கடன்
சின்னச் சின்னக் கதைகள்
கதை: மு.கலைவாணன்
ஓவியம்: மு.க.பகலவன்
ஒரு செடியின் இலைமேல் சின்னச் சின்ன முட்டைகள் ஒட்டியிருந்தன.
அந்த முட்டையிலிருந்து புழு ஒன்று வெளிவந்தது.
மெல்ல வளர்ந்து அந்தச் செடியின் இலைகளையே உணவாக உட்கொண்டு வளர்ந்தது.
சில நாள்களில் அந்தச் செடியின் இலை அடியிலேயே கூட்டுப் புழுவாகித் தொங்கிக் கிடந்தது. கூட்டுப்புழு மெல்ல வளர்ந்து, இறகு முளைத்து, வண்ணத்துப் பூச்சியாய் வடிவம் பெற்று கூட்டை விட்டு வெளிவந்தது.
அந்தச் செடியையே சுற்றிச் சுற்றிப் பறந்தது.
முட்டையைக் காத்து, புழுவானாதும் தன் இலையையே உணவாகத் தந்து, கூட்டுப் புழுவானதும் இலைக்கு அடியில் பாதுகாத்து, தன்னை வண்ணத்துப் பூச்சியாய் வளர்த்துவிட்ட இந்தச் சின்னச் செடிக்கு என்ன கைம்மாறு செய்வது, எப்படி நன்றிக் கடன் செலுத்துவது என்று சிந்தித்தபடியே பறந்தது.
செடியில் நிறைய பூக்கள் பூத்திருந்தன. அந்தப் பூக்களில் தேன் அருந்தியபடியே மகரந்தத் தூள்களை தன் கால்களால் அள்ளி, அள்ளி மற்ற பூக்களுக்கு எடுத்துச் சென்று கொடுத்து உதவியது.
மகரந்தச் சேர்க்கை நடைபெற்றதால் பூக்கள் காய்களாயின.
காய்கள் பழுத்து முற்றி வெடித்தன. விதைகள் பரவின. அந்த இடம் முழுவதும் செடிகள் முளைத்தன.
தன்னை வளர்த்த செடிக்குத் தன்னால் முடிந்த நன்றிக் கடனைச் செலுத்திய மகிழ்வோடு பாடியபடி பறந்து கொண்டிருந்தது வண்ணத்துப்பூச்சி.
நன்றிக்கடனோ அடையாது _ அதை
மறந்தால் வாழ்க்கை கிடையாது!