பழகு முகாம் – 2019
பழகுமுகாம் ஏன் குழந்தைகளின் குதூகலத் திருவிழாவாக இருக்கிறது? பழகுமுகாம் ஏன் குழந்தைகளை ஒரு கொண்டாட்ட மனநிலைக்குக் கொண்டு செல்கிறது? பழகுமுகாம் ஏன் அவர்களை மீண்டும் மீண்டும் கவர்ந்திழுக்கிறது? வயது வரம்பு தாண்டியபிறகும் பிடிவாதமாக வருவதற்கு காரணமாக இருப்பது எது? விளையாடுகிறார்கள்; கலை நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கிறார்கள்; அவர்-களும் ஆர்வமுடன் அதில் பங்கேற்கிறார்கள்; அதிகாலையில் எழுந்து நடைப்பயிற்சி, தற்காப்புக் கலைகளை கற்றுக் கொள்கிறார்கள்! இவைதானா அவர்களைக் கவர்பவை? அல்லது வேறு ஏதாவது காரணங்கள் உண்டா?
கலை அறப்பேரவையின் பொம்மலாட்டக் கலைஞர் மு. கலைவாணன் அவர்கள், நாடகக்-கலையை அபிநயங்களோடு குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கும் ஒரு வகுப்பில், எது குறித்து நாடகம் நடத்தலாம் என்பதை அவர்களிடமே கேட்டு, நாடகத்துக்கான கருவை உருவாக்க முனைந்தார்! அதற்கு, “உங்களது பிரச்சனைகள் என்னென்ன சொல்லுங்கள்?” என்று கேட்டார். அவ்வளவுதான், அது வரையிலும் அவர்களைக் குழந்தைகள் என்று எண்ணியிருந்த அனைவருமே கருத்தை மாற்றிக் கொள்ளும்படியாக வீடு, பள்ளிக்கூடம், சமுகம், மற்றமற்ற இடங்களில் தங்களுக்கு நடக்கும் புறக்கணிப்பைப் பற்றி ஆதியும், அந்தமுமாக இருபால் குழந்தைகளும் கொதிப்புடன் கொட்டத் தொடங்கிவிட்டனர்.
அதில் 8 வயது பெண் குழந்தை முதலில் கையைத் தூக்கி தனது கருத்தைக் கேட்கும்படிக் கோரினார். அனுமதி கொடுத்தவுடன் படபட-வென்று வெடித்துவிட்டாள்! “வீட்டில் தம்பிக்கு ஒரு நீதி; அக்காவான எனக்கொரு நீதி” என்று இந்த சமுகத்தில் நிலவும் மிக முக்கியமான பிரச்சனையை எடுத்து வைத்தாள். இதை அவளது வீட்டில் இவ்வளவு தீர்க்கமாக அவளால் சொல்லமுடியவில்லை. இன்னும் சிலர் மற்ற மற்ற இடங்களில் தங்களது தன்மானத்திற்கு ஏற்பட்ட இழுக்கைப் பதிவு செய்தனர். இதில் பெரும்பாலும் பொருமித் தள்ளியது பெண் குழந்தைகள்தான்! ஆண் பிள்ளைகளும் அவர்களது குறைகளை எடுத்து வைத்தனர். ஆனாலும் பெண் குழந்தைகளின் குரல்கள்தான் வீரியமான பிரச்சனைகளைத் தொட்டன! ஒருங்கிணைப்பாளர்களின் நெஞ்சையும் சுட்டன! சுதந்திரமாக வெளியிட வாய்ப்பில்லாமல் பிரசர் குக்கர் போன்று அழுத்தி வைக்கப்பட்ட இந்த ஆபத்தான பிரச்சனைகளின் அழுத்தத்தைக் குறைப்பதற்கு பழகுமுகாம் பயன்படுகிறது! குரலற்ற குழந்தைகளின் உரிமைக்குரலாகப் பழகுமுகாம் இருக்கிறது! அதனால் குழந்தைகள் பழகுமுகாமை விரும்புகின்றனர். தங்களின் உலகம் பழகுமுகாம் என்று குழந்தைகள் கருதுகின்றனர். ”எங்க ஏரியா உள்ள வராதே” என்று சொல்வதைப் போல, பழகுமுகாம் தங்களின் கோட்டை என்றும், பேட்ட என்றுமே கருதுகின்றனர். ஆம்! சங்கீதச் சாரல் போல, குழந்தைகளின் இங்கிதச் சாரல்தான் பழகுமுகாம்! அவர்களது எல்லாவிதமான விருப்பங்- களையும், உள்ளத்திலிருக்கும் வெப்பத்தையும் குளிர்விக்கின்ற குற்றாலச் சாரல்தான் பழகுமுகாம்!
