சாதனை : சத்தமின்றி வென்ற ஜெர்லின் அனிகா
பன்னாட்டு அளவில் சீனாவில் நடைபெற்ற காது கேளாதோருக்கான ‘யூத் பேட்மிண்டன்’ போட்டியில் கலந்துகொண்டு உலக சாம்பியன் பட்டத்தை வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் மதுரையைச் சேர்ந்த ஜெர்லின் அனிகா.
ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என நான்கு பதக்கங்களுடன், சாம்பியன் பட்டத்தையும் தன் வசப்படுத்தியிருக்கிறார். இவர் மதுரை மாநகராட்சி அவ்வை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். ஜெர்லினுக்கு ‘பேட்மிண்டன்’ விளையாட்டு மீதான ஆர்வம் ஏற்பட்டதை அவரது தந்தை ஜெயரட்சகன் கூறுகையில், “ஜெர்லின் நாம் பேசுவதை உதடு அசைவுகள் மூலம் புரிஞ்சுக்கக் கூடியவர். நாங்க மதுரை தெற்கு வாசலில் குடியிருந்தபோது, எங்கள் வீட்டுக்குப் பக்கத்துல புதுசா ‘பேட்மிண்டன் கோர்ட்’ கட்டினாங்க. அங்கு விளையாடும் என்னுடைய நண்பர்களைச் சந்திக்கச் செல்லும் வேளையில் ஜெர்லினையும் அழைத்துச் செல்வேன். இந்தச் சமயத்தில் ஜெர்லினுக்கு பேட்மிண்டன் மீதான ஆர்வம் தொற்றிக் கொண்டது. உடனே பயிற்சியில் சேர்ந்தார், அந்த வினாடியே, என் மகள் பெரிய விளையாட்டு வீராங்கனையா வருவான்னு எனக்கு நம்பிக்கை வந்தது. அந்த நம்பிக்கையில் இன்று அவள் இந்த உயரத்தைத் தொட்டிருக்கிறாள்’’ என்கிறார்.
விளையாட்டுப் போட்டிகளில் மாற்றுத் திறனாளிகள் சாதிப்பது பெரிய விஷயம் என்றபோதிலும், ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி, தங்கத்தைப் பெற வேண்டும் என்பதுதான் ஜெர்லினின் இலக்கு. அதை நோக்கி, உள்ள உறுதியுடன் பயணம் செய்யும் அவரை வாழ்த்துவோம், பிஞ்சுகளே!
மகிழ்