மரப்பாச்சி விளையாட்டு
அ.இளங்கோ
“வான்மதி, அய்ந்தாம் வகுப்பு” என அச்சிடப்பட்டிருந்த அடையாள அட்டையை எடுத்துத் தன் ஒளிப்படத்தின் அழகை ஒருமுறை ரசித்துவிட்டு நாடாவைச் சுருட்டி புத்தகங்களோடு உள்ளே வைத்துவிட்டு, அவசரம் அவசரமாக பள்ளி செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள் வான்மதி. தன்னையும் அறியாமல் மகிழ்ச்சியால் அவளைத் துள்ளிக் குதிக்க வைத்தது அம்மா சொன்ன தற்போதைய செய்தி (பிரேக்கிங் நியூஸ்).
“வான்மதி… உன் தாத்தாவும் பாட்டியும் இன்னக்கி ஊர்லருந்து வர்ராங்களாம்டீ…”
வான்மதிக்கு இருப்புக் கொள்ளவில்லை. வருகின்ற தாத்தாவும் பாட்டியும் அவளுக்கு அவ்வளவு பிடித்தவர்கள். மகிழ்ச்சியில் பரபரப்பாக இயங்க ஆரம்பித்தாள். அவளுக்குத் தெரியும் அவர்கள் வந்தால் எப்போதும் வீட்டில் அவளுக்கு ஒரு முக்கியத்துவம் வந்துவிடும். அம்மா, அப்பா யாரும் அவளைத் திட்டிவிட அனுமதிக்க மாட்டார்கள். அம்மாவும் அப்பாவும் முக்கியமான வேலை எதுவும் இல்லாமல் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தால்தான் அவளைக் கொஞ்ச வருவார்கள். அதற்காக அவள் காத்திருக்க வேண்டும், அப்போதுதான் தனக்கு வேண்டியதைக்கூட அவர்களிடம் தயக்கமின்றிக் கேட்க முடியும். ஆனால், தாத்தா பாட்டி அப்படியில்லை. அவர்கள் எப்போதும் அவள்மீது அன்பு காட்டுவார்கள். அவளுக்கு வேண்டியதைக் கேட்கலாம்!
அகத்தின் அழகு வான்மதியின் முகத்தில் முழுவதுமாய்த் தெரிந்தது. அதைக் கண்டும் காணாதவள் போல், “சீக்கிரம் வா… நா(ன்) தலையச் சீவிவிட்டிட்டு அடுத்த வேலையைக் கவனிக்கணும்…” என்று அம்மா சீப்புடன் சோபாவில் வந்து அமர்ந்தபடி அழைத்தாள். அம்மா சீவுவதற்கு வாகாக தலையைக் காட்டித் தரையில் முழந்தாளிட்டபடி அமர்ந்தாள். வகிடெடுத்த கூந்தலின் ஒரு பகுதியை உள்ளங்கையில் தாங்கி சீப்பால் வாரிப் பிரித்து பின்னலிடத் தொடங்கினாள் அம்மா.
“அவங்க இப்ப வந்திருவாங்களாம்மா?…”
“வந்துசேர பத்து மணிக்கு மேல ஆயிரும்… ஒழுங்கா பள்ளிக்குக் கிளம்பு…”
அம்மா இரட்டைச் சடையைப் பின்னிமுடித்து, சீப்பை அவள் கையில் கொடுத்துவிட்டு சமயலறைக்குள் சென்றாள்.
இன்றைக்குப் பள்ளிக்கு விடுப்பு எடுத்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், அது நடக்காது. என்று மிகுந்த மகிழ்ச்சியிலும் ஒரு சிறு சோகம் ஒட்டிக்கொள்ள சிணுங்கலுடன் பள்ளிசெல்லத் தயாரானாள்.
வகுப்பறைக்குச் சென்றபின்கூட தாத்தா_ பாட்டியின் வருகை பற்றிய மகிழ்ச்சி நினைவுகள் மறைந்து, பாடத்தில் கவனம் செல்வதற்கு நெடு நேரமாயிற்று அவளுக்கு! அவ்வப்போது அவர்களின் நினைவுகள் வந்துவந்து மறையும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களின் பெருமிதத்தை நண்பர்களிடம் பொறாமைப்படும்படி கதையாகச் சொல்லி மகிழ்ந்தாள். ஏனோ இன்றைக்கு நேரம் மிகமெதுவாகப் போவதுபோல அவளுக்கு தோன்றிற்று. ‘எப்போது இந்தப் பள்ளி முடியும்?’
