கொம்பு முளைச்சிருக்கா?
அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை
பிஞ்சண்ணா
காலையிலிருந்தே இளவமுதனின் போக்கு வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தான் அவனது அண்னன் இளமாறன். பள்ளி தொடங்கி ஒரு வாரம் ஆகிறது. நான்காம் வகுப்பில் இணைந்தவன் ஒழுங்காகத் தான் பள்ளிக்குச் சென்று வருகிறான்.
வார விடுமுறையான இன்று விளையாடப் போகாமல் தலையைத் தலையைத் தொட்டுப் பார்க்கிறான்; கண்ணாடி முன் நின்று முன்னேயும், பின்னேயும் திரும்பிப் பார்க்கிறான்; என்னாச்சு? என்று யோசித்துக் கொண்டே அவனைக் கவனித்தான். வழக்கமாக அப்பாவின் செல்பேசியைத் தன்னிடம் போட்டி போட்டு எடுத்து நோண்டிக் கொண்டிருப்பவன், இன்றைக்கு அதையும் தொடவில்லை. பள்ளியில் எதுவும் பிரச்சினையா? என்று நினைத்தபடி, அப்பாவின் செல்பேசியை எடுத்துப் பையில் போட்டுக் கொண்டு, “என்ன அமுதா… என்ன பண்ணிக்கிட்டிருக்க” என்று அறைக்குள் நுழைந்தான் இளமாறன்.
”ஒன்னுமில்லண்ணா…” என்று ஓடப் பார்த்தான் இளவமுதன். அவனை அப்படியே மடக்கி அள்ளிய மாறன், ”அட.. சொல்லுடா… காலையிலிருந்து ஒரு மாதிரி சுத்திக்கிட்டிருக்கியே… என்னாச்சு?”
”தலையைத் தலையைப் பார்த்துக்கிட்டிருந்தியே… எதுவும் அடி கிடி பட்டிருக்கா? காட்டு…” என்று தலையைப் பார்த்தான்.
”ஒன்னுமில்லண்ணா.. விடு..” என்றான் மீண்டும்! “டேய்.. தலையைக் காட்டு…” என்று சற்று அதட்டியதும், குனிந்து ரகசியமாகக் கேட்டான் இளவமுதன்.
“அண்ணா… எனக்கு கொம்பு முளைச்சிருக்கா பாரு”
”கொம்பா?” என்று ஆச்சரியப்பட்ட இளமாறன், “வால் முளைச்சிடுச்சுன்னு தான் அம்மா அடிக்கடி சொல்வாங்க! புதுசா கொம்பு வேற முளைக்குதா?” என்றான்.
“பார்த்தியா நீ கிண்டல் பண்ற… அதான் சொல்ல மாட்டேன்னுசொன்னேன், போ!” என்று மீண்டும் விலகப் பார்த்தான்.
”சரி…சரி… ஏன் திடீர்னு கேக்குற? யாரையும் போய் முட்டினியா? அவங்க எதாவது சொன்னாங்களா? ச்சீ… இதையெல்லாம் நம்பிக்கிட்டு!”
“ம்ம்… நான் என்ன அவ்ளோ ஏமாளியா? இது மேட்டரே வேற.. செல்போனை நிறைய நேரம் யூஸ் பண்ணா… தலையில கொம்பு முளைக்குதாம்… இன்னிக்கு படிச்சேன்!”
“அதென்ன ஆண்டெனாவா? ஏண்டா அடிச்சு வுடுற?”
“அண்ணா… நெஜமாத்தான்… பாரு” என்று செய்தித்தாளை நீட்டினான் இளவமுதன். இப்போது இளமாறனுக்கும் கிலி பிடித்துக் கொண்டது. இளவமுதனை விட கூடுதலாக அய்ந்து ஆண்டுகள் செல்பேசியைப் பயன்படுத்துபவன் ஆயிற்றே!
அவனுக்கு ஒனிடா டிவி விளம்பரத்தில் வரும் மனிதன் நினைவுக்கு வந்துவிட்டான். ‘ஆஆஆ…” என்று அலறியபடி இருவருமாகச் சென்று அம்மாவிடம் தஞ்சம் புகுந்தனர். இருவர் சொன்ன செய்தியையும் பொறுமையாகக் கேட்டார் அம்மா அனிச்சம். பிறகு வந்திருக்கும் ஆய்வுகள் குறித்து தெரிந்துகொண்டு, இணையத்தில் புகுந்து படித்தார் அனிச்சம்.
