காரணமின்றி ஏற்காதீர்கள்! – பொழுது போய்க் கூட்டி வாரிக் கொட்டக்கூடாது?
சிகரம்
பொழுது போன நேரத்தில் கூட்டிவாரிக் கொட்டக் கூடாது என்பது சம்பிரதாயம்.
“பொழுது போன நேரத்தில் கூட்டிவாரிக் கொட்டினாலும் அதை வெளியிலே கொட்டக்கூடாது. வீட்டிற்குள் ஒரு மூலையில் ஒதுக்கி வைக்க வேண்டும்; வெளியில் கொட்டினால் இலக்குமி வெளியே போய்விடும். விடிந்த பின்தான் வெளியில் கொட்ட வேண்டும்” என்பர்.
அக்காலத்தில் இன்றைக்கு உள்ளது போல மின்வசதிகள் இல்லை. பொழுது போகும் வேளையில் கூட்டினால், பகலில் நம்மையறியாமல் தவறி விழுந்த விலை உயர்ந்த நகை, காசு போன்ற பொருள்கள் கூட்டும்குப்பையோடு சேர்ந்துவிடும். அப்படியே இருட்டு வேலையில் தோட்டத்துக் குப்பையில் கொண்டுபோய் கொட்டினால், அந்தப் பொருள்கள் நமக்குத் தெரியாமல் குப்பையோடு போய்விட வாய்ப்புண்டு.
அதைத் தவிர்க்கவே, பொழுது போன நேரத்தில் கூட்டி வாரிக் கொட்டக்கூடாது என்றனர். அப்படியே கூட்டினாலும் ஒரு மூலையில் ஒதுக்கி வைத்து, விடிந்த பின்தான் கொட்ட வேண்டும் என்கிற மரபு பின்பற்றப்படுவதால், இதை ஏற்படுத்தியதன் நோக்கம் இதற்காகத்தான் என்பது தெளிவாகிறது.
கூட்டியதை ஒரு மூலையில் ஒதுக்கிவைத்தால் விடிந்து அள்ளும்போது முக்கிய பொருள்கள் நம் கண்ணில்படும். அதனால், அவற்றைக் குப்பைக்குப் போகாமல் நாம் பொறுக்கிவிடலாம். இதனால் பொருள் இழப்பு ஏற்படாது. இரவு வேளையிலே கொட்டியிருந்தால் இவை குப்பையோடு போயிருக்கும். அதைத்தான் இலக்குமி போய்விடும் என்றனர். இலக்குமி என்றால் செல்வம் என்று பொருள் உண்டல்லவா? மேலும், பொருள்களை, செல்வத்தை இலக்குமியாகக் கருதினர்.
ஆனால், இந்த உண்மையை உணராத நம் மக்கள், இலக்குமி என்கிற கடவுள் போய்விடும் என்று எண்ணிக்கொண்டு, இவ்வழக்கத்தைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுகின்றனர்.
ஒரு தாய், தன் மகளை ஒருநாள் சாயங்கால வேலையில் அடியோ அடியென்று அடித்தாள். ஏன் என்று விசாரித்தபோது,
“தடிமாடாட்டம் வளர்ந்துட்டா; கொஞ்சமாவது அறிவிருக்கா? பொழுது போன நேரத்தில் கூட்டி வாரிக் கொட்டாதே, லெட்சுமி போய்விடும் என்று எத்தனை தரம் சொல்றது? இந்த நேரத்தில கூட்டி வாரிக் கொட்டிட்டு வராளே!” என்று தன் மகளைப்பற்றி பொங்கினாள்.
இதுபோன்று, இந்த வழக்கத்தை எத்தனையோ பேர் தவறாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்! மின்சார வசதியுள்ள இந்த நாளில், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கூட்டிவாரிக் கொட்டலாம்.
பகல்போல் குழல் விளக்குகள் எரியும் வீட்டில் கூட, கூட்டி ஒரு மூலையில் ஒதுக்கி, விடிந்த பின்தான் கொண்டு போய்க் கொட்டுகிறார்கள்.
கூட்டி வாரும் ஒவ்வொரு முறையும் கூர்ந்து கவனித்து ஏதாவது தவறிக் கிடக்கிறதா? என்று பார்த்துக் குப்பையில் கொட்டுதல் சாலச் சிறந்தது. அதனை விடுத்து இரவு முழுக்க மூலையில் ஒதுக்கி வைத்துவிட்டு, விடிந்து எதையும் பார்க்காமல் அப்படியே கொண்டு போய் கொட்டினால் அச் செயலால் எந்த நன்மையும் இல்லை.
மேலும் குப்பைகளைச் சேர்த்துவைக்கும்போது, அதில் கொசுக்களும், கேடு பயக்கும் நுண்ணியிர்களும் பரவ வாய்ப்புண்டு.
எனவே, கூட்டிவாரிக் கொட்டுவதற்கு பொழுது, நேரம் எதுவும் பார்க்கத் தேவையில்லை. வெளிச்சம் உள்ள நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் கூட்டிவாரிக் கொட்டலாம்.
இரவில் நகம் வெட்டக்கூடாது?
இரவில் நகம் வெட்டக்கூடாது என்பது சம்பிரதாயம். அவ்வாறு வெட்டினால் கேடுவரும் என்று நம்புகின்றனர்.
பொதுவாக அக்காலத்தில், இரவு வேளையென்றாலே இருட்டாக இருக்கும். மண்ணெண்ணெய் விளக்கு அல்லது அகல் விளக்கின் ஒளி மிக மங்கலாகவே இருக்கும்.
எனவே, இரவு வேளையில் நகம் வெட்டும்போது, விரலில் காயம் ஏற்பட வாய்ப்புண்டு. இதைத் தவிர்க்கவே இரவில் நகம் வெட்டக் கூடாது என்றார்கள். இவ்வுண்மையை உணராமல், இரவில் நகம் வெட்டவே கூடாது என்று எண்ணுவது அறியாமை ஆகும். அதிலும் இப்போது இருப்பதுபோன்ற வசதியான நகம் வெட்டும் கருவி அப்போது இருந்திருக்க வாய்ப்பில்லை.
இக்காலத்தில், மின்விளக்கு ஒளியில் இரவில் தாராளமாக நகம் வெட்டலாம். அதற்கு நேரங்காலம் ஒன்றும் பார்க்கத் தேவையில்லை.
வெட்டிய நகத்தைக் கண்டபடி போடாமல், முறையாக சேகரித்து, குப்பையில் போடவேண்டும் என்பதைத் தவறாது கடைப்பிடித்தால் போதும்!