விண்வெளியில் வீடு கட்டுவோம் வாங்க!
கடந்த இதழ் தொடர்ச்சி…
சரவணா இராஜேந்திரன்
விண்வெளியில் வீடு கட்டினால் என்னென்ன பாதிப்புகள் வரும் தெரியுமா?
1. கதிரியக்கத் தாக்குதல்.
2. விண்வெளியில் சுற்றிவரும் செயற்கைக்கோள் மோதல்.
3. விண்கற்கள் மோதல்.
4. வியாழன், மற்றும் சூரியன் ஈர்ப்புவிசை அபாயம்
5. நமது வீடு சுற்றுவட்டப்பாதையில் இருந்து விலகி, விண்வெளியை நோக்கிப் பயணமாகும் அபாயம்.
6. கடுமையான வெப்பம் மற்றும் இரும்பையே உறையவைக்கும் கடுங்குளிர்.
7. அவ்வப்போது வரும் எரிநட்சத்திரத்தின் புகை மற்றும் தூசி அதிக வெப்பம் கொண்ட நீராவியின் தாக்குதல்.
இவை விண்வெளியில் நாம் கட்டப்போகும் உலகிற்கு(வீட்டிற்கு) ஏற்படும் அதிமுக்கிய பாதிப்புகள். இதிலிருந்து நம் விண்வெளி வீட்டைக் காப்பாற்றிவிட்டோம் என்றால் நமக்கான விண்வெளி வீடு இனிமை மிகுந்த இல்லமாக அமைந்துவிடும்.
மேலே கூறிய அனைத்து பாதிப்புகளுக்கும் மிகவும் எளிமையான தீர்வு உண்டு.
அதாவது வளைய வடிவிலான உலகம்
இப்போது நாம் எவ்வாறு நமது செயற்கை-கோள்களை கட்டுக்குள் வைத்திருக்கிறோமோ அதே போல் வளைய வடிவில் நாம் அமைக்கும் விண்வெளி உலகையும் முழு கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம்.
இதை வளைய வடிவிலான உலகை ஆங்கிலத்தில் Ring World என்று கூறுவார்கள்.
வளைய உலகம் பற்றி இன்றல்ல; நவீன யுகம் ஆரம்பிக்கும் முன்பே அதாவது 1900-களிலேயே அய்ன்ஸ்டைன் இது குறித்த கொள்கையை உருவாக்கியுள்ளார்.
அவர் செயற்கை உலகம் உருவாக்குவது பற்றிக் கூறும்போது தட்டையாக வளைய வடிவில் செய்யலாம் என்று ஆரம்பக்கட்ட சிந்தனையை விதைத்தவர்,
இத்தகைய உலகை உருவாக்க முதலில் விண்வெளியில் இயந்திர மனிதர்களைக் கொண்டுசென்று அலுமினியம், இரும்பு, செம்பு உள்ளிட்ட பொருள்களின் மூலம் பலமாக ஒரு வளைவான மிகப்பெரிய அமைப்பை உருவாக்க வேண்டும். அது நமது பூமியைப் போன்று மிகப் பெரிய வளையம் கொண்டதாக இருக்கத் தேவையில்லை. ஒரு கிலோமீட்டர் சுற்றளவு கொண்டதாகவோ அல்லது 100 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டாதாகவோகூட இருக்கலாம்.
இந்த உலகத்திற்காக ஒரு கம்பிவளை அமைப்பை முதலில் உருவாக்கி அதன் மீது மேலே கூறிய உலோகங்களாலான தகடுகளைப் பொருத்தி வெளிப்பகுதியில் பாதுகாப்பான ஓர் அமைப்பை உருவாக்கவேண்டும். அதன் பிறகு வளையத்தின் உள்பகுதியில் மனிதர்கள் வசிக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். மிகப் பெரிய காற்று வெளியாகாவண்ணம் செயற்கைக் கூரைகளைப் பொருத்தி அதில் நாம் சுவாசிக்க உயிர்வாயுவான ஆக்ஸிஜனை செலுத்தினால் மனிதர்கள் குடியேற உலகம் கிட்டத்தட்ட உருவாகிவிடும்.
