உயிர்நேயச் சிறுவர் டெடிக்!
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்றான மிசோரமைச் சேர்ந்த 6 வயது சிறுவர் டெரிக் சைக்கிள் ஓட்டும் போது எதிர்பாராத விதமாக பக்கத்து வீட்டின் கோழிக்குஞ்சு மீது மிதிவண்டியை ஏற்றிவிட்டார். இதனால் பதறிப்போன சிறுவர் கோழிக்குஞ்சை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என எண்ணி பல முயற்சிகளைச் செய்துள்ளார். கோழிக்குஞ்சு இறந்து போனது தெரியாமல் அதனை ஒரு கையில் எடுத்துக் கொண்டு, மறு கையில் தான் சேமித்து வைத்திருந்த 10 ரூபாய் பணத்துடன் மருத்துவமனைக்கு சிறுவன் சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து 100 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
சிறுவனின் இளகிய மனதை கண்டு நெகிழ்ச்சி அடைந்துத செவிலியர்களில் ஒருவர், ஒரு கையில் பணத்துடனும் மறுகையில் இறந்து போன கோழிக் குஞ்சுடனும் சிறுவர் இருப்பதை புகைப்படம் எடுத்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத் தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
இந்த அவசர உலகில் யாருக்காவது விபத்து ஏற்பட்டால் கூட கண்டுகொள்ளாமல் கடந்து செல்லும் மனிதர்கள் மத்தியில் 6 வயது சிறுவர், பிறிதோர் உயிரின் மீது கொண்ட பரிவும், துடிப்பும் தன் தவறுக்கு வருந்திய மனமும் குழந்தைகட்கே உரியது. பெரியவர்களான பின்னும் மாற்றிக் கொள்ளக் கூடாத பண்பு!