பெரியா வரலாறாக நிறைந்தார்!
1973ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் நாள் சென்னை தியாகராய நகரில் உரையாற்றினார். அடுத்த ஓரிரு நாட்களில் பெரியாருக்குத் திடீரென்று உடல்நலம் மேலும் பாதிக்கப்பட்டது. வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, மயக்க நிலையில் இருந்தார். பெரியாருக்கு அவசரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. செயற்கை முறையில் உணவு செலுத்தப்பட்டது.
பெரியார் கண்விழித்தார். அடுத்த நிமிடமே, இன்னும் ஆற்றவேண்டிய சமூகப் பணிகள் அவர் நினைவுக்கு வந்திருக்க வேண்டும். விழிகளில் சமூகம் குறித்த ஏக்கம்.
என்னே, பெரியாரின் உள்ளம்! உயிர் அடங்கும் நிலையிலும் சமுதாயப் பணி ஆற்றிட முயன்றார்.
இறுதியில் இயற்கை வென்றது.
1973 டிசம்பர் மாதம் 24ஆம் தேதி பெரியார் மறைந்தார். தமிழ்நாட்டின் வரலாறாக நிறைந்தார்.
பெரியாரின் விசுவாச சீடர் கி.வீரமணி கூறியுள்ளதுபோல், பெரியார் ஒரு பாடநூல், அவர் வாழ்ந்த வாழ்க்கை ஒரு வரலாறாக நம்முன் உள்ளது. அதைப் படிப்பவர்களுக்கு எந்தத் துன்பமும் வரமுடியாது. அவ்வளவு அறிவு தோய்ந்த, பண்பு நிறைந்த வாழ்க்கை பெரியாருடையது-.
தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைப் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும் –
அவர்தான் பெரியார்.
– பாவேந்தர் பாரதிதாசன்
பெரியாரின் வெற்றி நடை!
அப்பா, பெரியாரின் கதையை சொல்லி முடித்தார். அப்பா நேரம் கிடைக்கும் போதெல்லாம் கதையைச் சொல்லி வந்தார். சொல்லும் போதெல்லாம் பிள்ளைகள் ஆர்வமுடன் கேட்டனர்.
பெரியாரின் கதையை கவனமுடன் கேட்டீர்கள். நல்லது. பெரியாரைப் பற்றிக் கேள்விகள் கேட்பேன். நீங்கள் பதில் சொல்ல வேண்டும் என்று அப்பா சொன்னார். பாரதியும், சோவியாவும் சம்மதித்தனர்.
கேள்வி: பெரியாரின் முக்கிய கொள்கை எது?
பதில்: ஜாதியை ஒழித்தல்.
கேள்வி: பெரியாரின் கொள்கைகளில் உங்களுக்குப் பிடித்தமானது எது?
பதில்: பகுத்தறிவு
கேள்வி: பெரியார் வாழ்க்கையின் சிறப்பு என்ன?
பதில்: பொதுத்தொண்டு
கேள்வி: பெரியார் கதையிலிருந்து நீங்கள் அறிந்துகொள்வது என்ன?
பதில்: சீர்திருத்தத்தை தன் குடும்பத்திலிருந்து தொடங்க வேண்டும்.
கேள்வி: பெரியாரிடம் உங்களுக்குப் பிடித்த குணங்கள் எவை?
பதில்: உண்மை, நேர்மை, எளிமை, வீரம்.
கேள்வி: பெரியாரிடம் நீங்கள் வியந்தது எது?
பதில்: பெரியார் _ இராஜாஜி நட்பு.
கேள்வி: பெரியாரிடம் நீங்கள் போற்றும் குணம் என்ன?
பதில்: பதவி ஆசை இல்லாதது.
கேள்வி: பெரியாரால் நாடு அடைந்த நன்மை என்ன?
பதில்: தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம்.
கேள்வி: பெரியாரின் புதுமைக் கருத்து எதைப் பற்றியது?
பதில்: பெண்ணுரிமை.
கேள்வி: பெரியாரின் குறிக்கோள் என்ன?
பதில்: விடுதலை! மனிதன் எல்லா அடிமைத் தனங்களிலிருந்தும் விடுதலைப் பெறவேண்டும்.
இதுவரை அப்பா கேள்விகள் கேட்டார். பாரதியும் சோவியாவும் பதில் சொன்னார்கள். இப்போது பிள்ளைகள் கேள்வி கேட்கத் தொடங்கினர். அப்பா நன்றாக மாட்டிக்கொண்டார்.
கேள்வி: பெரியார் ஏன் கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வந்தார்?
பதில்: வெங்காயத்தை உரித்து உரித்துப் பார்த்தால் ஒன்றுமில்லை அல்லவா? அதுபோல் கடவுள் உண்டு என்று சொல்லும் புராணங்களையும், வேதங்களையும் கடவுள் தத்துவங்களை படித்துப் படித்து ஆராய்ந்து பார்த்து கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வந்தார்.
கேள்வி: கடவுள் இல்லை என்று சொன்னதற்காக பெரியாருடைய அப்பா, அம்மா அவரை கண்டிக்கவில்லையா?