இறுதியாக அவள் எதிர்பார்த்ததுபோல், பள்ளி விடும் நேரமும் வந்தது,
***
வழக்கம்போல இந்த முறையும் தாத்தா, பாட்டியோடு அங்காடிக்குச் சென்று வாங்கிவந்த பொருள்களை எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் வான்மதி. மின்னணு விளையாட்டுப் பொருள்களும், சில அழகு சாதனப் பொருள்களும், தின் பண்டங்களும், கூடவே அவள் விரும்பிக்கேட்ட, அவளுக்கு மிகவும் பிடித்த பார்பி பொம்மையும் வாங்கி வந்திருந்தாள்.
வெளிப்படையாக (ட்ரான்ஸ்பரண்ட்) தெரியும்படி வைக்கப்பட்டிருந்த நெகிழி உறையைப் பிரித்து பார்பி பொம்மையை வெளியே எடுத்தாள். கண்களில் ஒரு மினுமினுப்போடும், எழிலான உடலோடும், வாரிக் கட்டப்பட்டிருந்த கூந்தலோடும் மிகவும் அழகாக இருந்தது அந்தக் கையடக்க பொம்மை. அதன் உறையில் மேலும் சில அழகு சாதனங்கள்… பொம்மையின் கூந்தலை வாரிவிட சீப்பு தலையில் சூட்டுவதற்கு மணிமுடி(கிரீடம்), நான்கு _ அய்ந்து வண்ண ஆடைகள்… அவளின் கற்பனைக்கு யாரோ உயிர்கொடுத்தது போல் இருந்தது. தன் கைவண்ணத்தைக் காட்டத் தயாரானாள்.
நீலநிறத்தில் மிளிரும் ஆடையை எடுத்து உடுத்திவிட்டாள். சாய்ந்திருந்த முகத்தை நேர்செய்தாள். கூந்தலை ஒழுங்குபடுத்தினாள். கைகளை ஒயிலாக(ஸ்டைல்) வைத்தாள். நெற்றியில் பொட்டுவைத்தாள். எல்லாம் சரியாக இருக்கிறதா என்று முன்னால் நேர்நிறுத்தி அதன் அழகை ரசித்தாள்.
“வான்மதி…!” பாட்டியின் குரல்கேட்டு திரும்பிப் பார்த்தவள், பொம்மையைக் கையில் ஏந்தியபடி ஓடிவந்து பாட்டிமீது சாய்ந்துகொண்டாள். “எவ்வளவு நேர்த்தியாய் அலங்காரம் செய்திருக்கிறாய்… இந்தப் பொம்மையும் உன்னைப் போலவே எவ்வளவு அழகாக இருக்கிறது” என்று புகழ்ந்து கட்டியணைத்துக் கொண்டாள் பாட்டி.
“பாட்டீ…! இந்தப் பொம்மைக்கு நீல நிற உடையைவிட அந்த இளஞ்சிவப்பு உடை நன்றாக இருக்கும் அணிவித்துக் காட்டவா?” என்றாள்.
“ஒரே நாளிலா எல்லா உடையையும் அணிவிப்பார்கள்? ஒரு நாளைக்கு ஓர் உடை போட்டுவிடு” என்றாள் பாட்டி. வான்மதிக்கும் அது சரி என்றே மனதில் பட்டது.
இப்போது பாட்டி அந்தப் பொம்மையை தன் கையில் வாங்கினாள். ஓர் அழகான இளம் பெண்ணின் உருவம், இவ்வளவு சிறியதாக, இத்துணை நேர்த்தியாகச் செய்யப்பட்டிருப்பதைப் பார்த்து வியந்தாள். எத்தனை வயதானவர்களையும் விளையாட்டுப் பொருள்கள் மயக்கி, சிறுபிள்ளைகளாக ஆக்கிவிடுகின்றன.
இதைப் பார்த்த தாத்தா வான்மதியிடம் கிண்டலாகச் சொன்னார், “உங்க பாட்டி உன்னமாதிரி சின்னவளா இருந்தப்ப இந்தமாதிரி அழகான பொம்மையெல்லாம் விளையாடக் கிடைச்சிருக்காது…”
பாட்டி உடனே பதில்சொன்னாள், “இதைவிட அழகான, இதைவிட சின்னதான, மரத்தில செதுக்கின பொம்மைகள் அப்ப இருந்துச்சு…”
“மரத்தில செஞ்ச பொம்மையா…?” வியப்பாகக் கேட்டாள் வான்மதி.
