புகழஞ்சலி ! – கலைஞர்
அஞ்சுகத்தாய் முத்துவேலர் அன்புப்புதல்வர் கலைஞர்!
அனைத்துலகத் தமிழர்களின் அருமைத்தலைவர் கலைஞர்!
நெஞ்சகத்தே நிரந்தரமாய் நிலைத்தமுதல்வர் கலைஞர்!
நேசத்தோடு பாசத்தையும் நிறைத்தமனிதர் கலைஞர்!
துஞ்சிடாமல் சாதிமதம் தொலையஉழைத்த பெரியார்
தொண்டினுக்குத் தோள் கொடுத்த தொண்டர்நமது கலைஞர்!
பிஞ்சுளத்துப் பேரறிஞர் அண்ணாசென்ற வழியைப்
பின்தொடர்ந்து பெருமைபெற்ற தம்பியான கலைஞர்!
சென்னையிலே வள்ளுவர்க்குக் கோட்டம்வைத்த கலைஞர்!
செம்மொழியாம் நம்தமிழைச் சிறக்கவைத்த கலைஞர்!
பொன்னர்சங்கர் கதையைஏடு புகழவைத்த கலைஞர்!
பூம்புகாரைச் சீர்திருத்திப் பொலியவைத்த கலைஞர்!
தென்குமரிக் கடலில்வள்ளுவர் சிலையைவைத்த கலைஞர்!
திரும்பிப்பார்த்து இமயமலையும் திகைக்கவைத்த கலைஞர்!
வண்ணத்திரை வரலாற்றின் வானைத்தொட்ட கலைஞர்!
வசனம்கதை பாடல்களின் வசந்தகாலம் கலைஞர்!
பொன்னெழுத்தில் குறளோவியம் பொறித்தவர்நம் கலைஞர்!
புரட்சிமிகு தொல்காப்பியப் பூங்காதந்தவர் கலைஞர்!
மண்ணில்நம்மை உடன்பிறப்பாய் மதித்தவர்நம் கலைஞர்!
மாணவர்க்குள் பாவேந்தர்பா மணக்கவைத்த கலைஞர்!
எண்ணமெல்லாம் தமிழர்களின் ஏற்றமொன்றே குறியாய்
இயங்கிவந்த இனமானச் சூரியன்நம் கலைஞர்!
புண்ணையெல்லாம் பூவாய்ஏற்ற போர்மறவர் கலைஞர்!
புகழஞ்சலி பாடவைத்தே போய்மறைந்தார் கலைஞர்!
– தளவை இளங்குமரன், திருநெல்வேலி