மன்னரை முட்டாளாக்கிய அர்ச்சகர்
சரா
ஒருமுறை விஜயநகர அரசர் கிருஷ்ண தேவராயர் தனது அரசவை விகட கவியான தெனாலிராமனிடம், “நமது நாட்டில் முட்டாள்கள் உள்ளனரா?’’ என்று கேட்டார்.
அதற்கு தெனாலிராமன், “எனக்கு நான்கு நாள் கொடுங்கள் நிறைய முட்டாள்களை அடையாளம் காண்பிப்பேன். நமது அரசவையிலேயே பல முட்டாள்களை அடையாளம் காண்பிப்பேன்’’ என்றார். மன்னனுக்கு கோபம் வந்தது, “எனது அரசவையில் முட்டாள்கள் இருக்கிறார்கள் என்கிறாய்? அடையாளம் காண்பித்து நிரூபிக்க வேண்டும். இல்லையென்றால், கடுமையான தண்டனைக்கு தயாராகிக்கொள்’’ என்று கூறி நான்கு நாள் விடுப்பு கொடுத்துவிட்டார்.
இதனை அடுத்து தெனாலிராமன் வீட்டிற்கு வந்து கடைவீதிக்குச் சென்று ஒரு செருப்பு தைப்பவரிடம், “ஒரு ஜோடி செருப்பு தைத்துக்கொடு’’ என்றார். அதற்கு அந்த செருப்பு தைப்பவர், அளவு கேட்டார். அதற்கு தெனாலிராமனோ, “மிகவும் விலை உயர்ந்த நவரத்தினம், வைரம், வைடூரியம் மற்றும் தங்க இழைகள் கொண்டு தயாரிக்கவேண்டிய செருப்பு; ஒரு அடி நீள, அரை அடி அகலம்’’ என்று சொல்லி கைநிறைய தங்க நாணயத்தைக் கொடுத்து விட்டுச் சென்றார்.
தங்கம் மற்றும் நவரத்தினங்கள் கொண்ட செருப்பு என்றால் முக்கியமான ஒருவருக்காக இருக்கும் என்று நினைத்து அவரும் தரமான செருப்பை செய்து கொடுத்துவிட்டார்.
அந்தச் செருப்பை எடுத்துச் சென்ற தெனாலிராமன், அங்குள்ள ஒரு பெருமாள் கோவிலுக்குள் ஒரு செருப்பைப் போட்டுவிட்டு, மற்றொன்றைத் தானே வைத்துக் கொண்டார். அதிகாலையில் கோவிலைத் திறந்து பார்த்த அர்ச்சகர், விலை உயர்ந்த கற்கள் மற்றும் தங்கத்தில் உள்ள ஒரு செருப்பைப் பார்த்ததும் யாரோ ஒருவர் பகவானுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்த செருப்பை, கோவில் மூடியிருப்பதைப் பார்த்து உள்ளே வீசிவிட்டுச் சென்றுள்ளார் என்று நினைத்து மற்றொரு செருப்பு அங்கு இருக்கிறதா என்று தேடிப்பார்த்தார்.
ஆனால், மற்றொன்று அங்குக் கிடைக்கவில்லை. இருப்பினும், ஒரு செருப்பை வைத்து தனது பிழைப்பை ஓட்டலாம் என்று அர்ச்சகர் நினைத்தார். பிரம்மோற்சவத்தின் முதல் நாள் கூட்டம் மெல்ல மெல்ல கூடத் தொடங்கியது. அந்த அர்ச்சகர் அங்கு வந்த செல்வந்தர்களிடம் ஒற்றைச் செருப்பு பற்றிக் கூறினார். இதைக் கேட்டதும், செல்வந்தர்கள் தங்கமும் வைரமும் தட்சணையாகக் கொடுத்து, பெருமாளின் ஒற்றைச்செருப்பில் பெருமாளின் பாதம் பட்ட இடம் என்று கூறி நக்கிப் பார்த்து, தலையில் வைத்துக் கொண்டாடினார்கள்.
ஏழைகள் தூரத்தில் இருந்து பார்த்து, “கோவிந்தா! கோவிந்தா!” என்று கூறி அந்தச் செருப்பை வணங்கினார்கள். அரண்மனையில் இருந்த பெரிய அதிகாரிகள், அமைச்சர்கள் என அனைவருமே செருப்பை நக்கிப் பார்த்து தலையில் வைத்துக் கொண்டாடினர்.