“மரப்பொம்மை… அதுக்கு பேரு மரப்பாச்சி…”
***
நீண்ட நேரமாய் பொம்மையை அழகு செய்வதில் மூழ்கிப்போனாள் வான்மதி. அவள் கவனம் முழுவதும் அதிலேயே இருந்ததால், தந்தை அங்கு வந்ததைக்கூட கவனிக்கவில்லை. எல்லா அலங்காரங்களையும் முடித்து, இறுதியில் கூந்தலை மடித்துக்கட்ட பலமுறை முயன்றும் முடியாமல் போகவே, பாட்டியிடம் உதவி கேட்கலாம் என்று பாட்டி அருகில் சென்றபோதுதான் பார்த்தாள்.
அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா என எல்லாரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் புன்னகையற்ற கறாரான முகபாவம் அவர்கள் முக்கியமான ஏதோ ஒன்றைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்த்தியது.
அப்பா உரத்த குரலில் சொல்லிக்கொண்டிருந்தார், “அத்திவரதரப் பாக்கணும்னா, காலைல 5 மணிக்கெல்லாம் அங்க இருக்கணும், அப்பத்தான் கூட்டம் கொஞ்சம் குறைவா இருக்கும், அப்படியும் வரிசையில நின்னு பாக்கறதுக்கு குறைஞ்சது 3 மணி நேரமாவது ஆயிரும். தாமதமாப் போனீங்கன்னா கூட்டம் அதிகமாயிடும்… அப்பறம் நெரிசல்ல மாட்டிக்கிவீங்க… ரொம்ப கஷ்டமா போயிடும்…”
அப்பாவின் முகத்தைப் பார்த்தபடி அவர் சொல்வதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த பாட்டியின் கையை தன் கைகளால் அசைத்து, மெதுவாகப் “பாட்டி” என்று கூப்பிட்டாள் வான்மதி.
பாட்டி அவளைப் பொருட்படுத்தாமல் அப்பா பேசுவதையே மும்முரமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
தன் பிஞ்சுக் கையால் பாட்டியின் தாடையைப் பற்றி தன் பக்கம் திருப்ப முயற்சித்தாள்…
அதைப் பார்த்த அப்பாவிற்கு சட்டென்று கோபம் வந்தது.
“ஏய்…! என்ன இது கெட்ட பழக்கம்… பெரியவங்க பேசிக்கிட்டு இருக்கும் போது தொந்தரவு செய்றது…” என்றவர், கையில் இருந்த பொம்மையைப் பார்த்ததும் எரிச்சலின் உச்சிக்கே சென்று கடுமையாகத் திட்ட ஆரம்பித்தார்.
“வயசு பத்துக்கு மேல ஆகப்போகுது… கொஞ்சங்கூட பெரியபுள்ளங்கிற நினைப்பே இல்ல…? எப்பப் பாத்தாலும் பொம்மைய வச்சு விளையாண்டுக்கிட்டு… இன்னும் சின்னக்-குழந்தையாட்டமே நடந்துக்கிற… உனக்கு அறிவே இல்லையா?… ஆள் வளர வளர அறிவும் வளர வேண்டாமா?”
அப்பாவின் உரத்த குரலைக் கேட்டு அனைவரும் சிறிதாக நடுங்கினர். ஆனால், அதைவிட அதற்கு வான்மதி அளித்த பதிலைக்கேட்டு அனைவரும் திகைத்துப்போய் நின்றனர். அனைவர் மனதிற்கும் அதில் மறுக்க முடியாத ஓர் உண்மை இருப்பது புரிந்தது…
அவள் கேட்டாள், “அறிவு இருக்கான்னு என்னைக் கேட்கிறீங்க… பெரியவங்க நீங்க எல்லாரும் கூட்டமா சேர்ந்து பெரிய மரப்பாச்சி பொம்மைய வச்சு தினமும் அலங்காரம் பண்ணி பட்டாடை உடுத்தி விளையாடுறீங்க… நா விளையாண்டா பொம்ம, தப்பு… நீங்க விளையாண்டா அது அத்திவரதர், சாமியா?”.