அன்பால் உருவான பாலம்
விழியன்
இரவு முழுதும் சியா எறும்பு தூங்கவில்லை. யாரையும் தூங்கவிடவும் இல்லை. தன் அறையில் இருந்த எல்லா எறும்புகளும் மாறி மாறி கேள்விகள் கேட்டுக்கொண்டே இருந்தன. அன்று காலை சியா எறும்பு பர்பராவின் வீட்டுக்குச் சென்று வந்த கதையினைத்தான் இரவு முழுதும் சொல்லிக்கொண்டு இருந்தது.
“நான் பர்பராவை நிறையமுறை பார்த்திருக்கேன். நாம சாப்பாடு எடுத்துட்டு வரும்போது அடிக்கடி பார்ப்பேன். அது குட்டி தூக்கணாங்குருவி. அது பறக்க கத்துக்கும்போது எல்லாம் நான் பார்த்திருக்கேன். ஒருமுறை ஒரு துண்டு உணவினை கொடுத்தேன். அப்ப இருந்தே நாங்க பார்த்தா சிரிச்சிப்போம். காலையில பார்த்தப்ப ‘என் வீட்டுக்கு வர்றியா?’ன்னு கூப்பிட்டுச்சு. நான் முதல்ல பயந்தேன். ஆனா அந்தச் சிரிப்பில் எந்தத் தீய எண்ணமும் தெரியல. என்னை தன் கால்ல ஏறிக்க சொல்லுச்சு.”
“அடடடடடடடா! அது வீடு இருக்கே… அவ்ளோ அருமையா இருந்துச்சு _ அப்படியே உள்ள நுழைஞ்சு மேல ஏறிப்போற மாதிரி. நாம்ம இந்த பொந்தில வாழறோம், நல்லாத்தான் இருக்கு; ஆனா அங்க நல்ல காத்து வசதி. பயங்கர பாதுகாப்பா இருந்துச்சு. கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோமா அப்ப உடனே அவங்க அப்பாவும் அம்மாவும் வந்தாங்க. என்னை பர்பரா அறிமுகம் செய்து வெச்சது. சில பழங்களை எடுத்துட்டு வந்தாங்க. எனக்கும் கடிக்கக் கொடுத்தாங்க. அவ்ளோ சுவையா இருந்துச்சு தெரியுமா! அப்புறம், ‘பர்பரா, அவங்க கூட்டத்தில சியாவை தேடுவாங்க சீக்கிரம் விட்டுட்டு வா’ன்னு அனுப்பி வெச்சாங்க. அவங்க அப்பாவும் அம்மாவும் மட்டுமே கட்டின கூடாம் அது. ஒருமுறை வெளியவும் சுத்திக் காட்டுச்சு பர்பரா. அங்க ஒரு கெணறு இருக்கில்ல, அதுலதான் அவங்க வீடு இருக்கு.”
இதையேதான் திரும்பத் திரும்பச் சொல்லிக்கிட்டு இருந்துச்சு சியா. “சீக்கிரமா பர்பராவும் பொறியாளராகிடும் _ அதான் எஞ்சினியர். அதுவும் ஒரு வீடு கட்டப் போகுதாம்”. காலையில் தூக்கணாங்குருவி வீட்டிற்கு சியா சென்ற கதை தான் மற்ற அறைகளிலும் ஓடிக்கொண்டு இருந்தது. விஷயம் கேள்விப்பட்ட எறும்பு ராணிக்கு ஒரு யோசனை தோன்றியது. சியாவை அழைத்து அதைப்பற்றி பேசியது. சியாவும் இன்று பர்பராவிடம் பேசுவதாக சொல்லியது.
