கதகதப்பு
பூராயணியும் மாலதியும் இளஞ்சிவப்பு நிற நீண்டபுல்லின் கீழே நீந்தியபடி முந்தைய தினம் பார்த்த சினிமாவைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள். இருவரும் ஜெல்லி மீன்கள். பாக்கூர் என்பது அவர்கள் பகுதியின் பெயர். ஆழ் கடலில் சுமார் இரண்டாயிரம் அடி ஆழத்தில் உள்ளது பாக்கூர். முந்தைய தினம் இவர்கள் வகுப்பே ‘த லயன் கிங்’ என்னும் படத்தினைப் பார்த்தார்கள். பூராயணிக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. “அதென்னப்பா, ஆண்தான் காட்டை ஆளணுமா? தலைவனை கூட்டாகச் சேர்ந்துதானே முடிவு செய்யணும்? ராஜான்னா அழகாத்தான் இருக்கணுமா? ஏன் கழுதப்புலிக்கு என்ன குறைச்சல்? தனக்கான உணவைத் தானே தேட்றது தானே சரி, மத்தவங்களை நம்பி இருப்பது எப்படி வீரம்?” என கோபமாக மாலதியிடம் கேட்டுக்கொண்டு இருந்தது பூராயணி ஜெல்லி மீன்.
“எதுக்கு பூராயணி இவ்ளோ கோபப்பட்ற? உன் தொப்பி அழகா வளர்ந்திருக்கு” என மாலதி பேச்சை மாற்றியது.
டங், டங், டங்…
அது அந்தக் கடல் பகுதியின் அபாய ஒலி. பூராயணியும் மாலதியும் இது வரையில் மூன்றே மூன்று முறை மட்டுமே தம் வாழ்நாளில் அந்த ஒலி அடிக்கக் கேட்டிருக்கின்றார்கள். அதனைக் கேட்ட இருபது நிமிடத்திற்கு எல்லோரும் பாக்கூரின் மய்யப் பகுதியில் இருக்கும் மிகவும் பழமை வாய்ந்த மரத்தின் மீது கூடிட வேண்டும். ஊரின் தலைமை உயிரினங்கள் அங்கே நீந்திக்கொண்டு இருப்பார்கள். அந்த மரத்தைச் சுற்றி பாதுகாப்பு வளையம் போல சுறா மீன்கள் சூழந்து கொள்ளும். எல்லோரும் அந்தப் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்த பிறகுதான் என்ன செய்தி என்று கூறுவார்கள். பூராயணியும் மாலதியும் வேகவேகமாக நீந்தி அந்த மரத்தினை அடைந்தார்கள். தன் வகுப்பு நண்பர்கள் நிலா, சூரி, பட்லா, டிச்கோமெடுசா, ராகோமெடுசே என எல்லோரும் வந்துவிட்டார்கள். சிலர் தன் பெற்றோரின் பின்னால் நின்றுகொண்டார்கள். இதற்கு முன்னர் ஒருமுறை ஒரு கப்பல் விபத்துக்குள்ளாகி விழுந்துவிட்டது, அதனால் பாதிப்பு ஏற்படுமா என உஷார்படுத்த ஒரு முறை அபாய ஒலி எழுப்பி இருந்தார்கள். மற்றொரு முறை அந்தப் பகுதியின் மூத்த தாயி மங்காத்தா ஆமை (450 வயசு) இறக்கும் தறுவாயில் எல்லோரையும் அழைத்து கடைசியாகப் பார்த்தது. மற்றொரு முறை பக்கத்து கடல் பகுதியில் இருந்து ஒரு நச்சுப் பாம்பு இங்கே வந்து சேட்டை செய்தபோது கைது செய்திருந்தனர். இந்த மூன்று விஷயத்திற்காக மட்டுமே அபாயச் சங்கு ஒலித்திருந்தது.
“ஏய், என்னாச்சுப்பா?”
“தெரியல. யாரோ நம்ம பகுதிக்குப் புதுசா வந்திருக்காங்க”
“ஏதாச்சும் போரா?”
ஊரில் தலைமை உயிரினம் பேசத்துவங்கியது. “நண்பர்களே, நம்மிடம் உதவி கேட்டு சில நண்பர்கள் வந்துள்ளார்கள். நம் பகுதிக்குப் புதிதாக வரும்போது நம் எல்லோர் அனுமதியுடனே வரவேண்டும் அல்லவா? அதனால் ஊர்கூடி முடிவு செய்யவே இந்தக் கூட்டம்.”
மரப் பொந்தினை நோக்கி, “எல்லோரும் வெளியே வாங்க” என்றதும், பொந்தில் இருந்து இதுவரையில் பார்த்திராத ஓர் உயிரினம் வெளியே வந்தது. வந்தது அல்ல; வந்தன. சுமார் 29 பேர்!
“யே, யாருப்பா இவங்க. பார்த்ததே இல்லையே!” – என்றது பூராயணி.
