உயர்வு
‘அறிவும் திறனும் நிறைந்திருந்தால்
அகிலம் தன்னில் உயர்ந்திடலாம் – எனும்
செறிவாம் உலகக் கருத்தினிலே
சிறிய மாற்றம் நாம்காண்போம்;
அறிவும் திறனும் இல்லாதோர்
அகிலத் தென்றும் பிறப்பதில்லை;
அறிவின், திறனின், கூர்மையதன்
அளவில் மட்டும் தான்பேதம்!
ஆட்டம் ஓட்டம் அறிந்தோர்க்கு
ஆடல் பாடல் தெரியாது;
ஏட்டில் எழுத்தில் வல்லோர்கள்
எல்லாம் தெரிந்தோர் ஆவாரோ?
எறும்புக் கென்றே ஒருதிறமை;
யானைக் கென்றே ஒருதிறமை;
சிறுமை பெருமை என்பதெல்லாம்
சிந்த னையின் அளவேதாம்!
அறிவும் திறனும் குறைந்தாலென்?
அன்பால், பண்பால், உயர்ந்திடலாம்;
நெறியாய் வாழும் யாவருமே
நிறைந்த திறமை பெற்றவர்தாம்!
குறைவிலாத அன்பேதான்
புவியில் உயர்ந்த அறிவாகும்;
மனித நேயத் திறத்தாலே
மண்ணில் உயர்வோர் தாம் உயர்ந்தோர்!
கே.பி.பத்மநாபன், கோவை