மழையே மழையே வா! வா! வா!
மழையே மழையே வா, வா, வா!
மானுடம் தழைத்திட வா, வா, வா!
தாகம் தீர்த்திடும் மழையே வா!
தரணிக்கு நீயே தலைவன் வா!
ஏரி குளங்கள் எல்லாம் நிரம்பிட
எங்கும் பொழிந்திட வா, வா, வா!
ஆறுகள் எங்கும் தடைகள் தகர்த்து
ஆர்ப்பரித் தோட வா, வா, வா!
வீட்டு மாடியில் பெய்யும் நீரை
வேண்டிய அளவில் சேமிப்போம்!
நீர்நிலை யாவும் நிரம்பிடவே
நேரிய வழித்தடம் உனக்கமைப்போம்!
பூமித்தாயின் புதையல் நீதான்!
ஆழ்துளைக் கிணறுகள் அமையவிடோம்!
கடலில் கலந்திடும் முன்னே உன்னைக்
கச்சிதமாகப் பயன்கொள் வோம்!
நிலத்தடி நீரை உயர்த்துதல் லட்சியம்
நின் பொழிவால் எம் வாழ்வே ஒளிமயம்!
நீரின் வழித்தடம் அனைத்திலும் வீடுகள்
நிலையை மாற்றி பயன்செய்குவம்!
மழைதான் இந்த மானுட ‘உயிர்உரம்!’
மழையி(ல்)லை எனில் எந்த உயிரிங்கு உருப்பெறும்?
இயற்கையின் விதிகளை மீறுதல் தாழ்வு
இயற்கையில்லாமல் ஏது நம் வாழ்வு?
– வேடந்தாங்கல் சுகுணன், செங்கல்பட்டு