கொஞ்சம் பயத்துடன் அம்மா முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு, “அப்படியெல்லாம் சொல்ல முடியாது… இதுவரை செல்போன் பயன்படுத்திக்கிட்டிருக்கிற பெரியவங்களுக்கு பெருசா பாதிப்பு இல்லையாம்… சர்வேல சொல்லிருக்கு!” என்ற பதில் நிம்மதியைத் தந்தது. ”ஆனா… சின்னப் புள்ளைங்களுக்கு தான் வளருது போல” என்று சொன்னபடி கணினியிலிருந்து முகத்தைக் குழந்தைகளை நோக்கித் திருப்பினார்.
இப்போது இளவமுதனும், இளமாறனும் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு மீண்டும் தலையைத் தொட்டுப் பார்க்கத் தொடங்கினர். ”அங்க இல்ல… இங்க பாருங்க…” என்று பிடரியின் கீழ்ப்பகுதியைத் தொட்டுக் காட்டினார் அனிச்சம்.
”இங்கேயா? தலையில மாடு மாதிரி இல்லையா?” என்று சொன்ன இளமாறனின் பதிலில் கொஞ்சம் தணிவு தெரிந்தது. ஆனால், இளவமுதனுக்கு மனநிலை இன்னும் மாறவில்லை.
விளக்கத் தொடங்கினார் அனிச்சம். “ஆஸ்திரேலியாவில் உள்ள சன்ஷைன் கோஸ்ட் பல்கலைக்கழகத்தில் பயோ மெக்கானிக்ஸ் துறையைச் சேர்ந்தவங்க 2016-ஆம் ஆண்டு ஆய்வு ஒன்று நடத்தியிருக்காங்க… அதில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 108 மாணவர்கள் (45 ஆண்கள்; 63 பெண்கள்), மாணவர்களல்லாத 110 பேர் (50 ஆண்கள் 60 பெண்கள்)ன்னு மொத்தம் 218 பேர்ட்ட ஆய்வு நடத்திருக்காங்க..
இந்த எல்லோருமே 18லிருந்து 30 வயசுக்குள் உள்ளவங்க.. அவங்களோட தலையை எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கும்போது பின்னந்தலைன்னு சொல்லப்படுற பிடரியில வழக்கத்துக்கு மாறா எலும்புல வளர்ச்சி இருந்ததைப் பார்த்திருக்காங்க… அது தசை நார்ன்னு சொல்ற ligament எலும்போட சேர்ந்திருக்க பகுதிகளில் ஏற்படும் எலும்பு போன்ற வளர்ச்சியாகவும் இருக்கலாம்.”
“எல்லாருக்குமா இருந்தது?” சந்தேகத்தைக் கிளப்பினான் இளமாறன்.
”இல்ல.. இல்ல. enthesophytes அல்லது enlarged external occipital protuberance சொல்லப்படுற இந்த வளர்ச்சி 41% பேருக்கு இருந்திருக்கு.
அதில குறிப்பா ஆண்கள்ல 67% பேருக்கும், பெண்கள்ல 20.3% பேருக்கும் வளர்ச்சி இருந்திருக்கு. அதே மாதிரி வளர்ந்த அளவைக் கணக்கில எடுத்துக்கிட்டா, அதிகபட்சமா 35.7 மிமீ, அதாவது மூன்றரை செண்டிமீட்டர் வளர்ச்சி ஆண்களுக்கு இருந்திருக்கு, பெண்களுக்கு கொஞ்சம் குறைவு. அதாவது அதிகபட்சமா பெண்களில் 25.5மிமீ வளர்ச்சி ஒருத்தருக்கு இருந்திருக்கு. அதாவது ஆண்களைவிட ஒரு செமீ குறைவு”
”அது ஏன் ஆண்களுக்கு அதிகம் பாதிப்பு; பெண்களுக்குக் குறைவு?” நியாயமான கேள்வி இளவமுதனுடையது.
”ஆண்கள் தான் அதிகம் ஸ்மார்ட் போன்ல கேம்ஸ் விளையாடுறாங்களாம். நிறைய படம் பார்க்கிறாங்களாம். பெண்கள் செல்பி எடுக்கிறது; அப்பப்போ இன்ஸ்டாகிராம் போறதுன்னு மேலோட்டமா இருக்காங்க போல! அதாவது அதிக கவனத்தோடு உத்துப் பார்த்து கழுத்தை நிறைய குனிஞ்சு எப்பவும் அதையே பார்த்திக்கிட்டிருக்கிறது ஒரு காரணம். அதிலையும் மாணவர்கள் அல்லாதவர்களை விட பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்த வளர்ச்சி அதிகம் இருந்திருக்கு.”
“ஒருவேளை அவங்க படிக்கிறதும் கூட காரணமா இருக்குமோ? அதுக்கும் புத்தகத்தை குனிஞ்சு தானே படிக்கணும்” என்று இளவமுதன் படிப்பதைக் காரணம் காட்ட முனைந்தான்.
