அலாமியும் அதிசய பறவைகளும்
விழியன்
தினமும் பூச்செடிகளுக்கு தண்ணீர் விடுவாள் அலாமி. அலாமி ஒரு குட்டிப்பெண். தன் பாட்டியுடன் காட்டிற்கு அருகே ஒரு குடிலில் வசிக்கின்றாள். குடிலைச் சுற்றித் தோட்டம் இருந்தது. பாட்டியும் அலாமியும் காலை, மாலை என எப்போதும் தண்ணீர் பாய்ச்சுவார்கள். செடிகளில் கிடைக்கும் பூக்களை கிராமத்திற்கு சென்று விற்றுவிட்டு வருவார் பாட்டி. அலாமி தினமும் செடிகளுக்கு தண்ணீர் விடும்போது தூரத்தில் தெரியும் அந்த அதிசய மரத்தை பார்ப்பாள். ஆமாம் அது என்ன விதத்தில் அதிசய மரம் தெரியுமா? அந்த மரத்திற்கு நிறைய கிளைகள் உண்டு. ஒவ்வொரு கிளையிலும் நிறைய பூக்கள்.
பூக்கள் காய்களாக மாறும். ஆனால் காய்கள் கனியாவதற்குப் பதிலாக பறவையாக மாறிவிடும். அதுவும் ஒவ்வொரு பறவையும் வேறு வேறு வண்ணத்தில் பிறக்கும். பாட்டிக்கு தூரத்தில் நடக்கும் இந்த அதிசயம் தெரியவில்லை. ஆனால் அலாமிக்கு ஒவ்வொரு நிகழ்வும் தெரிந்தது. நாள்தோறும் வியப்புடன் பார்ப்பாள். காலை விடிந்ததும் அந்தப் பறவைகள் வானத்தில் பறக்கும். சூரியன் மறையும் முன்னர் எல்லாப் பறவைகளும் மரத்தினை வந்து அடையும். வண்ண வண்ண பறவைகள் பறந்து வரும் அந்தக் காட்சி அலாமிக்கு மிகவும் பிடித்தமானது. இருட்டிய பிறகே பாட்டி கிராமத்தில் இருந்து குடிலுக்கு வருவார். அதுவரையில் அந்த மரத்தினை பார்த்துக்-கொண்டே இருப்பாள்.
இருட்டிய பிறகு மரத்தில் இருந்து வெளிச்சம் வரும். காட்டின் மொத்த மின்மினிப் பூச்சிகளும் அங்கே ஆட்டம் போடும் போல. பாட்டி வந்ததும் இருவரும் சமைத்துச் சாப்பிடுவார்கள். பாட்டிக்கு நடந்தவைகளை எல்லாம் சொல்லுவாள். ஆனால் அந்தக் கதைகளை பாட்டி நம்பியதே இல்லை. அப்படியா அலாமி. சாப்பிட்டு நன்றாக உறங்கு குழந்தாய் என்பாள். பாட்டியின் மடியில் படுத்துக்கொண்டே உறங்கிடுவாள் அலாமி.
சில நாட்களாகவே அந்த மரத்தின் அருகே சென்று பார்த்துவிட வேண்டும் என நினைத்தாள் அலாமி. ஒரு நாள் காலையிலேயே பாட்டி கிராமத்திற்கு கிளம்பிவிட்டார். அலாமியும் தோட்டத்தைவிட்டு மரத்தினை நோக்கி நடந்தாள். அதனருகே நடக்க நடக்க மெல்லிய இசை கேட்டது. முதலில் அது காற்றும் மரமும் உரசும் சத்தம் என நினைத்தாள்.
அது மெல்லிய இசை தான். அந்த மரத்தில் இருந்தே வந்தது. தூரத்தில் இருந்து பார்த்ததைவிட மரம் பெரியதாகவே இருந்தது. மரத்தின் மீது ஏறலாமா என யோசித்தாள். ஏறுவதற்கும் வாகாகத்தான் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏறினாள். பூக்களையும் காய்களையும் ஆராய்ச்சி செய்தாள். எப்படி காயிலிருந்து பறவைகள் பிறக்கின்றன என குழம்பினாள். ஆனால் அப்போது ஒரு பறவையும் மரத்தில் இல்லை. ஒவ்வொரு கிளையாக மரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டாள். அங்கிருந்து காட்டினைப் பார்ப்பதற்கு அவ்வளவு ஆச்சரியமாக இருந்தது. ரசித்துக்கொண்டே இருந்தவள், திடீரென தன் நிதானத்தை இழந்தாள். அங்கிருந்து விழ இருந்தாள். மரத்தில் இருந்து ஒரு விநோத ஒலி கிளம்பியது. கிலிகிலிகிலிகிலிகிலிகிலி… அடுத்த நொடி எங்கிருந்து தான் அவ்வளவு பறவைகள் வந்தனவோ தெரியவில்லை.
