பெயரில் இல்லை ‘சாதனை’!
சாதித்த ‘வேண்டாம்’
சரவணா இராஜேந்திரன்
மாணவி ’வேண்டாம்’
தங்களின் தோழி ஸிக்தாவின் பிறந்த நாள் விழாவில் 7-ஆம் வகுப்பு படிக்கும் ‘நம்பிக்கை’யும் அவளது தோழி ‘பொய்சொல்லாளும் கலந்துகொண்டனர்.
வகுப்பில் நன்றாகப் படிக்கும் இருவரையும் தனது பெற்றோர் மற்றும் உறவினரிடம் அறிமுகப்படுத்தும்போது, கொஞ்சம் தயங்கிய படியே அறிமுகப்படுத்தினாள் ஸிக்தா.
அவரது உறவினர் வேண்டுமென்றே, “ஒன்றுமே புரியவில்லை… சத்தமாகச் சொல்” என்றதும், பிறந்தநாள் கொண்டாடும் தோழி ஸிக்தா மீண்டும், “இவள் பெயர் ‘நம்பிக்கை’. இவள் பெயர் ‘பொய் சொல்லாள்” என்று கூறினார். இதைக்கேட்டதும் உடனே அங்குள்ளவர்கள் அனைவரும் சிரித்தனர். “இப்படியும் பெயர்களா?” என்று பலர் கேலி செய்யும் தொனியில் கேட்டனர்.
அப்போது பொய் சொல்லாள் துணிச்சலுடன், அவர்களின் கேலிக்கு பதில் கூறினார், “அழகிய தமிழ்ப்பெயரை எனது பெற்றோர் சூட்டியதில் மகிழ்ச்சிதானே! எங்கள் பெயருக்கு விளக்கம் கேட்க எந்த ஒரு அகராதியையோ அல்லது வடமொழிப் பண்டிதரையோ கேட்கவேண்டாமே! நம்பிக்கையில்தானே இந்த உலகம் இயங்குகிறது. மேலும் பொய்சொல்லாதது குறித்து அய்யன் வள்ளுவன் 10 அதிகாரங்கள் எழுதியுள்ளாரே! அதில் எனக்குப் பெருமைதானே?” என்று கேலியாகப் பார்த்தவர்களின் முன்பு உரக்க உறுதியாகக் கூறினாள். பின்பு பிறந்த நாள் கொண்டாடும் ஸிக்தாவிடம், “உனது பெயருக்குப் பொருள் என்ன என்று தெரியுமா?” எனக் கேட்டுள்ளார்.
இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் பதில் அளிக்க முடியாமல் ஸிக்தா திணறினாள். உடனே, அவரது உறவினர் ஒருவர், “ஸிக்தா என்றால், அறிவாளி” என்று பெருமையுடன் கூறினார். அதற்கு ‘நம்பிக்கை’ உடனே பதிலளித்தாள், “அதெப்படி? ஒருவர் கல்வி கற்றாலும் தகுந்த கேள்வி ஞானம் இருந்தால்தான் ஒருவர் செல்வத்திலோ அறிவிலோ கல்வியிலோ புலமை பெறுவர். அதற்கு அயராத உழைப்பு தேவை!” என்றாள். “வெறும் பெயர் வைத்தால் அறிவாளி ஆகிவிடமுடியாது” என்று கூறியவள். “எங்கள் ஊரில் மாடு மேய்க்கும் பாட்டியின் பெயர் சரஸ்வதி. ஆனால், அவருக்கு இன்றளவும் தனது பெயரைக்கூட எழுதத் தெரியாது” என்று கூறினாள். இவரது பேச்சைக் கேட்டவர்கள் அனைவரும் அமைதியாக கேட்டனர்.
நம்பிக்கையைத் தொடர்ந்து பொய் சொல்லாள் பேசினாள்.
“ஸிக்தா என்றால் அறிவாளி என்பது அல்ல, உங்களுக்கு சமஸ்கிருதம் பற்றி தெரியாது என்பதால் உங்களிடம் பொய் சொல்லி உள்ளனர். நீங்களாவது அதன் விளக்கத்தைக் கேட்க முயன்றிருக்க வேண்டாமா? ஜாதகம், பெயர் ராசி, நியூமராலாஜி, ஊர் வழக்கம் என்று ஏமாற்றுபவர்களின் வார்த்தை ஜாலத்திற்கு மயங்கி, பெயரின் உண்மையான பொருள் என்பதுகூடத் தெரியாமல் ஸிக்தா என்று பெயர் வைத்துள்ளீர்கள்.”
“நான் இங்கு யாருடைய மனதையும் புண்படுத்த விரும்பவில்லை. இருப்பினும் பொய் சொல்லாள், நம்பிக்கை ஆகிய உயர்குணங்கள் கொண்ட அழகிய தமிழ்ப் பெயர்களை கேலியாக நீங்கள் அனைவரும் பார்ப்பதால் கூறுகிறேன். ‘ஸிக்தா’ என்றால், ‘மண்’ என்று பொருள். உங்கள் யாருக்காவது இதில் அய்யம் இருந்தால், மத்திய அரசின் “மனிதவளத் துறையின் கீழ் இயங்கும் சமஸ்கிருத வளர்ச்சித் துறையில் இணையதளமான (http://spokensanskrit.org) சென்று பாருங்கள். ஸிக்தா என்றால், sikata – silica – sand ஆகும்” என்று கூறினாள். அங்கிருந்த சிலர் தங்களது கைபேசியில் சென்று இதைப் பார்த்துவிட்டு உண்மையை அறிந்து அமைதிகொண்டனர்.