வளையத்தில் உள்பகுதியில் பல இடங்களில் பூமியில் உள்ளது போன்று செயற்கைத் தோட்டங்களை உருவாக்கி நாம் உருவாக்கிய வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் மற்றும் கார்பன்_டை_ஆக்சைடை தொடர்ந்து உற்பத்தி ஆகும் விதமாக பார்த்துக் கொள்ளவேண்டும். அது மட்டுமல்லாமல் செயற்கையாகவே நமது மிகப் பெரிய கூரைகளில் மழையை உருவாக்கமுடியும்.
நமக்கு இதைச் செய்ய மின்சாரம் உள்ளிட்ட எரிசக்தி தேவைப்படும். அதற்கு நாம் கவலைப்படத் தேவையில்லை. நாம் வெளிக்கூரைகளில் பொருத்தும் தகடுகள்மூலம் தேவையான சூரியஒளி மின்சாரத்தை தடையின்றி எப்போதும் பெற்றுக்கொண்டே இருக்கலாம்.
அதுமட்டுமல்ல; எரி நட்சத்திரங்களில் இருந்தும் இதர விண்கோள்களில் இருந்தும் நம்மைப் பாதுகாக்க நமது செயற்கை வீட்டை _ அதாவது உலகை _ கோளை இடம் மாற்றலாம்.
இது எல்லாம் சாத்தியமா என்று கேள்வி எழும்.
சீனாவில் 32 மணி நேரத்தில் 13 மாடிகள் கொண்ட அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய குடியிருப்பை உருவாக்கிவிட்டார்கள். அதாவது பொருள்கள் எளிதில் கிடைக்கவும், கொண்டு செல்லவும் சரியான விண்வெளி ஓடங்கள் இருந்தால் அனைத்தும் சாத்தியமே!
மற்றொரு கேள்வி _ பெரிய செயற்கை உலகை உருவாக்க மூலப்பொருள்களை பூமியில் எடுக்க முடியுமா என்றால் அதற்கும் விடை உள்ளது. நமது நிலவில் பல உலோகத் தாதுக்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை நாம் உலோகமாக மாற்ற, நிலவிலேயே தொழிற்சாலைகளை உருவாக்கி அதிலிருந்து உலோகங்களைச் செய்து அவற்றை நமது செயற்கை உலகத்தை உருவாக்கப் பயன்படுத்தலாம். இப்போது கிராமத்தில் இருந்து சிறு நகரம்; சிறு நகரத்தில் இருந்து பெருநகரம் எனப் பயணம் செய்யும்போது நமது புவி வட்டப்பாதையில் இருந்து செயற்கை உலகத்தை நகர்த்தி வியாழன் கோளின் வட்டப்பாதைக்கு கொண்டு செல்லலாம்.
ஏன் வியாழன் கோள் என்றால் அங்கு உள்ள யுரோப்பா என்னும் நிலவில் நமது பூமியில் உள்ளதை விட பலலட்சம் மடங்கு அதிகம் தண்ணீர் உள்ளது. மற்றொரு நிலவான அயோ (io moon) மூலம் நமக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக் கொண்டே இருக்கலாம்.
ஆம், எதிர்காலத்தில் இவை அனைத்தும் சாத்தியமே!
இதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்றால், மூடநம்பிக்கைகள் மற்றும் பழமைவாதக் கதைகளைக் கை கழுவிவிட்டு புதிய சிந்தனை மற்றும் கேள்வி ஞானத்தில் திறமையானவர்களாக மாறவேண்டும். அப்படி மாறினால் இதைப் படிக்கும் நீங்கள்கூட எதிர்காலத்தில் சொந்தமான ஒரு செயற்கை வீட்டை விண்வெளியில் உருவாக்கி வாழலாம். நமது பூமியின் அழகையும் காப்பாற்றலாம். முக்கியமாக இரவு ஏன் வருகிறது என்று கவலைப்படுபவர்கள் இங்கு கவலை கொள்ளத் தேவையில்லை. காரணம், இங்கு இரவு பகல் என்பது எப்போதும் வரவே வராது, நமக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் பூமியின் ஒரு பகுதியை சூரியனின் ஒளிவிழாமல் இருப்பதைப் பார்த்து, “அதோ அதைத்தான் பூமியில் இரவு என்று கூறுவார்கள்’’ என்று கதை பேசி மகிழலாம்.
போலாமா, செயற்கை உலகைப் படைக்க!
(நிறைவு)