எறும்புகள் வசிக்கும் பகுதியில் ஒரு பெரிய பள்ளம் இருக்கின்றது. பள்ளத்தின் இந்தப் பக்கம் அவர்களுடைய குகை உள்ளது, ஆனால், உணவு வசதி அவ்வளவாக இல்லை. எல்லாம் தீர்ந்துவிட்டது. வறட்சி. ஆனால், பள்ளத்தின் அந்தப் பக்கம் குளம் இருந்தது. அதனால் அந்த இடம் செழிப்பாக இருந்தது. சிக்கல் என்னவெனில் அங்கே தங்க முடியாது. சில சமயம் நீர் வழிந்து இருப்பிடத்தை நாசமாக்கிவிடும். உணவுக்கு மட்டும் அந்தப் பகுதிக்குச் சென்றுவர வேண்டும். இந்தப் பள்ளத்திற்கும் அந்தப் பள்ளத்திற்கும் இடையில் அய்ந்தடி தூரம்தான் இருக்கும். ஆனால் எறும்புகள் ஒன்று, பள்ளத்தில் இறங்கிச் செல்ல வேண்டும். அதற்கே ஒரு நாளாகிவிடும். இது பல ஆண்டுகளாக பல வம்சங்களாகத் தொடரும் பிரச்சனை. இதனை இளம் பொறியாளர் பர்பரா தீர்க்குமா என்று ஆலோசனை கேட்கவே சியாவை ராணி எறும்பு அனுப்பியது.
செய்தி அறிந்ததும் பர்பராவின் பெற்றோர் இருவரும் உதவுவதாகக் கூறினார்கள். ‘பர்பரா, உனக்கு நாங்கள் உதவுகின்றோம். எப்படி என்ன செய்கின்றோம் என்பதைக் கவனி. அப்போதுதான் நீயும் பொறியாளராக மாற முடியும்’ என்றபடி, எறும்புகளின் கூடாரம் அருகே வந்தன. பர்பராவை ஒரு நோட்டில் குறிப்புகளை எடுக்கச் சொன்னார்கள். மொத்தம் எத்தனை எறும்புகள், எத்தனை நாளுக்கு ஒருமுறை சென்று வருவார்கள், ஒரு எறும்பின் எடை என்ன, எவ்வளவு மழை இந்தப் பகுதியில் பெய்யும், வேறு என்ன விலங்குகள் வசிக்கின்றன என எல்லாத் தகவலையும் திரட்டினார்கள். “பாலம் கட்டிடலாம்” என்றதும் எறும்புகளுக்குப் பெரும் மகிழ்ச்சி.
”ஒரு பெரிய மரக்கிளையைப் பார்த்து வெச்சிருக்கோம். அதனை இங்கே எடுத்து வந்துவிட்டால் பாலம் கட்டுவதை முடிச்சிடலாம். எங்களால தூக்க முடியல” என பர்பராவிடமும் சியாவிடமும் சொல்லிவிட்டு அன்றைய உணவினைத் தேடப் பறந்தனர். சியாவும் பர்பராவும் எப்படி அந்தக் கிளையை எடுத்துவருவது என யோசித்தனர். சியாவிற்கு ஒரு யோசனை தோன்றியது. அதன்படி இரண்டு புறாக்களைச் சந்தித்தன.
புறாக்கள் அந்தக் கிளையை இலகுவாக எடுத்து வந்து வைத்தன. பர்பரா இரண்டு முனையையும் இறுக்கமாக சில தழைகளை வைத்துக் கட்டியது. பாலத்தில் எறும்புகள் கடக்கத் தயாராயின. சியாவே முதல் எறும்பாக இந்தப் பக்கம் இருந்து அந்தப் பக்கம் கடந்தது. எல்லா எறும்புகளும் கைதட்டி ஆரவாரம் செய்தன. எல்லோரும் பர்பராவிற்கு நன்றி தெரிவித்தனர்.
இரவு விருந்தில் ராணி எறும்பு, “ஆமாம் சியா, என்ன சொல்லி புறாக்களை கிளைகள் கொண்டுவர சம்மதம் வாங்கினாய்?” எனக்கேட்டது. “வேடனிடம் இருந்து புறாக்களை எறும்பு காப்பாற்றிய கதையை நினைவூட்டினேன். அவை சிரித்தபடியே, ‘இல்லை என்றாலும் நாங்க உதவுவோம் சியா’ என்றன” என்றதும் “ஆஹா ஆஹா” என மற்ற எறும்புகள் கத்தின.