காரணமின்றி ஏற்காதீர்கள்!
கண்படுமோ…
பிறர் கண்படுமோ…
-சிகரம்
திருஷ்டி சுற்றிப் போடுதல் சரியா?
கிராமப்புறங்களில் திருஷ்டி சுற்றிப் போடுதல் என்பது வழக்கில் உள்ளது.
பிள்ளையின் உடல் நிலை பாதிக்கப்படும்போது, பிள்ளையை வீட்டில் உட்கார வைத்துத் திருஷ்டி சுற்றுவார்கள். ஒரு சட்டியில் நெருப்பைப் போட்டு, அதில் மிளகாய் மற்றும் உப்பைப் போட்டு அது புகைந்து வெடிக்கும்போது, அச் சட்டியை எடுத்துப் பிள்ளையின் தலையை மூன்று முறை சுற்றியபின், பிள்ளையின் வாய் எதிரில் கொண்டுவந்து அச் சட்டியில் எரிகின்ற நெருப்பில் எச்சில் துப்பச் செய்வார்கள்.
பிறகு அதை நடுத்தெருவில் கொண்டு வந்து போடுவார்கள். திருஷ்டி என்றால் கண் பார்வை என்று பொருள். கண்பட்டுவிட்டதாக எண்ணி, அந்தப் பாதிப்பு நீங்குவதற்காக இச்செயல் செய்யப்படுவதால் இதற்குத் திருஷ்டி சுற்றுதல் என்று பெயர் வந்தது.
குறிப்பிட்டவரின் கண்பட்டுத்தான் குழந்தைக்கு உடல் பாதித்தது என்று உறுதியாக நம்பினார்கள் என்றால், அந்த நபர் தெருவில் செல்லும்போது, அவரது காலடி மண்ணை எடுத்து வந்து, திருஷ்டிச் சட்டியில் போட்டு திருஷ்டி சுற்றுவார்கள்.
இது ஒரு மூடநம்பிக்கை. யாருடைய கண் பட்டும் யாருக்கும் பாதிப்பு வந்துவிடாது. இயல்பாக வருகின்ற பாதிப்புக்கு இவர்கள் கற்பித்துக் கொள்கின்ற பொய்யான காரணமே இது.
கண்படுமோ… பிறர் கண்படுமோ என்று கொழு கொழுவென்று இருக்கின்ற குழந்தைகளைப் பலர் கண்படக் காட்டமாட்டார்கள்.
குழந்தை புட்டி நிறைய பால் குடிக்கும்போது அதைத் துணியால் மறைத்துக் கொடுப்பார்கள். காரணம், ‘இவ்வளவு பால் குடிக்கிறதே!’ என்று அடுத்தவர் கண்பட்டுவிடும் என்று நம்புகிறார்கள்.
இவற்றில் எவ்வித உண்மையும் இல்லை. கண்ணின் பார்வைக்கும் (திருஷ்டி), சொல்லும் சொல்லுக்கும் (சாபம்) சக்தியிருக்கிறது என்று எண்ணுவது மூடநம்பிக்கையின் விளைவேயாகும். காரணமின்றி எதையும் ஏற்காதீர்கள்!
இன்றைக்குச் சிறு பிள்ளைகள் வியப்பான பலவற்றைச் செய்யும்போது பலர் பார்க்கின்றனர். அதனால் அப் பிள்ளைகளுக்கு பாதிப்பு வருவதில்லையே!
சாபம் கொடுப்பது பலிக்கும் என்றால், இந்த உலகில் அநீதியே நடக்காது. தினம் தினம் வயிறெரிந்து ஏழைகளும், பாதிக்கப்பட்டவர்களும் கொடுக்கின்ற சாபம் கொஞ்ச நஞ்சமா?
திருஷ்டிப் பொம்மை மற்றும்
திருஷ்டிப் பொட்டு வைக்கலாமா?
குறையில்லாத அழகாய் இருந்தால் பார்ப்பவர்கள் கண் பட்டுவிடும் என்கிற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. அதனால்தான் அழகான குழந்தையின் கன்னத்தில் சிறு கறுப்புப் புள்ளி வைக்கிறார்கள்.
அழகான வீட்டில் அழகற்ற ஓர் உருவப் பொம்மையை வைப்பார்கள். அதற்கு திருஷ்டிப் பொம்மை என்று பெயர். அசிங்கமாக இருக்கவேண்டும் என்பதற்காக வைக்கப்படும் இப்பொம்மையைக்கூட இன்று அழகாக வடிவமைத்து வைக்கின்றார்கள். இது அறியாமையில் அறியாமை.
கண்படுமோ… பிறர் கண்படுமோ என்று அழகிய சிற்ப வேலைப்பாடுகளில்கூட ஒரு சிறு குறை வைப்பார்கள். அது கோயில் கலைகளில் ஒரு விதியாகவே கொள்ளப்பட்டது.
கண்பட்டுவிடும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்பட்டவையே இவை.
மனம் முழு நிறைவடைந்து விடக்கூடாது என்னும் நம்பிக்கை மக்களிடம் உள்ளது. ஏதாவது ஒரு குறையிருந்தால்தான் அது நிலைக்கும் என்பதும் அவர்கள் நம்பிக்கை. இதில் அறிவியல் உண்மை எதுவும் இல்லை. அறியாமையால் ஏற்படும் அச்சமே இது. அதன் விளைவே இவ்வழக்கங்கள்.
உலக அழகான, அதிசயமான தாஜ்மஹால் திருஷ்டிப் பொம்மையில்லாமல் இவ்வளவு காலம், இவ்வளவு பேர் கண்பட்டும் நிலைத்து நிற்கவில்லையா? சிந்திக்க வேண்டும்.