பதில்: அவர்கள் நம்பிக்கைப்படி சொல்வ-தென்றால், தவமிருந்து பெற்ற பிள்ளை அல்லவா, பெரியார்! எல்லாம் கடவுள் செயல் என்று சும்மா இருந்திருப்பார்கள்.
கேள்வி: பெரியார் ஏன் பள்ளியில் படிக்கவில்லை?
பதில்: வகுப்பு என்பது நான்கு சுவருக்குள் அடங்குவது. பெரியார் என்ன சாதாரண மனிதரா? சுவரே இல்லாத உலகப் பள்ளியில் படித்தவர்.
கேள்வி: பெரியாரின் சிந்தனையை உருவாக்கியவர்கள் யார் யார்?
பதில்: பெரியார் ஒரு சுயசிந்தனையாளர். உலக அனுபவத்தில் தனக்குப் பட்ட கருத்தை சிந்தித்து, ஆராய்ந்து வெளியிட்டவர். தன் கருத்து தவறு என்றாலோ அல்லது மாற்றம் தேவைப்பட்டாலோ, அதை ஏற்கத் தயங்காதவர். அறிவாளர் பலருடன் விவாதித்தும், கலந்துரையாடியும் மேம்பட்டவர். அவர்களுள் கருவூர் மருதையா பிள்ளை, கைவல்ய சாமியார், ம. சிங்காரவேலர்… இன்னும் ஏராளமான தமிழ் மக்கள் அடங்குவர்.
கேள்வி: பெரியார் ஏன் தன் மனைவி நாகம்மையை கட்டாயப்படுத்தி மாற்றினார். அது சரியா?
பதில்: நாகம்மையாருக்கு கணவன் சொல்மிக்க மந்திரமில்லை. நாகம்மை தனக்கு அடிமையாக இருந்தார் என்ற கூறி பெரியார் வருந்தியுள்ளார். மாற்றம் ஒரு நாடகத்தின் மூலம் என்றாலும், அதன் உண்மைத் தன்மையை பின்னாளில் உணர்ந்து வாழ்ந்தவர் நாகம்மையார். அதிர்ச்சி வைத்தியத்தால் சிலரை குணப்படுத்துவதில்லையா?
கேள்வி: பிச்சையெடுப்பதை பெரியார் ஒழிக்க நினைத்தாரா?
பதில்: இந்தக் கொடுமை கூடாது என்றார். அவரே அனுபவசாலியாயிற்றே!
கேள்வி: பெரியாருக்கு சினிமா பார்ப்பது பிடிக்காதா?
பதில்: நல்ல சினிமா பிடிக்கும். கலை, இலக்கியம் சமுதாயத்திற்கு உதவ வேண்டும் என்பது அவர் கொள்கை. பெரியார் எப்போதும் உதவாததை ஒழிக்க நினைப்பார்.
கேள்வி: பெரியாரை பெரிதும் வருத்தமடைய வைத்த நிகழ்ச்சி எது?
பதில்: அறிஞர் அண்ணா மறைவு.
கேள்வி: பெரியாருக்கு குழந்தை இல்லையா?
பதில்: பெரியார் தமிழ் மக்களின் தந்தை. அவருக்கு நாலரைக் கோடி குழந்தைகள்.
கேள்வி: பெரியார் சிக்கனம் பண்ணி சேர்த்த பணத்தை என்ன செய்தார்?
பதில்: தன் கொள்கையை பரப்ப நிறுவனத்தை ஏற்படுத்தி அதற்கு கொடுத்தார்.
கேள்வி: பெரியார் முயற்சியால் ஜாதி ஒழிந்ததா?
பதில்: ஓரளவே! மிச்சத்தை ஒழிக்க உங்களைப் போன்ற குழந்தைகளிடம் விட்டுள்ளார். இன்று பெரும்பாலோர் தங்கள் பெயருடன் ஜாதியைச் சேர்த்து சொல்ல வெட்கப்படுகிறார்கள் அல்லவா? இது பெரியார் சாதனைதானே!
கேள்வி: பெரியாருடைய கொள்கைகள் எல்லாம் நிறைவேறியதா?
பதில்: நிறைய! இடஒதுக்கீடு சட்டம், ஆட்சி மொழியாகத் தாய்மொழி, தீண்டாமை ஒழிப்பு, பெண் கல்வி _ முன்னேற்றம், கலப்புத் திருமணம், விதவை மறுமணம் முதலியன நிறைவேறி உள்ளன. பெரியார் உயிருடன் இருக்கும்போதே வெற்றி நடை போட்ட சீர்திருத்த வீரர்.
பாரதியும் சோவியாவும் சொன்னார்கள். அப்பா, பெரியார் கதையை மறக்க மாட்டோம். பெரியார் இலட்சியம் முழுமையாக வெற்றிபெற உழைப்போம்.
அப்பா அவர்களுக்கு வாழ்த்துக் கூறினார்.
கதை முடிந்தது. பெரியார் பணியை இனி அவர்கள் தொடர்வார்கள்!
(நிறைவு)