காரணமின்றி ஏற்காதீர்கள் எழுதும் முன் போடுவது பிள்ளையார் சுழியா?
சிகரம்
எழுதத் தொடங்கும் முன் பிள்ளையார் சுழி போடுவது வழக்கத்தில் உள்ளது. இன்றைக்கும் இவ்வழக்கம் பலரிடம் உள்ளது.
பிள்ளையார் சுழி என்பது உ வடிவத்தில் எழுதப்படுவதாகும். எந்தச் செயலையும் தொடங்குவதற்கு முன் பிள்ளையாரை வணங்குதல் என்னும் பிற்கால வழக்கத்தின் அடிப்படையில், எழுதத் தொடங்குவதற்கு முன்னும் பிள்ளையாரை வணங்க அவ்விதம் எழுதப்படுவதாகச் சிலர் கூறுகின்றனர்.
ஆனால், பிள்ளையாருக்கும் இச்சுழிக்கும் தொடர்பு இல்லை. இச்சுழி பிள்ளையார் சுழியும் அன்று.
அக்காலத்தில் பனை ஓலையில் எழுத்தாணி (ஊசி) கொண்டுதான் எழுதுவர். அவ்வாறு எழுதத் தொடங்குவதற்கு முன், பனை ஓலை எழுதுவதற்குப் பக்குவமாக உள்ளதா என்பதை அறிய முதலில் எழுத்தாணியால் எழுதிப் பார்த்தனர்.
தற்போது புது பேனா வாங்கினால்கூட முதலில் எழுதி அல்லது கிறுக்கிப் பார்க்கிறோம் அல்லவா? அதைப் போலத்தான்.
பனை ஓலையில் சுழிபோடுவதும், மேலிருந்து கீழ் வளைகோடு போடுவதும், படுக்கைக் கோடு போடுவதும் போட்டுவிட்டால் எல்லா எழுத்துகளையும் எழுதி விடலாம். இதனால்தான் இம்மூன்றையும் உள்ளடக்கிய ஒரு வடிவத்தை முதலில் பனை ஓலையில் எழுதிப் பார்த்தனர். அதுதான் உ வடிவச் சுழி.
இதில் வட்டவடிவம் O, மேலிருந்து கீழ் இழுக்கப்படும் வளைகோடு ), மூன்றாவதாக கிடைக்கோடு– -. இம்மூன்றும் கொண்ட உ என்னும் எழுத்து வடிவம்.
எனவே, உ வடிவிலான இந்த எழுத்தை எழுத பனை ஓலை பதமாக இருந்தால் எல்லா எழுத்துகளையும் எழுத முடியும் என்பதால், சோதனையாக எழுதப்படும் எழுத்துதான் உ என்ற வடிவம். ஆகையால் இது பிள்ளையார் சுழியல்ல.
’உ’ என்னும் எழுத்துக்கும் பிள்ளையார் அல்லது விநாயகர் போன்ற எந்தச் சொற்களுக்கும், உருவத்துக்கும் தொடர்புமில்லை.
இப்போது தாள்களில் எழுதும்போது, இப்படிச் சோதித்துப் பார்க்க வேண்டிய தேவை இல்லை. ஏனென்றால், தாளில் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம்.
ஆனால், இவ்வுண்மை புரியாமல் எழுதுவதற்கு அப்படியொரு சுழி போட்டு விட்டுத்தான் எழுத வேண்டும். அப்போதுதான் நன்மை கிடைக்கும் என்று நம்புகின்றனர்.
பத்திரிகை போன்றவை அச்சிடும்போதுகூட இச் சுழியைத் தலைப்பில் போடுகின்றனர். இது அறியாமையின் அடையாளம்.
கணினியிலும், செல்பேசியிலும் தட்டச்சு செய்யும் காலத்தில் பனைவோலைச் சோதனைச் சுழியை பிள்ளையார் சுழியென்று தவறாகப் பிடித்துக் கொண்டு நிற்காமல், அதனைக் கைவிட்டு அறிவுடன் செயல்பட வேண்டும்.
இறந்தவர் வீட்டிற்குச் சென்று வந்தால் குளிக்க வேண்டுமா?
