உலகம் நம் குடும்பம்
கறுப்பு சிவப்பு வெளுப்பென்று
காசி னிக்குள் பலநிறத்தார்;
உறுப்பின் நிறத்தைப் பார்க்காமல்
உள்ளம் மட்டும் பார்த்திடுவாய்!
தட்ப வெப்ப நிலையாலே
தனித்த நிறத்தைப் பெற்றிடுவார்;
நட்பு ஒன்றே நல்நிறமாம்;
நம்மை இணைக்கும் பொன்றிமாம்!
தாத்தா பாட்டி தாய்தந்தை
தம்பி அண்ணன் தங்கையக்காள்
மூத்தோர் இளையோர் யாவரும்நம்
முதலாம் குடும்ப உறவென்போம்!
பள்ளி மற்றும் கல்லூரி
பணியைச் செய்யும் இடங்களிலே
உள்ளில் உயர்ந்த நட்போடு
உறவாய் ஆவர் நண்பர்கள்!
இனமும் மதமும் சாதிகளும்
எழுத்து, மொழிகள் வேறிடினும்
மனதில் மனிதம் கொண்டிட்டால்
மண்ணில் எல்லாம் ஒருகுடும்பம்!
கடலும் மலையும் பிரித்தாலும்
கருணை அன்பு நட்பிருந்தால்
உடலால் வேறு பட்டாலென்?
உலகம் முழுதும் நம்குடும்பம்!
கே.பி.பத்மநாபன், கோவை