தேசியக் கல்விக் கொள்கை – உங்கள் கருத்து என்ன?
கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழுவினர் உருவாக்கிய புதிய தேசியக் கல்விக் கொள்கை _ -2019க்கான வரைவை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. கல்வியாளர்களே இல்லாத இக் குழு, பல்வேறு மாற்றங்களைக் கல்வித் துறையில் பரிந்துரைத்திருக்கிறது. 5 வயதுக்குப் பதிலாக 3 வயதிலிருந்தே முறையான கல்வி; 3, 5, 8 ஆகிய வகுப்புகளில் பொதுத் தேர்வு, அதன் பின்னர் 9, 10, 11, 12 ஆகிய நான்கு வகுப்புகளுக்கும் செமஸ்டர் முறையில் பொதுத் தேர்வு; 14 வயதில் தொழிற்கல்வி, இந்தி _ -சமஸ்கிருதத்தைத் திணிக்கும் நோக்கில் மூன்றாம் மொழித் திணிப்பு, ஆசிரியர்களைக் குறைத்துவிட்டு தன்னார்வலர்களைப் பயன்படுத்துதல், பள்ளிகளைக் குறைத்தல், உயர்கல்விக்கான அரசு நிதியை இல்லாமல் செய்தல், பல்கலைக்கழகங்களை ஒழித்தல் என இந்தியாவின் கல்விக் கட்டமைப்பை, குறிப்பாக தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை மிகப்பெரிய அளவில் நாசமாக்கும் முயற்சியாகவே இக் கல்விக் கொள்கை வரைவை கல்வியாளர்கள் கருதுகின்றனர்.
இக் கல்விக் கொள்கையை ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே வெளியிட்டிருக்கும் மத்திய அரசிடம், இந்தியாவின் பிற மொழிகளிலும் மொழிபெயர்க்க வேண்டும். மக்களின் கருத்தறியும் காலத்தை இன்னும் ஆறு மாத காலத்துக்கு நீட்டிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல்கள் எழுந்துகொண்டிருக்கின்றன. பாரதி புத்தகாலயத்தின் முயற்சியில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இவ் வரைவு அறிக்கை https://bit.ly/2X0fmuP என்னும் முகவரியில் படவடிவக் கோப்பாகக் (றிஞிதி) கிடைக்கிறது.
பெரியார் பிஞ்சு வாசகர்களான பிஞ்சுகள் முதல் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவரும் இது குறித்து தங்கள் கருத்தினைத் தெரிவிக்கலாம். https://innovate.mygov.in/new-education-policy-2019/ ல் ஒவ்வொரு பிரிவாகச் சென்று நாம் கருத்துச் சொல்ல முடியும். பெரியார் பிஞ்சு இதழுக்கும் தேசியக் கல்விக் கொள்கை வரைவு- 2019- கருத்துகள் என்று தலைப்பிட்டு, உங்கள் கருத்துகளை மின்னஞ்சலாகவோ, கடிதமாகவோ அனுப்புங்கள்.
அதை அடுத்த இதழில் தொகுத்து வெளியிடுகிறோம். அனைவருக்கும் சமமான கல்வி, சமூகநீதி கிடைக்க உழைப்போம்!
– பொறுப்பாசிரியர்