வந்து சல்லென விழ இருந்த அலாமியை தங்கள் அலகுகளால் பிடித்துக்கொண்டன. பிடித்தபடி கீழே போகாமல் வானத்தில் பறந்தன. சுமார் அய்ம்பது பறவைகள் அலாமியைக் கவ்வியபடி பறந்தன. ஒரு குட்டிப்பறவை முன்னே வந்து. பெண்ணே உன் பெயர் என்ன? என்று கேட்டது. என்னடா இது பறவை பேசுது என வியந்தபடியே அலாமி என்றாள். முன்னே இருந்த பறவைகள் அ என்றன. நடுவில் இருந்தவை லா என்றன . பின்னால் இருந்தவை மி என்றன. அது காடெங்கும் ஒலித்தது.
“ஏன் குதிக்கப் பார்த்தாய்?”
“இல்லை தெரியாமல் விழ இருந்தேன்”
“உனக்கு வானை சுற்றிப் பார்க்க விருப்பமா?”
“மகிழ்வாக”
பறவைகளும் அலாமியும் மேலே மேலே பறந்தனர். இன்னும் இன்னும் மேலே பறந்தனர். அங்கிருந்து பூமி அவ்வளவு அழகாக இருந்தது. அலாமிக்கு வெடவெடவெனவும் இருந்தது. ஒரு குட்டிப் பறவை சிறகுகள் வலிக்கின்றன போகலாம் என்றதும் கீழ் இறங்கினர். ஆனால் பாதி தூரத்திலயே என்னால முடியலப்பா என்றது குட்டிப்பறவை. சரியென அங்கே சென்ற குட்டி மேகத்தின் மீது அமர்ந்தன. அய்ம்பது பறவைகள் மற்றும் அலாமி அமர்ந்ததால் குட்டி மேகம் கொஞ்சம் தடுமாறியது. யப்பா இவ்ளோ பாரம் தாங்காது பெரிய பறவைகள் எல்லாம் மேலே பறங்க என்றது குட்டி மேகம். சில குட்டிப் பறவைகளும் அலாமியும் மட்டும் குட்டி மேகத்தில் இருந்தனர். இந்த பாப்பா எப்படி உங்ககிட்ட வந்தாங்க என்றதும் அலாமியே தன் கதை முழுவதையும் கூறினாள்.
இப்ப இந்த பாப்பாவை எப்படி நாம மரத்தில் கொண்டு விடுவது? ஏற்கனவே நேரமாச்சு என்று குட்டிப்பறவைகள் பேசிக்கொண்டன. அதில் கருப்பு நிறத்தில் இருந்த பறவையின் தலையினை வருடிக்கொடுத்தாள் அலாமி. இந்த உரையாடலைக் கேட்ட குட்டி மேகம். அய்த்தாலங்கடி! நான் இப்ப மழையா பெய்யப்போறேன். நேரா இந்த பாப்பாவை அவங்க வீட்லயே இறக்கிவிட்றேன் என்றது. சொன்னபடியே குட்டி மேகம் அலாமியை அவர்கள் வீட்டு வாசலியே விட்டது. டப்பென்ற சத்தம் கேட்டதும் பாட்டி உள்ளிருந்து வந்து அலாமி குழந்தை எங்க போயிட்ட! வா வா வந்து தலையை துவட்டிக்கோ என்றார்.
மறுநாள் காலை ஆவலுடன் எழுந்தாள் அலாமி. அந்த மரத்தை அங்கு காணவில்லை. பாட்டி அங்க மரமே இல்லை. நான் இதைத்தான் முன்னவே சொன்னேன் என்றார் பாட்டி. ஆனால் அலாமிக்கு நிச்சயம் அங்கே மரம் இருந்தது தெரியும்! பிறகு தன் தோட்டத்தில் ஒரு குட்டி குளத்தினை வெட்டினாள். நாள்தோறும் நிறைய தண்ணீர் ஊற்றுவாள். என்றேனும் அந்த பறவைகள் அவளைப் பார்க்க வரும் என ஆழமாக நம்பினாள். நாளடைவில் நிறைய நிறைய பறவைகள் அந்த குட்டி குளத்தினால் பயனடைந்தன. அந்த அதிசய மரமும் வளரும் என நினைத்து ஏராளமான மரங்களையும் வளர்த்தாள். அப்படி ஒரு குட்டி காட்டினையே உருவாக்கி விட்டாள் அலாமி.