விண்வெளியில் வீடு கட்டுவோம் வாங்க!
சரவணா இராஜேந்திரன்
இன்னும் 40 ஆண்டுகளில் பூமியில் மக்கள் தொகை அதிகரித்துவிடும். இதன் காரணமாக வனங்கள் அழிக்கப்படும், இதன் மூலம் பிற உயிரினங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும், மனித இனம் பாதுகாக்கப்படவேண்டும். அதே நேரத்தில் பூமியில் பிற உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது. அப்படியென்றால் வருங்கால மக்கள் தொகை பெருக்கத்தில் இருந்து எப்படி சமாளிப்பது? இதற்கு எளிய வழி நாம் விண்வெளியில் வீடு கட்டிக்கொள்வது.
பூமியைப் பாதுகாப்பது குறித்து 1980-களிலேயே ஒரு திட்டம் புவிப்பாதுகாப்பு ஆர்வலர்களால் வகுக்கப்பட்டது, அதாவது ஒட்டுமொத்த மனித இனமும் ஆஸ்திரேலியாவிற்கு இடம் பெயரவேண்டும், சீனா போன்ற வளமான பகுதியை விவசாயத்திற்காக விட்டுவிட வேண்டும், மற்ற பகுதிகளில் இயற்கையை அதன் போக்கில் விடவேண்டும் என்று கூறினர். ஆனால், இதற்கு எந்த ஒரு நாடுமே ஒத்துவராது,
இந்த நிலையில் அறிவியல் வளர்ச்சி நம்மை விண்வெளியில் வீடுகட்டத் தூண்டியுள்ளது.
விண்வெளியில் வீடு என்பது புதியதல்ல, 1980களில் சோவியத் ரஷ்யா கட்டிய மிர் விண்வெளி நிலையம் (Mir Space Station), தற்போது உலகின் பல நாடுகள் இணைந்து கட்டியுள்ள அய்.எஸ்.எஸ் எனப்படும் பன்னாட்டு விண்வெளி நிலையம் (International Space Station) போன்றவை விண்வெளியில் கட்டப்பட்ட ஆய்வுக்கூடங்கள் கிட்டத்தட்ட வீடுகள் தான்.
இந்த விண்வெளி ஆய்வுக் கூடத்தில் விண்வெளியில் பயிற்சிபெற்ற வானியல் ஆய்வாளர்கள் மட்டும் அங்கு சென்று ஆய்வு செய்யமுடியும், மற்றபடி நாம் பூமியில் வாழ்வது போல் சுதந்திரமாக வாழமுடியாது,
அப்படியென்றால் பூமியைப் போல் ஒரு செயற்கை உலகத்தை விண்வெளியில் உருவாக்கமுடியுமா? இது சாத்தியமா? என்றால்,
அதற்கான விடை சாத்தியமே!
என்னதான் பூமி நமக்கு அத்தனை வசதிகளைத் தந்தாலும், நமக்கு என்று சில வசதிகளை நாம் பூமியில் ஏற்படுத்திக்கொள்ள முடியாது, உண்மையைக் கூறினால், நம்மில் ஒரு சிலருக்கு இரவு பகல் என்பது பிடிக்காத ஒன்றாக இருக்கலாம், எதிர்காலத்தில் வரும் மனிதர்கள் எதற்கு இந்த இரவு பகல் என்று கேள்வி கேட்க ஆரம்பிப்பார்கள்.
இன்று கூட இரவுப் பணிபுரிபவர்களின் சிலருக்கு பகல், இரவு என்ற வேறுபாடு தெரிவதில்லை. அப்படி என்றால் நாம் விண்வெளியில் கட்டப்போகும் புதிய உலகத்தில் இரவு, பகல் இருக்கக் கூடாது, அதற்கான வசதிகளை நாம் செய்துகொள்ளலாம்.
சுமார் 4 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 2 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட பெரிய எரிகல் ஒன்று பூமியில் மோதியது. அதனால் மிகப் பெரிய இனமாக அன்று இருந்த டைனோசர் இனம் முற்றிலும் அழிந்தது.
அதே போன்று ஒரு பெரிய விண்கல் பூமியை எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம். சூரிய மண்டலம் உருவானபோது கோள்களில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக உருவான பல்வேறு வடிவிலான விண்கற்கள் செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையே உள்ள விண்வெளிப் பாதையில் சுற்றிக்கொண்டு வருகின்றன. அந்தக் கற்கள் இமயமலையைவிட பெரிதாகவும், கால்பந்து அளவு சிறியதாகவும் கூட கோடிக்கணக்கில் உள்ளன. இவை சுற்றிவரும் பகுதியை ஆஸ்டிராய்டு பெல்ட் என்று கூறுவார்கள்.
இந்தப் பகுதியில் உள்ள விண்கற்கள் வியாழன் கோளின் அதிக ஆற்றல் வாய்ந்த ஈர்ப்புவிசையால் வியாழனுக்கும் செவ்வாய்க்கும் இடையே சுற்றிவருகின்றன. இதில் சுமார் 17 லட்சம் விண்கற்கள் பூமியை நோக்கி பாதை மாறி வரக் கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இவை எப்போது வரும் என்று கணிப்பது கடினமாக உள்ளது. வியாழன் கோளில் ஏற்படும் அதிர்வுகள், ஆஸ்டிராய்ட் பெல்டைக் கடந்து வரும் எரிநட்சத்திரங்கள் போன்றவை விண்கற்களின் சுற்றுவட்டப் பாதையில் தாக்கத்தை ஏற்படுத்தி அதன் மூலம் சில கற்கள் பாதை மாறி பூமியை நோக்கிப் பயணமாகும் வாய்ப்புகள் உள்ளன. இப்படி பாதைமாறி மோதிய விண்கற்களால்தான் பூமியைப் போன்ற பசுமையாக உயிரோட்டமாக இருந்த செவ்வாய்க்கோள் இன்று முற்றிலும் அழிந்து துருப்பிடித்த இரும்புத் துகள்களால் நிறைந்து வானில் நமக்கு சிவப்பு நிறத்தில் புள்ளியாகக் காட்சிதருகிறது.
நாளை ஒரு விண்கல் பூமியையும் தாக்கி செவ்வாய் கோள் போல் ஒன்றுமில்லாத கோளாக மாற்றிவிட முடியும். அதிலிருந்து நாம் பாதுகாத்துக்கொள்ள ஒரே வழி செயற்கையான உலகை உருவாக்குவதுதான்.
முதலில் விண்வெளியில் வீடு கட்டினால் அதாவது, உலகை நாம் தயார் செய்தால் என்ன என்ன பாதிப்பு என்பதை பட்டியலிடுவோம்.
(அடுத்த இதழில்…)