வாலாஜாவிலிருந்து.. புளோரிடாவுக்கு!! – 2
மெய்நிகர் வகுப்பறைகள்
சா.மூ.அபிநயா
ஒலா… அச்சச்சோ என்ன ஆச்சு இவளுக்கு எனறு நினைக்கிறீங்களா? நான் உங்களுக்கு ஸ்பானிஷ் (Spanish) மொழியல் ஹாய் சொன்னேன். எங்கள் விருந்தோம்பி குடும்பம் (Host Family) ஒரு ஸ்பானிய குடும்பம். நான் சென்றது தென் ஃப்ளோரிடா. தென் ஃப்ளோரிடா மிகவும் பன்முகத் தன்மையானது. மாநாட்டின் நோக்கம் பல நாட்டு மக்களுடன் பழகுவது! எங்களின் விருந்தோம்பி குடும்பத்துடன் பழக, முதல் நாள் குடும்ப தினமாக அமைந்தது.
குடும்ப தினத்தன்று நாங்கள் மயமிக்கு (Miami) சென்றிருந்தோம். சாலையின் இருபுறமும் சுவர். சுவர் முழுவதும் ஓவியம். இதுதான் வின்வுட். மயமியின் ஒரு பகுதி. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுவரோவியர்கள், இங்கு வந்து சுவரோவியங்களை வரைகிறார்கள். புகைப்பட ஆர்வலர்களுக்கும் ஓவிய ரசிகர்களுக்கும் வின்வுட் சிறந்த இடம். இங்கு அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. லாஸ் ஓலாசுக்கு போகலாம் என்றார்கள். போய்ப் பார்த்தால்… நம்ம வீட்டுக்கு வீடு இரு சக்கர வண்டி வைத்துக்கொண்டிருப்பது போல் லாஸ் ஓலாஸ் புலிவர்டில் (Las Olas Blvd) வீட்டுக்கு வீடு படகு வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவின் வெனிஸாக லாஸ் ஓலாஸ் விளங்குகிறது.
மயமிக்கு போய்விட்டு கடற்கரை போகவில்லை என்றால் எப்படி? நாங்கள் கடற்கரைக்கு சென்றபோது, மேகம் தூர ஆரம்பித்துவிட்டது. மழைக்கும் எங்களிடம் பழக ஆசை போலும்! மறுநாள் மாநாட்டின் முதல் நாள்! உலக நாடுகளிலிருந்து வந்திருந்த மாணவர்களுடன் பழகுவதற்கு வாய்ப்பாக இந்நாள் அமைந்தது. நாங்கள் மொத்தம் 113 பேர், 8 குழுக்களாகப் பிரிக்கப்பட்டோம். முதலில் எவர்கிளேட்ஸ் ஹாலிடே பார்க். (Everglades Holiday Park)எனும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். ஃப்ளோரிடா என்றால், புயல், காற்று, வெயில், கடற்கரை, பன்முகத்தன்மை, முதலை. இந்த எவர்கிளேட்ஸ் ஹாலிடே பார்க் என்பது முதலைப் பண்ணை. முதலில் படகில் சென்று முதலைகளை மட்டுமின்றி பல்வேறு பறவைகளையும் பார்த்தோம். புது மனிதர்களுடன் பேச ஒருவரும் அங்கு தயங்குவதில்லை. விருந்தளிக்கும் குடும்பத்தினருடன் வின்வுட்டில் நடந்துகொண்டிருந்தபோது திடீரென்று ஒரு பெண்மணி எங்களைப் பார்த்து நீங்கள் சகோதரிகளா? என்றார். நாங்கள் இல்லையென்று சொல்லிவிட்டு நகர்ந்தோம். அப்போது, திருமதி.ஹீமேனா _ எங்களின் விருந்தளிக்கும் தாய் (Host Mother), நான் உங்களைவிட இளமையாக இருக்கிறேன் என சிரிக்க ஆரம்பித்துவிட்டார்!
