தவளை கத்தினால் மழை வருமா?
அ.இளங்கோவன்
இந்த ஆண்டும், எப்போதும்போல் கோடை விடுமுறைக்கு தன் தாத்தாவின் சிற்றூருக்கு வந்திருந்தாள் அந்தச் சிறுமி.
மலைப்பகுதியை ஒட்டிய சிற்றூர். அதில் தோட்டத்துடன் கூடியது தாத்தாவின் வீடு என்பதில் அவளுக்குள் எப்போதும் ஒரு பெருமிதம் இருந்தது!
வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் மரம், செடிகளுக்கு இடையில் நடப்பதும், ஓடுவதும், விளையாடுவதும் அவளுக்குப் பிடிக்கும். புதிய புதிய பறவைகளும், விதவிதமான பூச்சிகளும் அவற்றின் அழகழகான குரல் ஒலிகளும் அவளுக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் தந்தன.
அன்றும் தாத்தாவோடு பேசிக்கொண்டே அந்தப் பசுமை சூழ்ந்த பகுதியில் உலாவிக் கொண்டிருந்தாள். தன் புத்தகத்திலும், தொலைக்காட்சியிலும், பார்த்த பறவைகள், பூச்சிகளை நேரில் பார்த்தபோது மனதில் மகிழ்ச்சியும் துள்ளலும் ஏற்பட்டது. அய்யம் ஏற்படும்போது தாத்தாவிடம் கேள்வி கேட்டாள். அவரும் அவளுக்குப் பதில் சொல்வார். அவர்கள் இயற்கையை ரசித்தபடி இயற்கையின் சிறு துளியாக நடந்து கொண்டிருந்தனர்.
திடீரென சில்லென்ற காற்று வீசியது… ஆசிரியர் கண்டிக்கும்போது நிற்கும் மாணவரைப் போல் குறுக்கே கைகளை அழுத்திக் கட்டிக் கொண்டாள்…
குளுமையான காற்று அவளைத் தாலாட்டிச் சென்றது…
வெளிச்சம் குறையத் தொடங்கியது.
சற்று தொலைவில் கிடந்த குட்டையிலிருந்து ஏதோ ஒரு தவளை க்ஃஅக்கஃகக்க எனக் கரகரத்த குரலில் கத்தத் தொடங்கியது.
அந்தத் தவளையைத் தொடர்ந்து இன்னொரு தவளை தனது கரகர குரல்வளத்தை காட்டத் தொடங்கியது. பிறகு இன்னொன்று… பிறகு இரண்டு மூன்று… பிறகு நான்கைந்து… அப்புறம் பலப்பல தவளைகள் கரகர என குரலொலித்துக் கத்தின.
தவளைகளின் கரகரக் குரலை ஆச்சரியத்துடன் கேட்ட சிறுமி சத்தம் அதிகமானவுடன் தாத்தாவிடம் கேட்டாள்.
என்ன தாத்தா அது… சத்தம்?
அது தவளைகள் போடும் சத்தம்…
ஏன் இப்படிக் கத்துகின்றன…
தவளைகள் இப்படிக் கூக்குரலிட்டால் மழைவரும்…
என்னது… தவளைகள் கத்தினால் மழை வருமா? அவள் நம்பமுடியாத ஆச்சரியத்துடன் கேட்டாள்.
* * *
இரவு தூங்கும் முன்பு தொலைக்காட்சி பார்த்தபடி தன் அருகில் படுத்திருந்த தந்தையிடம் கேட்டாள். தவளை கத்தினால் மழை வருமா அப்பா?
அவர் தலையைத் தடவிக் கொடுத்தபடி சொன்னார். சில்லென்ற காற்றையும்… மேக மூட்டத்தையும் பார்த்தால் நாம் மழை வரப் போகிறது என்ற உணர்கிறோம் இல்லையா? அதே போல தவளைகளும் மழை வரப்போகிற சூழ்நிலையை உணர்ந்துகொண்டு மகிழ்ச்சியில் கத்திக் குதிக்கின்றன. அவ்வளவுதான்.
மழை வரப் போவது தெரிந்தவுடன் கத்திக் கொண்டாடுமே தவிர, தவளை கத்துவதால் மழை வராது!
அப்பா சொல்வது சரி என அவள் மனதிற்குத் தோன்றியது. நமக்கு மகிழ்ச்சி ஏற்படுவது போல தவளைகளும் மழை வரப்போகிற மகிழ்ச்சியால் சத்தம் போட்டுக் கொண்டாடும் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள்.
அப்பா சொன்னார், இந்தத் தவளை மட்டுமல்ல. எந்தத் தவளை மொழியில், எப்படிப்பட்ட தவளை கத்தினாலும் கூக்குரலிட்டாலும் அதனால் ஒரு போதும் மழை வரவே வராது!.