் சில மனிதர்களை அதிகாலையிலும், சிலரைப் பின்னிரவிலும் அல்லது முன்னிரவிலும் உற்சாகமாக வைத்திருக்கிறது. அப்படிப்பட்ட உற்சாக மனநிலையில் இருக்கும்போது மனிதனின் செயல்திறனும், கற்கும் திறனும் மிக அதிகமாக இருக்கும்.
பெற்றோர்களே… அதிகாலையில் படிப்பது மட்டுமே நன்மை என்று கட்டாயப்படுத்துவதை விடுத்து மாணவர்களின் வசதிக்கு ஏற்ப படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொடுங்கள். படிக்கும் நேரத்தை முடிவு செய்ய குழந்தைகளின் கற்கும் திறனை பல்வேறு நேரங்களிலும் சோதித்து, சிறப்பாக கற்கும் நேரத்தைத் தேர்ந்தெடுங்கள்.
-மகிழ்
வருங்கால விஞ்ஞானி!
தருமபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்த நித்தியன் ஊற்றங்கரையில் உள்ள அதியமான் பப்ளிக் ஸ்கூலில் எட்டாம் வகுப்பு படிக்கிறார். அண்மையில் இஸ்ரோ ’Space Tourism’ என்ற தலைப்பில் ஆங்கில கட்டுரைப் போட்டியை நடத்தியது. சுமார் 200 பேர் இந்தப் போட்டியில் கலந்துகொண்டனர். அதில் ஜூனியர் பிரிவில் மாநில அளவில் முதல் இடம் பிடித்தார் நித்தியன்.
அதன் பயனாக, கடந்த அக்டோபரில் ஒரு நாள் முழுக்க குடும்பத்துடன் இஸ்ரோவைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது என்கிறார் நித்தியனின் தந்தை சௌந்தர்ராஜன்.
இஸ்ரோவுக்குள்ளே எங்க செல்போனை எல்லாம் வாங்கி வெச்சுட்டாங்க. ராக்கெட்டை எப்படி தயார் செய்வாங்க. அதுக்கு என்னென்ன தேவைனு சொன்னாங்க. அங்கே போயிட்டு வந்ததும், வருங்காலத்தில் அறிவியலாளர் ஆகி நிறைய சாதிக்கணும்னு முடிவெடுத்திருக்கேன் என உணர்வு பொங்கக் கூறியிருக்கிறார் நித்தியன். நித்தியனின் லட்சியம் வெற்றிபெற வாழ்த்துவோம் பிஞ்சுகளே!