“சமஸ்கிருதப் பெயரைப் புரியாமல் வைத்துக் கொள்வதும், கடவுளர் பெயரை வைத்துக் கொள்வதும் பெருமை அல்ல; அழகிய தூய எளிமையான கருத்துகளுடன் கூடிய பெயரையும் மக்களுக்கான சமுகநீதிக்காக, உழைப்பை வலியுறுத்திய, சமத்துவத்திற்காகப் போராடிய தலைவர்களின் பெயரையும் வைத்துக்கொள்வதே பெருமை” என்று கூறியதும் அனைவரும் ஆமோதித்தனர்.
மறுநாள் பள்ளிக்கூடத்திற்கு அனைவரும் வந்தார்கள். காலை வணக்கக் கூட்டத்துக்காக பள்ளியின் முன்பு அனைவரும் வரிசையாக நிற்க, “தமிழ்த்தாய் வாழ்த்து” பாடிய பிறகு சிலருக்குப் பிறந்த நாள் வாழ்த்தும் கூறப்பட்டது. அதன் பிறகு மாணவி ஒருவர் அன்றைய செய்தித்தாளில் சில செய்திகளை வாசித்தார். அதில் ‘வேண்டாம்’ என்னும் பெயர் கொண்ட திருத்தணியைச் சேர்ந்த மாணவி, ஜப்பான் நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு நல்ல ஊதியத்தோடு பணியில் சேரப்போவதையும், அவரைத் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியாளர் மகேஸ்வரி தங்கள் மாவட்ட பெண் குழந்தைகள் கல்வி விழிப்புணர்வு பரப்புரைக்கான தூதராக நியமித்த செய்தியை வாசித்தார்.
அதன் பிறகு வகுப்பறைக்குச் சென்றபோது ஆசிரியரிடம் பொய்சொல்லாள் முதல் நாள் நடந்ததைக் கூறினாள். மேலும் “வேண்டாம்” என்னும் மாணவி குறித்துத் தெரிந்துகொள்ள விருப்பம் உள்ளது அம்மா” என்று ஆசிரியையிடம் கூறினார். ஆசிரியரும் ‘வேண்டாம்’ என்னும் மாணவி பற்றி கூறினார்.
“சென்னைக்கு அருகிலுள்ள மாவட்டமான திருவள்ளூரில் உள்ள திருத்தணிக்குப் பக்கத்துல இருக்குற நாராயணபுரம் என்னும் ஊரில் பிறந்தவர் ‘வேண்டாம்’. தன்னுடைய வீட்டில் இரண்டு பெண் குழந்தை பிறந்ததால் மூன்றாவதாகப் பிறக்கும் பெண் குழந்தைக்கு ‘வேண்டாம்’ என்று பெயர் வைத்தால், அடுத்து ஆண் குழந்தை பிறக்கும் என்று ஊரார் கூறியதைக் கேட்டு, அவரது பெற்றோர்கள் மூன்றாவதாகப் பிறந்த பெண் குழந்தைக்கு ‘வேண்டாம்’ என்று பெயர் சூட்டினர்.
இந்தப் பெயர் சூட்டிய பிறகு நான்காவதாகப் பிறந்ததும் பெண்குழந்தைதான்!
‘வேண்டாம்’ என்னும் பெயரால் மாணவி எல்லா இடங்களிலும் அவமானத்திற்கு ஆளானார். ஆனால், அவர் இந்தக் கேலிப் பேச்சுகளை எல்லாம் உரமாக்கி, தன்னுடைய கல்வியில் கவனம் செலுத்தி பொறியியல் பட்டதாரியானார். படிக்கும்போதே பன்மொழிப் புலமை பெறும் நோக்கில் ஜப்பானிய மொழியைத் திறம்படக் கற்றுக்கொண்டார்.
“இவரது கல்லூரியில் நடந்த வேலை வாய்ப்புக்கான நேர்முகத் தேர்வில் ஜப்பானைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனம் இவரைப் பணியில் அமர்த்தியுள்ளது” என்று கூறினார்.
“இவ்வளவு பெருமை கொண்ட ‘வேண்டாம்’- அவர்களை அம் மாவட்ட கல்வி விழிப்புணர்வுத் தூதராக அம் மாவட்ட ஆட்சியாளர் நியமித்துள்ளார்” என்று கூறினார்.
ஆகவே, “ஒருவரின் பெயரை வைத்து நாம் எதையுமே முடிவு செய்யக்கூடாது, செயலில்தான் உள்ளது அனைத்தும்” என்று கூறினார். மாணவிகளும் ஆசிரியைக்கு நன்றி கூறினர். மாணவி ‘வேண்டாம்’ அவர்களுக்கும் வாழ்த்து கூறினார்கள்.
பெயர் மட்டுமல்ல பிரச்சினை. பெண் குழந்தைகள் என்றாலே சுமை என்று கருதிய மூடத்தனத்தையும் பெண்ணடிமைத் தனத்தையும் முறியடித்துச் சாதித்திருக்கிறார் ‘வேண்டாம்’
கணிதப் புதிர்
சுடோகு
விடை:
அடுத்த இதழில்…