புதைப்படிமவியலில் ஆர்வம் கொண்ட ஆறாம் வகுப்புச் சிறுமி
சென்னை பல்லாவரத்தில் வசிக்கும் சிறுமி அஷ்வதா, தனியார் பள்ளியொன்றில் ஆறாம் வகுப்புப் படிக்கிறார். அய்ந்தாம் வகுப்புப் படிக்கும்போதே சில்ட்ரன்ஸ் சயின்ஸ் என்சைக்ளோபீடியாவில் புதைப்படிமங்கள் பற்றி படிக்க, அதில் ஆர்வம் தொற்றிக் கொண்டது. புதைப் படிமங்கள் பற்றிய தகவல்களை இணையதளம் வழியாக முழுமையாக கற்றுக்கொண்டார்.
“அஷ்வதாவின் பாசி-ல்ஸ் (Fossils) பற்றிய ஆர்வத்தை உணர்ந்து அவளை எழும்பூர் மியூசியத்திற்கு அழைத்துச் சென்றோம். நேரம் கிடைக்கும்போது எல்லாம் மெரினா கடற்கரை, பழவேற்காடு கடற்கரைக்கு அழைத்துச் சென்றபோது, கிளிஞ்சல்களைச் சேகரித்து வந்தாள். இன்று அவள் இளம் புதைப் படிமவியல் ஆய்வாளராக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்கிறார் தாய் விஜயராணி.
அஷ்வதாவின் தொடர்ச்சியான தேடுதல் மூலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் ராம்குமாரைப் பார்த்திருக்கிறார். சிறுமியின் ஆர்வத்தைக் கண்டு வியந்து போனவர், மூன்று மணி நேரம் பாசில்ஸ் பற்றி பாடம் நடத்தியிருக்கிறார். கல்லூரி மாணவர்களே புரிந்துகொள்ள முடியாத புதைப் படிமவியலை அஷ்வதா எளிமையாக அறிந்து கொண்டது பேராசிரியருக்கு உற்சாகம் தந்திருக்கிறது.
பேலியண்டாலஜி (Paleontology) என அழைக்கப்படும் புதைப் படிமவியலில் அஷ்வதாவின் ஆர்வத்துக்கு பல பேராசிரியர்கள் துணையாக இருந்துள்ளனர். பல கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் கருத்தரங்குகளிலும் பங்கேற்றுப் பேசுகிறார் ஆறாம் வகுப்பு சிறுமியான அஷ்வதா!
எதிர்காலத்தில் மேலும் அவர் பல சாதனைகள் செய்ய ‘பெரியார் பிஞ்சு’ சார்பாக வாழ்த்துவோம் பிஞ்சுகளே!