இக்காலத்தில் உள்ளது போல அக்காலத்தில் அதிகம் விபத்தினாலோ, மாரடைப்பாலோ மக்கள் இறப்பதில்லை. பெரும்பாலும் நோய்வாய்ப்பட்டே இறப்பர்.
நோய்வாய்ப்பட்டு இறந்தவர்களின் உடல் அருகில் சென்று வரும்போது, நோய்க்கிருமிகள் தொற்ற வாய்ப்புண்டு. சிலர் கட்டிப்பிடித்து அழவும் செய்வர். எனவேதான், தூய்மை கருதி இழவு வீட்டுக்குச் சென்று வந்தால் குளிக்க வேண்டும் என்றனர்.
ஆனால், இதை இன்றைக்குக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுகின்றனர். இழவு வீட்டுக்குச் சென்றால் தீட்டு எனவே, குளிக்க வேண்டும் என்றனர்.
நான் முன்னரே குறிப்பிட்டது போல, தீட்டு என்னும் சொல் அசுத்தம் என்னும் அடிப்படையில் வந்ததே ஆகும்.
நோய்வாய்ப்பட்டு இறந்தவர் வீடு நோய்க்கிருமிகள் நிறைந்து காணப்படும். எனவே, அங்கு சென்று வந்தவர்களைக்கூடத் தீண்டக்கூடாது என்று எண்ணினர். அதனால்தான் குளிப்பதோடு மட்டும் நில்லாமல், ஆடையையும் துவைத்து தூய்மை செய்து கொள்ள வேண்டும் என்றனர்.
இன்றைக்கு மாரடைப்பாலோ விபத்திலோ இறந்தவர்களது வீட்டுக்குச் சென்று வந்தால்கூட குளிக்க வேண்டும் என்று சிலர் கட்டாயமாகக் குளிக்கின்றனர். இந்த இறப்பில் நோய்த் தொற்றலுக்கு வழியில்லை. எனவே, இப்படிப்பட்ட இறப்புகளுக்குச் சென்று திரும்பும்போது குளிக்க வேண்டிய தேவை இல்லை.
மேலும், இறப்பு என்பது இழப்பு; அதுவும் ஈடு செய்ய முடியாதது. எனவே, அது மனதிற்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுக்கக் கூடியது. எனவே, குளித்து மூழ்கினால் துன்பம் குறைந்து ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும் என்ற மனநிலை மாற்றத்திற்காகவும் அவ்வழக்கத்தை மேற்கொண்டிருக்கலாம்.
ஆனால், இவ்வுண்மைகளை அறியாது நம் மக்கள் இதை ஒரு வழக்கமாகக் கொண்டு, இறப்பிற்குச் சென்று வந்தால் கட்டாயம் குளித்தே ஆகவேண்டும் என்று எண்ணி, இரவு வேளையில், அதுவும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள்கூட குளிக்கின்ற கொடுமை நிகழ்கின்றது. சில நேரங்களில் குழந்தைகள் தலையில்கூட இரவு வேளையில் தண்ணீரை ஊற்றி, அவர்களின் உடல் நலத்தைக் கெடுத்து விடுகின்றனர்.
எனவே, அறிவியல் நோக்கில், தேவை நேரும்போது, தூய்மை கருதியும், உடல்நலம் காக்கும் நோக்கிலும் குளிக்க வேண்டும். பழக்கவழக்கம் என்பதற்காக தேவையின்றிக் குளிக்க வேண்டியதில்லை.
அறிவுடன் நோக்கின், மருத்துவமனைகளுக்குச் சென்று வந்தால் கட்டாயம் குளிக்க வேண்டும். காரணம், அங்கு பல்வேறு நோயாளிகளும், பலவித கிருமிகளும் அதிகமாகக் காணப்படுதல் இயல்பு. குறைந்தபட்சம் பொது இடங்களுக்கு, பொதுப்போக்குவரத்து சாதனங்களில் பயணித்து வந்த பிறகு கைகளைச் சுத்தம் செய்தல் என்பதும் அவசியம். ஆனால், அதை யாரும் கடைப் பிடிப்பதில்லை. அதற்கு மாறாக தேவையற்ற நேரங்களில் கட்டாயமாகக் குளிக்கின்றனர். எனவே, அறிவுடன் நோக்கி, தெளிவுடன் செயல்படுதல் நல்லது.<