காரணமின்றி ஏற்காதீர்கள்
ஷூ மேக்கர் லெவியும் டைனோசர் அழியும்
சிகரம்
டைனோசர் போன்ற அரிய பெரிய வகை உயிரினங்கள் எல்லாம் அழிய ‘ஷூ மேக்கர் லெவி’ என்கிற வால்நட்சத்திரம்தான் காரணமா?
இல்லை. அந்த ‘ஷூ மேக்கர் லெவி’ என்கிற வால்நட்சத்திரம் நேரிடையாய் பூமியைத் தாக்கவில்லை. அது 1994-ஆம் ஆண்டு வியாழனைத் தாக்கிய வால்நட்சத்திரமாகும்.
ஆனால், அதே போன்ற ஒரு விண்பொருள் (வால் நட்சத்திரம் அல்லது விண்கல்) பூமியின்மீது மோதியதன் விளைவால் தான் பூமியில் வாழ்ந்து வந்த உயிரினங்கள் அழிய நேர்ந்தன என்கிறார்கள் அறிவியலாளர்கள். இந்த நிகழ்வு எப்படி நேர்ந்தது என்று ‘ஷூ மேக்கர் லெவி’ வால்நட்சத்திரத்தைக் கொண்டே தெரிந்துகொள்வோமா?
நம்முடைய சூரிய குடும்பத்திற்கு அடுத்தபடியாக இருப்பது ஓர்ட்ஸ் மேகதொகுப்பு (OORT CLOUDS). இந்த மேகக் கூட்டத்தில் கோடிக்கணக்கான வால் நட்சத்திரங்கள் தங்களுக்கான பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு நல்ல பிள்ளைகளாக சுற்றிக் கொண்டிருக்கும். சில வால்நட்சத்திரங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் சூரியக் குடும்பத்திற்குள் வந்து செல்வதுமுண்டு. ஹேலி வால் நட்சத்திரம் அப்படிப்பட்ட ஒன்றாகும்.
அப்படியல்லாமல், வேறு பாதையில் சுற்றும் வால்நட்சத்திரங்களில் ஏதாவது ஒன்று எதிர்பாராத ஒரு வினாடியில் தன் பாதையை விட்டுவிலகி நம்முடைய சூரிய குடும்பத்திற்குள் நுழைந்துவிடும்.
இவ்வாறு திடீரென நுழைந்ததும் சூரியனின் ஈர்ப்பு சக்தியின் காரணமாக சூரியனை நோக்கி இழுக்கப்படும். அப்படிச் செல்லும் பாதையில் வேறு ஏதேனும் கோள் இருந்தால், அதன் ஈர்ப்பு விசையும் வால்நட்சத்திரத்தை ஈர்க்கும். எதன் ஈர்ப்புவிசை அதிக தாக்கத்தைச் செலுத்துகிறதோ, அதன் மீது வால்நட்சத்திரம் மோதிவிடவும் கூடும். இதனால் அந்த கோளில் பாதிப்பு ஏற்படும்.
1993-ஆம் ஆண்டு யூஜின் ஷூ மேக்கர். கரோலின் ஷூ மேக்கர் என்ற வாழ்விணையர்களான அறிவியலாளர்களும், இவர்களின் ஆராய்ச்சிக்கு உதவியாக இருந்த டேவிட் லெவி என்ற அறிவியலரும் தான் வியாழனின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்த வால்நட்சத்திரத்தைக் கண்டுபிடித்தனர். அதனால், அவர்களின் பெயரிலேயே அது அழைக்கப்படலாயிற்று.
ஷூ மேக்கர் லெவி வால்நட்சத்திரம் சூரியக் குடும்பத்திற்குள் நுழைந்துபிறகு பெரிய கிரகமான வியாழனின் அதிகப்படியான ஈர்ப்பு விசையில் இழுபட்டு சுற்ற ஆரம்பித்துவிட்டது. வியாழனை ஒருமுறை சுற்றிவர இரண்டரை ஆண்டுக் காலம் எடுத்துக்கொண்டது.
ஒரு கட்டத்தில் சூரியனின் ஈர்ப்பு சக்திக்கும் வியாழனின் ஈர்ப்பு சக்திக்கும் இடையே சிக்கி 1994-ஆம் ஆண்டு பல துண்டுகளாக சிதறிய ஷூமேக்கர் லெவி வால் நட்சத்திரத்தின் முதல் துண்டு வியாழன் கிரகத்தின் மீது மோதியதும் பெரும் கரும்புகை பரவியது. இந்த ஆபத்தான கரும்புகை சூரியனை மறைத்து சூரிய வெளிச்சத்தை மறைத்துவிட்டது.
இதே போன்று தான் பூமியிலும் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன் மோதிய வால்நட்சத்திரம் ஒன்று ஏற்படுத்திய வெப்பமும், கரும்புகையும் பூமியைச் சூழ்ந்ததால், தாவர இனங்களும், அதைத் தொடர்ந்து பல உயிரினங்களும் அழிந்தன. அப்படி அழிந்த உயிரினங்களில் ஒன்றுதான் டைனோசர். கரும்புகை அகன்ற பின்பு சூரியனின் வெளிச்சமும் வெப்பமும் கிடைக்கப் பெற்று மற்ற உயிரினங்கள் பிழைத்தன.
ஆயினும், அப்போது வந்து மோதிய வால்நட்சத்திரம் எது எங்கிருந்து வந்தது என்பதை நாம் இன்னும் அறிய முடியவில்லை. ஆனால், வால்நட்சத்திரம் போன்ற விண் பொருளால் ஏற்பட்ட பாதிப்புகள் தான் அவை என்பது உறுதிப்பட்டிருக்கிறது.
எதையும் தாங்கும் இதயம் வேண்டும் – அண்ணா சொன்னதா?
எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்ற சொற்றொடர் அண்ணாவால் சொல்லப்பட்டது என்றே பலரும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறே கூறவும் எழுதவுஞ் செய்கின்றனர். ஆனால் இது தவறாகும்.
உண்மையில் இச்சொற்றொடரைக் கூறியவர். பகுத்தறிவுச் சிந்தனையாளரான லார்ட் பைரன் என்பவர் ஆவார். இவர் பிரிட்டிஷ் அரசால் இங்கிலாந்திலிருந்து நாடு கடத்தப்பட்டார். அவர் இங்கிலாந்திலிருந்து பிரான்சிற்கு புறப்படுவதற்கு முன் ‘டோவர்’ துறைமுகத்திலிருந்து புறப்பட்ட படகில் புறப்பட்டபோது இக்கருத்தைக் கூறுகிறார்.
“என்னை நேசிப்பார்க்கு ஒரு பெருமூச்சு
என்னை வெறுப்பார்க்கு ஒரு புன்முறுவல்
என்ன வந்தாலும் சரியே,
எதையும் தாங்கும் இதயம் உண்டு’’
என்று கூறவிட்டு பிரான்சிற்கு விடைபெறுகிறார். அப்போது கூறப்பட்டதே “எதையும் தாங்கும் இதயம்” என்று சொற்றொடர், அதை அறிஞர் அண்ணா எடுத்து, தன் உரைகளில் பயன்படுத்தினார் என்பதே சரியானதாகும்.