ஆனால், சமுகத்தில் குழந்தைகளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதைப் போல, “ச்சே! குழந்தையாகவே இருந்திருந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை” என்று ஒரு மேம்போக்கான கருத்தை பலரும் தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் குழந்தைகளின் உரிமைக்குரலை ‘அதிகப்பிரசங்கித்தனம்’ என்ற ஒற்றை வார்த்தையில் அடக்கிவிடும் ஆதிக்கவாதிகள். அவர்கள் பெற்றோராகவே இருந்தாலும் சரிதான்!
குழந்தைகள் மட்டுமா பழகுமுகாமை விரும்புகின்றனர்? பெற்றோரும்தான்! பெற்றோரைப் பொருத்தவரையில், பிள்ளைகளை பாலின பிறவிபேத நோயிலிருந்து மீட்க முயற்சிகள் எடுக்கத் தெரியாமல், “என்னங்க செய்வது? மகனையும், மகளையும் ஒன்றாகத்தான் வளர்க்க எண்ணுகிறோம். ஆனால், மரபணுவிலேயே இந்த பேதம் தலைதூக்கிவிடும் போலிருக்கிறது. நாங்கள் பெண் குழந்தையைத்தான் விட்டுக்கொடுத்து போகச்சொல்ல வேண்டியிருக்கிறது. இல்லை-யென்றால், மகன் வீட்டிலிருக்கும் சின்னச் சின்னப் பொருட்களை தூக்கிப் போட்டு உடைத்து விடுகிறான். தட்டிக் கேட்டால் எங்களையே அடிக்க வருகிறான்” என்று புலம்புகின்றனர். பெற்றவர்கள் கொடுக்கும் செல்லத்தால், பிள்ளைகள் எடுத்துக்கொள்ளும் சலுகை இது!
இதற்கு இரண்டு பக்கமும் மனம் திறந்த உரையாடல் தேவை! அதற்கு வீட்டில் பெரும்பாலும் வாய்ப்புக் குறைவுதான். அந்த உரையாடலை அனுபவம் வாய்ந்தவர்கள் மூலமாக பழகுமுகாம் தருகிறது. அதனால்தான் பழகுமுகாமை பெற்றோர்களும் விரும்புகின்றனர். இது நோய்! ஆயிரங்காலத்து நோய்! அந்த நோயின் வேரில் சிறிது சிறிதாக வெந்நீரை ஊற்றிக்கொண்டிருக்கிறது பழகுமுகாம்! நிச்சயமாக அந்த நோய் முற்றிலும் களையப்பட்டே தீரும்! வீட்டிலேயே மற்றவர்களுடன் பழகத் தயங்குகின்ற சிலரும், புதிய நண்பர்களிடம் பழகத் தொடங்கிவிடுகின்றனர். ”மாற்றம் ஒன்றுதான் மாறாதது” என்கின்ற இயற்கை கோட்பாட்டை பழகுமுகாமில் மிகஎளிதில் காணலாம்.
சரி பெற்றோர்கள் மட்டும்தானா பழகுமுகாமை விரும்புகின்றனர்? இல்லை இந்த சமுகமும் ஓசையின்றி வரவேற்கும்! எப்படி?! ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு சூழலில் வளர்கிறது! அதனால், தன்னுடைய வீடுதான் சமுகம் என்று ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்; தன்னுடைய பெற்றோர்கள்தான் சமுகத்தின் முக்கிய அங்கத்தினர்கள் என்ற கருத்தும் இதில் அடங்கும். ஆகவே, சின்னச் சின்ன விசயங்களில்கூட விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இன்றி தடுமாறுகிறார்கள். இந்த தடுமாற்றம் மாறி அனைவரையும் ஒன்றாகக் கருதும் பண்பு எப்போது அவர்களுக்கு வாய்க்கும்? இது போன்ற சமுகத்தின் எல்லா வகையான தளங்களிலிருந்தும் வந்திருக்கின்ற குழந்தைகளுடன் பழகினால்தான் அந்தப் பண்பு வாய்க்கும். ஓ! நமக்குக் கிடைத்திருக்கின்ற பலவசதிகள் பலருக்கு கிடைக்கவே இல்லையே! இதற்காக நாம் நமது பெற்றோரிடம் அழுது அடம்பிடித்தல்லவா பெற்றோம். பெற்றோரும் பணம் இல்லை என்றே சொன்ன பிறகுமல்லவா வாங்கித் தந்தனர் என்ற புதிய கோணங்களில் சிந்திக்கத் தொடங்குகின்றனர். இதனால், யாதும் ஊரே! யாவரும் கேளிர்! என்கின்ற அந்த அரிய பண்பு அவர்களுக்கு வாய்க்கத் தொடங்கும். அதனால் எதிர்காலத்தில் எத்தனையோ பிரச்சனைகள் காணாமல் போகும். அதன்மூலம் நமது பண்பாடும் மீட்கப்படும்! அப்படித்தான் குழந்தைகளைப் பழக்குகிறது இந்தப் பழகுமுகாம்!
தொடரும்…