காரணமின்றி ஏற்காதீர்கள்
இரவில் பொருள்களை அடுத்தவர்க்குக் கொடுக்கக் கூடாது?
இன்றுகூட கிராமப்புறங்களில் எந்தவொரு பொருளையும், பொழுது போய் -இரவில் கொடுக்க மாட்டார்கள். கடனும் கொடுக்கமாட்டார்கள்.
இரவில் கொடுத்தால் லட்சுமி போய்விடும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். இதில் லட்சுமி போவதற்கும் வருவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. லெட்சுமி என்றொரு கடவுளும் இல்லை. இரவு வேளையில் கணக்கு வழக்கு சரியாய் வராது என்பதே அன்றைக்கிருந்த காரணமாக இருக்கக் கூடும்.
அக்காலத்தில் மின் விளக்குகள் இல்லை; பொழுது சாய்ந்தபின் போதிய வெளிச்சம் இருக்காது. அதனால், இருட்டு வேளையில் எந்தக் கொடுக்கல் வாங்கலையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே இவ்வழக்கத்தை ஏற்படுத்தினர்.
ஆனால், இக்காலத்தில் பகல் போன்று ஒளிவீசும் குழல் விளக்குகள் வந்துவிட்டன. எனவே, இக்காலத்திலும் இரவில் பொருள் கொடுக்கக்கூடாது என்று எண்ணுவது அறியாமையாகும்.
வசதிக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற எந்த நேரத்திலும் கொடுக்கல் வாங்கலை வைத்துக் கொள்ளலாம்.
படிதாண்டி வந்துதான்
கொடுக்க வேண்டுமா?
அடுத்தவருக்கு ஒரு பொருளைக் கொடுக்கும்போது, படிதாண்டி வந்து கொடுக்க வேண்டும் என்னும் சம்பிரதாயம் பின்பற்றப்-படுகிறது.
வாயிலுக்கு வெளியே பெறுபவரும், வாயிலுக்கு உள்ளே கொடுப்பவரும் நின்று கொடுத்தால் பெற மாட்டார்கள். ஒன்று, பெறுபவரை உள்ளே அழைத்துக் கொடுப்பார்கள். அல்லது கொடுப்பவர் வாயிற்படி தாண்டி வெளியில் சென்று கொடுப்பார். இன்றைக்குக்கூட இது உறுதியாகப் பின்பற்றப்-படுகிறது.
இது மரியாதை நிமித்தம் ஏற்படுத்தப்பட்ட ஒரு வழக்கமாக இருக்கக் கூடும். மற்றபடி இதில் ஏதும் சிறப்புக் காரணங்கள் இல்லை.
வீட்டிற்கு வந்தவரை வீட்டிற்கு வெளியில் நிறுத்திக் கொடுப்பது மரியாதையாகாது என்கிற எண்ணத்தின் விளைவே இது. அதனால்தான், ஒன்று, கொடுப்பவரும் வெளியில் படிதாண்டி வந்து கொடுக்கிறார்; இல்லையென்றால் பெறுபவரை வீட்டிற்குள் அழைத்துக் கொடுக்கிறார்.
பிச்சைக்காரர்களுக்கு பிச்சை கொடுத்தால்கூட படிதாண்டிச் சென்று கொடுப்பர். அவர்களையும் மதிக்க வேண்டும் என்கிற பண்பாட்டின் அடிப்படையே இதற்குக் காரணம்.
ஆனால், இதைக் கட்டாயமாகக் கருதிச் செயல்படுவது அறியாமையாகும். இதிலெல்லாம் மரியாதை வந்து விடப்போவதில்லை. மரியாதை உணர்வுபூர்வமாக இருக்க வேண்டும். இன்றைக்குக் கடைகளில் பொருள்கள் வாங்கும்போது கடைக்காரர் வாசற்படிக்கு உள் இருக்கிறார்; நாம் வெளியே நின்றுதான் வாங்குகிறோம். சிறிய கடைகளில் ஒவ்வொரு முறையும் கடைக்காரர் வாசல் தாண்டி வந்து தரமுடியுமா? எனவே, இதைக் கட்டாயமாக கண்மூடித்தனமாகப் பின்பற்றத் தேவையில்லை.
இழவு வீட்டிற்குச் சென்றால் சொல்லிக் கொள்ளாமல் வரவேண்டுமா?
இழவு (இறப்பு) வீட்டிற்குச் செல்லுகின்றவர்கள் திருப்பி வரும் போது இழவு வீட்டாரிடம் சொல்லிக் கொள்ளாமல் வர வேண்டும் என்கிற நடைமுறை பின்பற்றப்படுகிறது.
இழவு வீட்டாரிடம் போய் வருகிறேன் என்று சொல்லிவிட்டு வந்தால், மீண்டும் அவர்கள் வீட்டிற்கு இழவுக்குச் செல்லவேண்டி வரும் என்று நம்புகின்றனர்.
இதில் சிறிதும் உண்மையும் இல்லை. அவ்வாறு சொல்லிவிட்டு வந்தால், இழவு வீட்டில் வேறு யாராவது இறந்து போவார்கள் என்று எண்ணுவது அறியாமை.
சொல்லிக் கொள்ளாமல் வருதல் என்பது உளவியல் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட ஒரு வழக்கமாகும்.
இழவு வீட்டார், இறப்பால் துயரத்தில் இருப்பர். வந்தவர்களை வரவேற்கும் மனநிலையிலோ அல்லது, செல்கின்றவர்களுக்கு விடை கொடுக்கும் மனநிலையிலோ அவர்கள் இருக்க மாட்டார்கள். அதைக் கருத்தில் கொண்டுதான் சொல்லிக் கொள்ளாமலே வருதல் என்னும் நடைமுறை பின்பற்றப்பட்டது.
எனவே, சொல்லிவிட்டு வந்தால் மீண்டும் இழவிற்குச் செல்ல வேண்டி வரும் என்று யாரும் அச்சப்படத் தேவை இல்லை.
சில இழவு வீட்டில், இழவு வீட்டார், வரவேற்கவுஞ் செய்கின்றனர். பின்னர் விடை கொடுத்தும் அனுப்புகின்றனர். அது அவர்களின் மனநிலையைப் பொறுத்தது. மற்றபடி இதில் அச்சப்பட எதுவும் இல்லை.
சில வீடுகளில் இழவுக்குச் செல்லு-கின்றவர்களுக்கு, சாப்பாடு கொடுத்தும் உபசரிக்கின்றனர். இழவுக்கு வருகின்ற குழந்தைகள், சிறுவர்கள் இவர்களைக் கருத்தில் கொண்டு, பாலோ மற்றும் சிற்றுண்டியோ வழங்குவது அறிவுக்கு உகந்த செயலேயாகும்.