“இனிமே… நிமிர்ந்து விளையாடணும்” என்று வாய்விட்டு உறுதியெடுத்துக் கொண்டான் இளமாறன்.
அவன் தலையில் செல்லமாகத் தட்டிய அனிச்சம் சொன்னார்: “இன்னும் இது உறுதியான முடிவான தகவல் இல்லை. இன்னும் நிறைய ஆய்வுகள் நடக்கணும். இப்போ சோதிக்கப்பட்ட 218 பேருடைய முடிவுகளை மட்டும் வச்சு உறுதியா சொல்ல முடியாது. அவங்களுடைய பிற விவரங்கள் தெரியாம இது சரியான முடிவு இல்லைன்னு சிலர் சொல்றாங்க… ஆய்வு செய்தவர்களும் பெரியாவர்களிடத்தில் சர்வே நடத்திருக்காங்க. அதில் பெரிய அளவில் பெரியவர்களுக்கு பாதிப்பு இல்லைன்னு தெரிய வந்திருக்கு.
கழுத்தை அதிகம் வளைச்சும், முன்புறமா அதிகம் அழுத்தம் கொடுத்தும் பயன்படுத்துறதால, தானாக சமநிலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் கழுத்துக்கும் தலைக்கும் ஏற்படுது. இதனால
கழுத்தும் தலையும் சேரும் பகுதியில் பின் மண்டையில உருவாகிற இந்த அளவு மாற்றம் வெறும் தசைநார் திரட்சியா? எலும்பு வளர்ச்சியா? இன்னும் அடுத்தடுத்த ஆய்வுகள்ல என்ன ஆகும்ங்கிறதெல்லாம் தொடர்ந்து ஆராயப் போறாஙக. இதெல்லாம் செல்போன், ஸ்மார்ட் போன் பயன்படுத்துறனாலதானாங்கிறதையும் சந்தேகமா கிளப்புறாங்க”
”அப்போ இது உண்மையில்லையா?”
”கொம்பு வளருதோ இல்லையோ? நமக்கு மூளையில் பல்வேறு பாதிப்புகளை அதிகமான செல்போன் பயன்பாடு ஏற்படுத்தும், கண்டிப்பா குனிஞ்சே இருக்கிறதனால, முதுகுத் தண்டுவடத்தில், கழுத்து எலும்புகளில் நிறைய பாதிப்புகள் இருக்கு. கையில் கட்டைவிரல் பலருக்கு பாதிப்பாகுது. கழுத்து நரம்புகள் பாதிக்கப்படுறதுனால வயதாக ஆக பிரச்சினைகள் எழ வாய்ப்பிருக்கு. கண்ணுல ஈரத்தன்மை குறையுது. இன்னும் பிரச்சினைகளை அடுக்கிக்கிட்டே போகலாம். பரிணாம வளர்ச்சியில இப்படியான மாற்றங்கள் நடக்கிறது இயல்புதான். இந்த ஆய்வில கண்டுபிடிச்ச எலும்பு வளர்ச்சியும் வேகமாக நடக்கக் கூடியதில்லை. அது மிகமெதுவாக நடக்குற ஒன்று!”
“ஓ!”
“2018-இல் இதே ஆராய்ச்சியை இன்னும் வேற விதமா செஞ்சு பார்த்திருக்காங்க. அதில 13 முதல் 16 வயதுள்ள நான்கு பேரை எடுத்து, அவங்களுக்கு எல்லாவிதமான சோதனைகளும் செஞ்சிருக்காங்க. அவங்களுக்கு சோதிக்கும்போது அவங்க நாலு பேருக்கும் இதே போன்ற எலும்புகள் துருத்தி வளர்வது தெரிந்தது.. அவங்களுக்கு எந்தப் பெரிய ஒற்றுமையும் இல்ல. ஆனால், அவங்க பெற்றோர்கிட்ட கேட்கும்போது, அந்த நான்கு பேரும் எந்நேரமும் டிவியையும், செல்போனையும் சின்ன வயசிலருந்தே அதிகம் பயன்-படுத்துனவங்கங்கிற உண்மை தெரிய வந்தது! எப்படி வசதி?”
”ஆக, செல்பேசியைத் தேவைக்குப் பயன்படுத்தினா போதும்கிறீங்க! சரி, போனைக் கொடுங்க… இந்த விசயத்தை அப்பாகிட்ட சொல்லிடுவோம்” என்று அமுதன் குறும்பாகக் கூற, ”அடி” என்ற படி அவனை விரட்டினார் அனிச்சம்.