பெரியாரும் பெண் விடுதலையும்
தந்தை பெரியாரின் கதை
சுகுமாரன்
ஓவியம்: கி.சொ
பெரியார் தஞ்சாவூரில் ஒரு கூட்டத்தில் பேசச் சென்றிருந்தார்.
பெரியார் மேடையில் அமர்ந்திருந்தார். அப்போது ஓர் இளம் பெண் வந்தார். பெரியாரை வணங்கினார்.
அப்போது யாரும் எதிர்பார்க்கவில்லை. அந்தப் பெண் கை நிறைய பணத்தை எடுத்துப் பெரியாரிடம் நீட்டினாள்.
அய்யா, இது என் முதல் மாதச் சம்பளம். திராவிடர் கழகத்திற்கு நிதியாகத் தருகிறேன் என்றாள்.
பெரியார் வாங்க மறுத்து,
முதல் மாதச் சம்பளத்தை தந்தையிடம் கொடு அம்மா. அதுதான் சரி என்றார்.
பெண்களை படிக்க அனுப்புங்கள் என்று நீங்கள் செய்த பிரச்சாரத்தை கேட்டுத்தான் என் பெற்றோர் என்னை டாக்டருக்குப் படிக்க வைத்தனர். அதனால் நீங்கள்தான் எனக்கு தந்தை போன்றவர் என்றார் அந்தப் பெண். நெகிழ்ந்துபோனார் பெரியார்.
இந்த நிகழ்ச்சிபோல் எத்தனையோ உண்டு.
பெண் அடிமைத்தனத்தை ஒழிக்க பெரியார் அயராது பாடுபட்டார்.
ஆண் மக்களைளப்போல் பெண் மக்களும் படிக்க வேண்டும். வேலைக்குப் போகவேண்டும் என்றார்.
பெண் பிள்ளைகளுக்குக் கும்மி, கோலாட்டங்கள் முதலியவற்றை ஒழித்துவிட்டு, ஓடவும், குதிக்கவும், தாண்டவும், குஸ்தி போடவும் சொல்லிக் கொடுத்து ஆண் பிள்ளைகளுக்கு உள்ள பலம், தைரியம் உண்டாக்க வேண்டும் என்று பெரியார் எழுதினார்.
கிராப் வெட்டிக்கொள்ளும் பெண்களுக்கு ரூ.500/_ பரிசு தரப்படும் என்று பெரியார் அறிவித்தார். கூந்தலை நீளமாக வளர்ப்பது தொல்லையைத் தருவது என்பது பெரியாரது கருத்து.
உடையில் கூட ஆண் _ பெண் வித்தியாசம் கூடாது என்றார். நாகம்மையாரை லுங்கி உடுத்த வைத்தார். பெயரில் கூட வித்தியாசம் கூடாது என்றார்.
பெண்கள் முன்னேற்றம் குறித்து தந்தையைப் போல் கவலைப்பட்டவர் _ சிந்தித்தவர் பெரியார். அதனால்தான் பெண்கள் மாநாட்டில் அவருக்கு பெரியார் என்ற பட்டம் வழங்கப்பட்டது. மிகவும் பொருத்தம் தானே?
யார் அந்த பெண்?
ஈரோடு ரயில் நிலையம்.
திருச்சி செல்ல ரயில் நின்றுகொண்டிருந்தது. பெரியார் உள்ளே அமர்ந்திருந்தார். அப்போது பெரியாரின் நண்பர் அங்கு வந்தார். பெரியாரை பார்த்ததில் நண்பருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. நண்பருக்கு பெரியாரை உபசரிக்க வேண்டுமென்று ஆசை.
பெரியாருக்குப் பிடித்தமானது அசைவ உணவு, உடனே அங்கே மீன் பொரியலையும், கோழி வறுவலையும் வரவழைத்தார். பெரியாருக்கு மறுக்க மனம் வரவில்லை.
பெரியார், மீன் பொரியலையும், கோழி வறுவலையும் ஒரு பிடி பிடித்தார்.
பெரியாருக்கு வயிற்று வலி வந்துவிட்டது. நண்பர் ஒரு சிறுவனை அழைத்து ஸ்பென்சர் சோடா வரவழைத்துக் கொடுத்தார். பெரியார் வலியால் சிரமப்பட்டார்.
அப்போது பின்னல் சடை போட்ட ஒரு பெண் அங்கு வந்தார். பெரியாரை, கோழி வறுவல் ஏன் சாப்பிட்டீர்கள்? என்று கண்டிப்பு கலந்த குரலில் கேட்டார்.
நண்பர் வற்புறுத்தினார் என்றார் பெரியார்.
நண்பருக்குத் தெரியுமா, உங்கள் உடல்நிலை? என்றார் அந்தப் பெண்.
சரி, தூங்குங்கள் என்று கூறிவிட்டு அந்தப் பெண் வேறொரு பெட்டியில் ஏறிக்கொண்டார்.
ரயில் திருச்சி வந்ததும், பெரியாரைக் காண வந்தார் அந்தப் பெண்.
மணி, நன்றாகத் தூங்கினியா? என்று கேட்டார் பெரியார்.
ஓ! அங்க வசதியாக இருந்தது. நன்றாகத் தூங்கினேன் என்று பொய் சொன்னார் அந்தப் பெண். உண்மையில் ரயில் ஒவ்வொரு நிலையத்திலும் நிற்கும்போதும் ஓடிவந்து பெரியார் தூங்குகிறாரா, வலியால் வேதனைப்படகிறாரா? என்று பார்த்துவிட்டுப் போனார் அந்தப் பெண். இது பெரியாருக்குத் தெரியாது! அந்தப் பெண் வேறு யாருமல்ல, பெரியாரின் உடல் நலனைக் காத்து, தமிழர் சமுதாயத்துக்கு நீண்டகாலம் பெரியார் தொண்டு செய்ய உதவிய மணியம்மையார் ஆவார்.