உயிர் விளக்கு!

சின்ன உடம்பும், இரண்டு
சிறகும் உடைய விளக்கு!
எண்ணெய் இன்றி எரிந்து
இரவில் உலவும் விளக்கு!
மண்ணில் இருந்து மரங்கள்,
மலைக்கும் உயரும் விளக்கு!
விண்ணில் பறந்து திரிந்து
விடிந்து மறையும் விளக்கு!
உண்டு உயிரும் சுமந்து
ஒளியும் உமிழும் விளக்கு!
கண்டு உலகம் உவந்து
களிக்க உதவும் விளக்கு!
அண்டும் புயலில் விழுந்து
அணைந்தி டாத விளக்கு!
மின்னல் புகழும் வியந்து
‘மின்மி னி’யாம் விளக்கு!
– தளவை இளங்குமரன்,
திருநெல்வேலி