சின்னச் சின்னக் கதைகள்
ஜாதி
பெரிய மல்லிகைத் தோட்டம்.
பூக்கள் அழகாய்ப் பூத்து மணம் வீசின.
அந்த தோட்டத்தைச் சுற்றி, மண் உயர்த்திக் கரை அமைத்து வேலி போடப்பட்டிருந்தது.
அந்த மண் மேட்டில் சில தும்பைச் செடிகள் வளர்ந்திருந்தன.
அதைப் பார்த்த மல்லிகைச் செடி,
“அட தும்பையே… இது மல்லிகைத் தோட்டம். நாங்கள் வளர்ந்து பூப்பூத்து வாசம் வீசி மனிதர்களை வசியப்படுத்தி வாழ்கிறவர்கள். நீயோ காட்டுச் செடி. இங்கேன் வளர்ந்தாய்! நாங்கள் ஜாதி மல்லிகள் நீ சாதாரண தும்பை… இந்தக் கரையைத் தாண்டி தோட்டத்துக்குள் வரக்கூடாது’’ என எச்சரித்தது.
அதைக் கேட்டு வருத்தத்தில் இருந்தது தும்பை.
அந்த நேரம் பார்த்து பூப்பறிக்க வந்தனர் சில பெண்கள்.
அதில் ஒரு பெண்மணி தும்பையைப் பார்த்ததும் அருகில் இருந்த பெண்ணிடம் “அடியே கமலா! இதோ பாரு! இதுதான் தும்பை! இது சளிக்கு நல்ல மருந்து! இதோட சாறு ஒத்தைத் தலைவலியைப் போக்கும். மூக்கடைப்பை நீக்கும். இது நல்ல மருந்துச் செடி!
மல்லி மாதிரி சாதாரணமா கிடைக்காது! அதை மிதிக்காமல் பாத்து வா!’’ என அதன் பெருமைகளை எடுத்துச் சொல்லியபடி மல்லிகையை பறித்துக் கொண்டிருந்தார்கள்.
இதையெல்லாம் வேலிமேல் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த பட்டாம்பூச்சி சொன்னது.
“ஜாதியைப் பார்க்காதே!
சாதித்ததைப் பார்!’’