சின்னச் சின்னக் கதைகள்
முயல்
கதை: மு.கலைவாணன்
ஓவியம்: மு.க.பகலவன்
புதர் ஒன்றில் சில முயல்கள் வாழ்ந்து வந்தன.
அதில் ஒரு முயல், தான் முயலாய்ப் பிறந்ததற்காக வருந்திக்கொண்டே இருந்தது. “நான் புலியாகப் பிறந்திருந்தால் உறுமினாலே எல்லோரும் ஓட்டம் பிடிப்பார்கள்.
சிங்கமாகப் பிறந்திருந்தால் இந்தக் காட்டையே கலக்கி இருப்பேன். யானையாகப் பிறந்திருந்தால் பகைவர்களைத் தூக்கிப்போட்டு பந்தாடி இருப்பேன். என் தலைவிதி… கேவலம் முயலாகப் பிறந்துவிட்டேன்’’ என்று அடிக்கடி புலம்பும். தீனி தேடக்கூட எங்கேயும் போகாமல் புதரிலேயே படுத்துக் கிடக்கும். மற்ற முயல்கள் இரைதேடி வெளியில் சென்று வரும். ஆனால், இந்த முயல் மட்டும் சோம்பேறியாய் இருந்தது.
மற்ற முயல்களிடம் ஏதாவது உணவு கொண்டு வரச் சொல்லி சாப்பிட்டு காலம் கழித்தது.
புதரில் முயல்கள் இருப்பதை அறிந்த நரி ஒன்று அவற்றைப் பிடித்துத் தின்ன அங்கே வந்தது.
நரி வருவதை உணர்ந்த மற்ற முயல்கள் தாவிக் குவித்து தப்பித்துச் சென்றுவிட்டன.
நரி வருவது தெரிந்தும் தப்பிக்க எந்த முயற்சியும் செய்யாமல் தலைவிதியை நம்பிப் படுத்துக் கிடந்த சோம்பேறி முயல் மட்டும் நரிக்கு இரையானது. இதைப் பார்த்த மற்றொரு மூத்த முயல் சொன்னது.
“முயலாய் இருக்கலாம்!
முயலாதிருக்கலாமா?’’