கண்ணாடியைச் சரி செய்தபடியே முன்னே வந்த அவர்களின் அறிவியல் ஆசிரியரான மைத்ரோனி, “இதன் பெயர். செதில் கால் நத்தைகள். இவர்களை மனிதர்கள் 2001ஆம் ஆண்டுதான் முதன்முதலாகப் பார்த்தார்கள். ஆனால், கடல் வாழ் உயிரினங்களுக்கு இவர்களை நன்கு பரிச்சயம் உண்டு. ஆழமான கடல்பகுதியில் மட்டுமே வாழ்வார்கள். சுமார் மூவாயிரம் அடிக்கு அடியில். உலகில் மூன்றே மூன்று பகுதியில் மட்டுமே இவர்களை தற்சமயம் காணலாம். இவங்க…”
பின்னாடி இருந்து சில குசுகுசுப்புகள் வந்ததால் மைத்ரோனி அமைதியானது. “ஏதாச்சும் சம்பவம் பார்க்கலாம்னு வந்தா இங்கேயும் அறிவியல் வகுப்பாக்கும்” என்றது பட்லா. செதில் கால் நத்தைகளின் ஓடுகள் ஒவ்வொன்றும் மிக அழகாக இருந்தன. குட்டி நத்தைகள் தம் தலையை வெளியே நீட்டிப் பயத்துடன், சுற்றி இருந்தவற்றைப் பார்த்தன.
“மைத்ரோனி சொன்னது போல இவர்கள் செதில் கால் நத்தைகள்தான். இப்ப இவங்களுக்கு ஆபத்து வந்திருக்கு. இவங்க உயிரினமே அழியிற நிலைக்கு ஆளாகிட்டாங்க. மனிதர்கள் கடலுக்கடியில் கனிம/தனிம வளங்களுக்காக சுரங்கங்கள் தோண்டுவதால் இவங்களுக்கு பாதிப்பு உள்ளாகி இருக்கு. தேவையான உணவு கிடைப்பதில்லை. நம்மகிட்ட அடைக்கலம் தேடி வந்திருக்காங்க….”
கூட்டத்தில் ஒரே சலசலப்பு. குட்டிப் பசங்க எல்லோருக்கும் கோவம் உச்சத்துக்கு ஏறியது. “இந்த மனுஷங்கள சும்மா விடக்கூடாது. எல்லோரும் வாங்க, ஒண்ணா போய் அவங்கள காலி செய்துட்டு வந்திடலாம். நாம தூக்கி சாப்பிட்டா அவங்க நிலைமை என்னாவது. பார்த்திடுவோம் வாங்க” என்றது நிலா.
“அட, என்னப்பா இவ்ளோ கோபப்பட்றீங்க. இந்தப் பூமியில எல்லோரும் வாழ உரிமை இருக்கு. அவங்க வாழவும் உரிமை இருக்கு. தெரியாம இதெல்லாம் செய்யறாங்க” என்றது ஊர் நாட்டாமை.
“அதுக்குன்னு சும்மா விட்றதா? நம்ம எல்லோரையும் அழிச்சிடுவாங்க போலயே-!” பூராயணி.
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது. அந்த உலகத்தில் இருக்கற குட்டிப் பசங்களுக்கு விஷயத்தைச் சொல்லிட்டா, அவங்க கவனிச்சிப்பாங்க. நான் நம்புறேன்” என்று எல்லோர் வாயையும் அடைத்தது.
முழு வெள்ளையில் இருக்கும் ஜெல்லி மீன் சார்சரா மெல்லப் பறந்து, …ச்ச… மெல்ல நீந்தி ஒரு குட்டிச் செதில் கால் நத்தையிடம் சென்றது. “வா, என்கூட” என அழைத்தது. ஒவ்வொரு ஜெல்லி மீனாகச் சென்று ஒவ்வொரு நத்தையாக அழைத்துச் சென்றன. “எங்க வீட்ல தங்கிக்கோ. நான் உனக்கு சாப்பாடு தேடி எடுத்து வர்ரேன்” என்றன சிறுசுகள்.
“ஆமாம்பா, இந்த செதில் கால் நந்தைகளுக்கு நிரந்தரமா ஓர் இடம் அமைக்கும் வரை குட்டிப் பசங்களுடன் தங்கட்டும்”
கூட்டம் கலைந்தது என எல்லோரும் கிளம்பினார்கள்.
சிறுசுகள் கூட்டமாகக் கூடி நத்தைகளிடம் பேசிக்கொண்டு இருந்தன.
“நீங்க ‘லயன் கிங்’ பார்த்தாச்சா?”
“உன்னைத் தொட்டுப் பார்த்துக்கவா? அய்யோ சொரசொரப்பா இருக்கீங்களே”
“மாமுனி கீரை இருக்கு, சாப்பிட்றியா? நேத்து தான் பறிச்சிட்டு வந்தேன்”
எல்லா நத்தைகளும் கண்களில் கண்ணீருடன் பாக்கூருக்கு நன்றி தெரிவித்தன. செதில் கால் நத்தைகளை (Scaly foot Nails) அழியக்கூடிய ஆழ்கடல் உயிரினங்களில் மனிதன் சேர்த்துள்ளான் _ கண்டுபிடித்த 18 ஆண்டுகளிலேயே!
“நத்தைகளா, எல்லோரும் இரவு எங்க வீட்டுக்கு வந்திடுங்க… தண்டு ஃப்ரை செய்து வைக்கிறேன்” என கத்திக்கொண்டே சென்றது ஆசிரியர் மைத்ரோனி.
ஜெல்லி மீன்களைப் பற்றிக்கொண்டது அத்தனை கதகதப்பாய் இருந்தது.