பிஞ்சு வாசகர் மடல்
“பிப்ரவரி 2019 பெரியார் பிஞ்சு இதழில் ‘விளக்கு ஏந்திய விட்டில் பூச்சி’ என்னும் தலைப்பில் கவிதை ஒன்று வெளியாகி இருந்தது. விட்டில் பூச்சி எப்படி விளக்கு ஏந்தும்? விளக்கு வெளிச்சத்தில் மோதி மாளும் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். மின்மினிப் பூச்சிகள் ஒளிதரும் என்கிற வரிகளோடு வாசகர் கடிதம் எழுதியிருந்தார்.
மின்மினிப் பூச்சிதான் ஒளிதரும் என்பது உண்மை. எந்த விட்டில் பூச்சியும் விளக்கு வெளிச்சத்தில் மோதி மாள வேண்டும் என வருவதில்லை. விளக்கின் ஒளியால் ஈர்க்கப்பட்டு விளக்கை நெருங்குகையில், வெப்பம் தாளாமல் வீழ்கிறது என்பது யதார்த்தம்.
விட்டில் பூச்சி விளக்கு ஏந்தியது என்பது ஒரு புனைவு. அந்தப் புனைவுக்கு என் கற்பனையே காரணம்.
‘இயல்பாக ஒளிவிடும் ஒரு மின்மினிப் பூச்சி அங்கே அமர்ந்திருக்க, அந்த ஒளியின்பால் ஈர்ப்பு கொண்ட ஒரு விட்டில் பூச்சி அதனை நெருங்கி கவ்விக் கொண்டு அறையில் பறந்து வட்டமடிக்கிறது. ஒளியுடன் வட்டமடிக்கும் அந்தப் பூச்சியைக் கண்ட சிறுவன், விளக்கினை ஏந்திக் கொண்டு அந்தப் பூச்சி எதைத் தேடி அலைகிறதோ? தெரிந்தால் நாம் உதவலாமே என்று நினைப்பதைப் போல் எழுதப்பட்ட அந்தப் பாடலுக்கு ‘விளக்கு ஏந்திய விட்டில் பூச்சி’ என்று தலைப்பிட்டேன்.
அன்புடன்,
– மு.நடராசன், புதுச்சேரி -13
தன்மானம் பிறந்த நாள்!
கண்ணியம் தவறாத கருப்புச் சூரியனே!
நீ பெண்ணியம் காக்கத்தான்
இப்பிரபஞ்சத்தில் பிறந்தாயோ!
தொண்டு ஒன்றே
வாழ்நாள் குறிக்கோள் என்று
வீரத் தழும்புகள் மார்பில் கொண்டு நின்றாயே!
பெண்கள் மறுமலர்ச்சிக்கென
பல கிளர்ச்சிகள் செய்து
பெண்ணினம் காத்த நாயகனாய் உயர்ந்தாயே!
விறகு எரிக்கவும், விறகினில் எரிக்கவும்தான்
பெண்கள் என்னும் நிலையை மாற்றி,
விண்ணை ஆளச் செய்த பகலவனே!
இன்றும் கற்பனை மட்டுமே
செய்ய முடிந்தவற்றை
அன்றே கண்முன் நிகழ்த்திக் காட்டி
வையகம் செழிக்கச் செய்த
எங்கள் வைக்கம் வீரரே!
உம் பிறந்த நாள் எங்கள்
தன்மானம் பிறந்த நாள்!
– மஞ்சு,
சாந்தி நிகேதன் மெட்ரிகுலேசன் பள்ளி,
கும்மிடிப்பூண்டி