பியானோவில் அசத்திய நாதஸ்வரம்!

உலகளவில் நடைபெறும் டேலன்ட் ஷோவில் தமிழகத்தின் லிடியன் நாதஸ்வரம் என்ற சிறுவர் கலந்துகொண்டார். இவரின் தந்தை சதீஷ்வர்ஷன் இசையமைப்பாளர் ஆவார். சிறுவயது முதலே மகனுக்கு இசை மீது ஆர்வம் வந்துவிட்டது. அந்த ஆர்வத்தை நன்கு புரிந்துகொண்ட பெற்றோர் படிப்பைக் கூட இரண்டாம் இடமாக்கி, இசை பக்கம் மட்டுமே லிடியனைத் திருப்பிவிட்டனர். அதன் பயனாக இந்தியாவின் சார்பாக தமிழகச் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் கலந்துகொண்டார். முதல் சுற்றில் லிடியன் அதிவேகத்தில் வாசித்த பியானோ இசையை உலகளவில் பிரபலங்கள் தங்கள் சமுக வலைதளத்தில் பகிர்ந்து இருந்தனர்.
பல கட்ட சுற்றுப் போட்டிக்குப் பின் நடந்த இறுதிப் போட்டியில், வேர்ல்டு பெஸ்ட் என்ற பட்டத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இதைப் பற்றி லிடியன் கூறுகையில்,
ரொம்ப ஹேப்பியாக இருக்கு, தமிழ்நாடு மீது உலகப் பார்வை விழ ஆரம்பித்திருக்கிறது. சாதனைகள் தொடரும் என்கிறார் மகிழ்ச்சியுடன். சிறுவனின் திறமைக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. உலக அளவில் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் தமிழகச் சிறுவன் லிடியனை பெரியார் பிஞ்சுகள் சார்பாக வாழ்த்துவோம் பிஞ்சுகளே! வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகள்!
– மகிழ்