கேட்டர் பாய்ஸ் நிகழ்ச்சியைத் தொலைக் காட்சியில் பார்த்தாலே பீதி கிளம்பும். சுற்றிலும் வேலிக்குள் நேரில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் முதலையுடன் விளையாடுவதைப் பார்த்தால், நாம் பாதுகாப்பாக இருந்தாலும் முதலை வாய்க்குள் நிகழ்ச்சித் தொகுப்பாளர் தலையை விடும்போது ஒரு பயம் கலந்து ஆர்வம் மனதுக்குள் தோன்றியது.
இது ஷாப்பிங் டைம்… அடுத்தது சாகிராஸ் மில்ஸ் மாலுக்குச் (Sawgrass Mills Mall) சென்றோம். இந்திய அங்காடி போலவே அங்கும் சீன தயாரிப்புகளை அதிகமாகக் காண முடிந்தது.
இந்தியாவில் இருந்து சென்ற 8 பேரும் பெருமைபட்ட நேரம் மாநாட்டின் தொடக்க விழா. ஏனெனில் 2000 பேர் முன்னிலையில் நம் நாட்டுக் கொடியின் பின் நாட்டின் சார்பில் அணிவகுத்துச் சென்றோம். தொடக்க விழாவில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பொது மேலாளர்டான் அயுப் அவர்கள் கலந்துகொண்டார்.
ஒரு பள்ளிக்குப் போய்விட்டு, வகுப்பறைக்குப் போகவில்லை என்றால் எப்படி? ஒவ்வொருவரும் ஒரு பாம்பனோ பீச் மாணவருடன் அவரது வகுப்புகளுக்குச் சென்று வகுப்பை கவனிக்க வேண்டும். நான் ஜியானா (Gianna) என்ற மாணவியுடன் சென்றிருந்தேன்.
ஹாரிபாட்டர் கதையில் வருவதுபோல் ஆசிரியர்களுக்குத் தனித்தனி வகுப்பறை. மாணவர்கள் அவர்களைத் தேடிச் சென்று பயில வேண்டும். நாம் உயிரியல் (Biology) வகுப்பில் மனித உடலை ஆய்வுக்கூடத்தில் (Laboratory) பார்ப்போம். அவர்கள் மெய்நிகர் வடிவமாக (Virtual Reality) காண்கிறார்கள்.
எனக்கு மிகவும் பிடித்த வகுப்புகளுள் ஒன்று, மாணவர் அரசு (Student Government). இந்த வகுப்பில், மாணவர்கள் சமூக செயல்பாட்டு திட்டங்களில் (Community outreach programme) ஈடுபடுகிறார்கள். இந்த வகுப்பு, மாணவர்களை நல்ல குழுத் தலைவர்களாகவும், சமுதாயத்தைப் பற்றி சிந்திப்பவர்களாகவும் ஆக்குகின்றது. நான் சென்றபோது கம்பளி நூலில் (Woollen thread) காப்புகளைச் செய்தனர்.
மார்ஜரி ஸ்டோன்மேன் டக்லஸ் உயர்நிலைப் பள்ளியில் (Marjory Stoneman Douglas high school) ஒரு 12ஆம் வகுப்பு மாணவன் சென்ற ஆண்டு துப்பாக்கிச் சூடு நடத்தினான். அதில் 17 மாணவர்களும், சில ஆசிரியர்களும் இறந்தனர். அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக இந்த காப்புகளை விற்று அதில் வரும் நிதியைத் திரட்டி, அதை பள்ளிகளில் பாதுகாக்கத் தருகிறார்கள். இந்த வகுப்பு இந்தியப் பள்ளிகளிலும் இருந்தால் மாணவர்களிடம் சமூக சிந்தனை வளரும், குற்றங்கள் குறையும்.
புகைப்பட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களே, அப்பள்ளியின் நிகழ்வுகளைப் படம் பிடிக்கிறார்கள். அப்போதுதான் நான் ஆஷ்லி மெக்னலியைப் (Asly McNally) பார்த்தேன். அவள் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் ஏன் தெரியுமா?
(பயணிப்பேன்…)