நூற்றாண்டு காணும் அன்னை
வரலாறு
வை.கலையரசன்
உலக வரலாற்றில் ஒரு நாத்திக மக்கள் இயக்கத்தின் தலைமையேற்று திறம்பட நடத்திய முதல் பெண்மணி அன்னை மணியம்மையார். உலகின் ஒரே நாத்திக நாளேடான விடுதலை நாளிதழைப் பதிப்பித்து அதில் வெளிவந்த சில படைப்புகளுக்காக நீதிமன்றம் வரை சென்றவர் அவர்.
அன்னை மணியம்மையார் 1920ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் நாள் வேலூரில் பிறந்தவர். இவரது தந்தை கனகசபை, பெரியாரின் தொண்டராவார். தமது பள்ளிக் கல்வியை வேலூரில் முடித்த அன்னை மணியம்மையார், குலசேகரப்பட்டினத்தில் சி.டி.நாயகம் கல்லூரியில் புலவர் பட்டப் படிப்பினைப் படித்தார். உடல்நலம் சரியில்லாமையால் தேர்வு எழுதவில்லை.
1943ஆம் ஆண்டு தந்தை பெரியாரிடம் தொண்டு செய்வதற்காக வந்தார். பெரியாரின் சுற்றுப் பயணத்தில் உதவியாளராக இருந்து தந்தை பெரியாரின் உரைகளைத் தொகுத்து எழுதுதல், புத்தகங்களைப் பரப்புதல் போன்ற பணிகளைச் செய்து வந்தார். 1948ஆம் ஆண்டு அன்றைய காங்கிரஸ் அரசு இந்தியைத் திணித்ததைக் கண்டித்து தந்தை பெரியாரின் தலைமையில் திராவிடர் கழகம் போராட்டங்களை, மறியல்களை நடத்தியது. அந்தப் போராட்டத்தில் கும்பகோணத்தில் பங்கேற்று சிறைசென்றார்.
தமக்குப் பின் தமது சொத்துகள் மக்கள் அறப்பணிகளுக்குப் பயன்பட வேண்டும் என்று கருதிய தந்தை பெரியார், அந்தச் சொத்துகளை ஓர் அறக்கட்டளை மூலம் ஏற்பாடு செய்து தன்னலமற்ற தமது உதவியாளரான அன்னை மணியம்மையாரிடம் ஒப்படைக்க வேண்டும் என எண்ணினார். அந்தக் காலத்தில் பெண்களுக்கு சொத்துரிமை இல்லை. எனவே, அன்னை மணியம்மையாரை வாரிசாக நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தக் காரணத்தால் மணியம்மையாரை திருமணம் செய்து கொண்டால் தனக்குப் பின்னும் தமது சொத்துகள் தனக்கு நம்பிக்கைக்குரிய அன்னை மணியம்மையாருக்குச் சென்றடையும் அதன் மூலம் மக்கள் பணிக்கு அவை பயன்படும் என்பதால் 1949ஆம் ஆண்டு திருமணப் பதிவை செய்து சட்டப்படியான தமது வாரிசாக்கினார்.
அன்னை மணியம்மையாரும் அந்த நம்பிக்கையைக் காப்பாற்றி தந்தை பெரியாரின் அனைத்து சொத்துகளையும் பொது அறக்கட்டளையாக்கி பள்ளிகள், குழந்தைகள் இல்லம் உள்ளிட்ட நிறுவனங்களை உருவாக்கி வளர்த்தார். இன்று அந்த நிறுவனங்கள் பல்கலைக்கழகம் அளவிற்கு வளர்ந்து மக்களுக்குப் பயனைத் தருகின்றன.
தொடர்ந்து அன்னை மணியம்மையார் தந்தை பெரியாரின் அவரது உடல்நலத்தைப் பேணிப் பாதுகாத்தார். உணவுகள் அவரது உடல்நலத்தை பாதிக்காவண்ணம் பக்குவமாகச் சமைத்துத் தந்து, செவிலித்தாயாய் இருந்து பாதுகாத்தார்.
1958ஆம் ஆண்டு தந்தை பெரியார் ஜாதி ஒழிப்புப் போராட்டம் பற்றிய உரைக்காக வழக்கு தொடரப்பட்டு சிறையில் இருந்தார். அப்போது திராவிடர் கழகப் பணிகளைத் தீரமுடன் கவனித்தார் அன்னை மணியம்மையார். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட இரண்டு தோழர்கள் சிறையில் இறந்துவிட்டனர். சிறை நிர்வாகம் அவர்களது உடலைத் தராமல் சிறையிலேயே அடக்கம் செய்துவிட்டது.
இதனைக் கண்டு கொந்தளித்த அன்னை மணியம்மையார் முதலமைச்சர் காமராசரை நேரில் சந்தித்துப் பேசி இறந்த தோழர்களின் உடல்களைத் தோண்டி எடுக்கச் செய்து, திருச்சியில் மாபெரும் ஊர்வலத்தை நடத்தி அடக்கம் செய்தார்.
திருச்சியில் நாகம்மையார் குழந்தைகள் இல்லமும், பெரியார் தொடக்கப் பள்ளியும் உருவாகக் காரணமாக இருந்தார். எப்போதும் ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுத்து தன்னுடனேயே வைத்து வளர்த்தார்.
இரண்டு முறை விடுதலையில் வெளியான கட்டுரைகளுக்காக நீதிமன்றம் சென்றார்.
தந்தை பெரியார் அவர்களின் மறைவிற்குப் பின் திராவிடர் கழகத்திற்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாத்திக இயக்கமான திராவிடர் கழகத்தை யாருக்கும் அஞ்சாமல் சமரசமில்லாமல் நடத்தினார்.
இராவண லீலா நடத்திய போதும், இந்திய ஜனநாயகத்தின் மிக முக்கியமான ஆபத்துக் காலகட்டமான அவசர நிலைக் காலத்திலும் அன்னையாரின் வீரம் உலகுக்குத் தெரிந்தது. தனது 59 ஆம் அகவையில் 1978 மார்ச் 16 அன்று மறைந்த அன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு 2019 மார்ச் 10 முதல் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படும் என்று ஆசிரியர் தாத்தா கி.வீரமணி அவர்கள் அறிவித்துள்ளார். கொண்டாடுவோம் அவர் தொண்டறத்தையும் வீரத்தையும்!