காரணமின்றி ஏற்காதீர்கள் !
சாப்பிடும் வாழையிலையின் அடிப்பாகம் வலப்பக்கம் இருக்கவேண்டும்?
பந்தியில் வாழையிலையை போடும்போது, சாப்பிடுகின்றவர்களுக்கு வலப்புறமாக வாழையிலையின் அடிப்பாகம் வரும்படி போடவேண்டும் என்பார்கள். யாராவது மாற்றிப் போட்டால் சண்டைக்குப் போவார்கள்.
வாழையிலையை நன்றாகக் கூர்ந்து கவனித்தால், நடுநரம்பிற்கு மறுபுறம் மென்மையாகவும், அதன் எதிர்ப்புறம் சற்றுத் தடித்து முரப்பாகவும் இருக்கும். வளரும் போது வாழையிலை சுருண்ட நிலையில்தான் குருத்தாக வெளியில் வரும். அதனால் சுருளின் வெளிப்பாகம் சற்று முரப்பாகவும், உட்பாகம் மென்மையாகவும் இருக்கும்.
வாழையிலையைப் போடும்போது, அடிப்பாகம் சாப்பிடுகின்றவருக்கு வலப்பக்கம் வரும் வகையில் போட்டால், முரப்பான பகுதி சாப்பிடுகின்றவர் பக்கமும், மென்மையான பகுதி பொறியல் வைக்கப்படும் பக்கமும் அமையும்.
உண்பவரை ஒட்டியுள்ள பகுதியில்தான் சோறு போட்டு பிசைந்து எடுப்பார்கள். ஒவ்வொரு வாய்ச் சோற்றுக்கும் ஒரு முறை கையை இலையில் உரசி எடுப்பார்கள். அப்போது கை விரல் அடிக்கடி அப்பகுதியில் தேயும். அதுவும் ரசம், மோர் போன்றவை உண்ணும் போது கையை தேய்த்தே அள்ளுவார்கள். எனவே, அப்பகுதி சற்று முரப்பாக இருக்க வேண்டும். அப்போது தான் கிழியாமல் இருக்கும்.
பொறியல், கூட்டு வைக்கப்படும் பகுதி அடிக்கடி தேய்வதில்லை. மேலும் அவற்றை எடுக்கும்போதும் நுனி விரலால் மேலாகத்தான் எடுப்பார்கள்.
சோறு போட்டு உண்ணும் பகுதி உண்பவருக்கு அருகிலுள்ள பகுதியாகும். எனவே, அப்பகுதி முரப்பாக இருக்கும் வகையில், இலையின் அடிப்பாகம் வலப்புறம் இருக்க வேண்டும் என்றனர்.
மேலும், அப்படிப் போடப்படும்போது, வலப்பாகம் அகன்ற பகுதியாக இருக்கும் (அடிப்பகுதி இலையைத் தவிர மற்ற பகுதி மிகச் சிறிதாக இருக்கும் என்பதால், பெரும்பாலும் சாப்பாட்டு இலைக்கு போடமாட்டார்கள்) வலப்பகுதி அகலமாக இருப்பதால் அப்பகுதியில் கூட்டு, பொறியல், பச்சடி போன்றவற்றை வைக்க வசதியாய் இருக்கும். இடப்புறம் இவற்றை வைத்தால், இலையின் குறுக்காகக் கையைக் கொண்டு சென்று எடுக்க நேரிடும். அவ்வாறு இல்லாமல் நேரடியாக எடுத்துக்கொள்ள வலப்புறம் அவற்றை வைப்பதே சிறந்தது. இக்காரணங்களைக் கருத்தில் கொண்டே, வாழையிலை-யின் அடிப்பாகம் வலப்புறம் இருக்கவேண்டும் என்றனர், அவ்வளவுதான்!
இரவில் நகம் வெட்டக்கூடாதா?
இரவில் நகம் வெட்டக்கூடாது என்பது சம்பிரதாயம். அவ்வாறு வெட்டினால் கேடுவரும் என்று நம்புகின்றனர்.
பொதுவாக அக்காலத்தில், இரவு வேளையென்றாலே இருட்டாக இருக்கும். மண்ணெண்ணெய் விளக்கு அல்லது அகல் விளக்கின் ஒளி மிக மங்கலாகவே இருக்கும்.
எனவே ‘இரவு வேளையில் நகம் வெட்டும்போது, விரலில் காயம் ஏற்பட வாய்ப்புண்டு. இதைத் தவிர்க்கவே இரவில் நகம் வெட்டக் கூடாது என்றார்கள். இவ்வுண்மையை உணராமல், இரவில் நகம் வெட்டவே கூடாது என்று எண்ணுவது அறியாமை ஆகும்.
இக்காலத்தில், மின்விளக்கு ஒளியில் இரவில் தாராளமாக நகம் வெட்டலாம். அதற்கு நேரங்காலம் ஒன்றும் பார்க்கத் தேவையில்லை.
வெட்டிய நகத்தைக் கண்டபடி போடாமல், முறையாக சேகரித்து, குப்பையில் போடவேண்டும் என்பதைத் தவறாது கடைப்பிடித்தால் போதும்!