பெருமாளின் ஒற்றைச் செருப்பு விவகாரம் கிருஷ்ணதேவராயருக்கும் தெரிந்தது. அவரும் பெருமாள் கோவிலுக்கு வந்து தங்கமும் நவரத்தினமும் தட்சணையாகக் கொடுத்து, அந்தச் செருப்பை வணங்கினார். பெருமாளின் பாதம் பட்ட இடம் என்று கூறி அவரும் அதை நக்கிப் பார்த்தார். தனது தலையில் வைத்து கொண்டாடினார்.
இந்த நிலையில் தெனாலிராமனுக்கு, அரசர் கொடுத்த விடுமுறை முடிந்தது, தெனாலிராமனும் அரண்மனைக்கு வந்தார். அரண்மனையே பரபரப்பாக இருந்தது, “தெனாலிராமன் அரண்மனையில் உள்ள ஒருவரையாவது முட்டாள் என்று நிரூபித்துவிடுவாரா? அப்படி நிரூபித்தால் முட்டாள்களின் நிலை என்னவாகும்? அப்படி நிரூபிக்காவிட்டால் தெனாலிக்கு என்ன தண்டனை கிடைக்கும்?’’ என்று அனைவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
தெனாலிராமன் மிகவும் சோகமாக அமர்ந்திருந்தார். அனைவரும் நினைத்தனர் _ இன்று தெனாலிராமனுக்கு நல்ல தண்டனை கிடைக்கப் போகிறது. ஆகையால்தான் அவர் சோகமாக அமர்ந்துள்ளார் என்று நினைத்தனர். மன்னரும், “என்ன, தெனாலிராமா! தோல்வியை ஒப்புக்கொள்கிறாயா?’’ என்றார்.
அதற்கு அவர், “என்ன செய்ய மன்னா! நான் சோகமாக இருந்ததற்குக் காரணம் வேறு. எனது மூதாதையர் பயன்படுத்திய செருப்பில் ஒன்று தொலைந்துவிட்டது, அதை எங்கள் பரம்பரை நூறு ஆண்டுகளாகப் பாதுகாத்து வந்தது, ஆனால், யாரோ திருடிவிட்டார்கள் மன்னா” என்றார்.
“நீ பிரச்சனையைத் திசை திருப்பவேண்டாம், அப்படி திருடு போயிருந்தால் ஒரு செருப்பை எடுத்து என்ன செய்யப்போகிறார்கள்? இரண்டையும் திருடவேண்டுமே? ஆகையால் நீ பொய் சொல்கிறாய்” என்றார்.
அதற்கு தெனாலிராமன், “அப்படி இல்லை மன்னா! இதோ கையோடு அந்த ஒற்றைச் செருப்பைக் கொண்டுவந்துள்ளேன் என்று கூறி தன்னிடமிருந்த ஒற்றைச் செருப்பைக் காண்பித்தார்.”
இதைக் கண்ட மன்னன், “தெனாலி, நீதான் திருடன், பெருமாளுடைய செருப்புகளில் ஒன்றைத் திருடிக்கொண்டு உன்னுடைய மூதாதையரது என்று உரிமை கொண்டாடுகிறாயா?’’ என்று கோபத்துடன் கூறினார். மேலும் பெருமாள் கோவிலில் இருந்த செருப்பைக் கொண்டுவரச் சொன்னார். கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட செருப்பு, கோவிலில் உள்ள பெரும் செல்வந்தர்களாலும் மன்னராலும் நக்கப்பட்டு பளபளவென்று இருந்தது. மேலும் “இது பெருமாளின் செருப்பு. ஆகவே, நானும் பகவானின் பாதம் பட்டதை நக்கிப் பார்த்தேன்” என்றார்.
இதைக் கேட்டதும் தெனாலிராமன், தனக்கு செருப்பு தைத்துக்கொடுத்தவரை அழைத்துவரச் சொல்லி, பிறகு நடந்தவை அனைத்தையும் கூறினார். ஊரில் உள்ள அனைத்து செல்வந்தர்-களும், அரசவை பிரமுகர்களும், மன்னரும், என்ன என்று கொஞ்சமும் சிந்திக்காமல், அர்ச்சகர் கூறினான் என்பதற்காக செருப்பை நக்கி, அனைவருமே முட்டாள்கள் ஆனோம் என்று எண்ணி அரசவையில் தலைகுனிந்து அமர்ந்தனர்.
கடவுளின் பெயரால் எளிதில் தாம் முட்டாளாக்கப்பட்டதை உணர்ந்த கிருஷ்ணதேவராயர் தாம் வருந்தியதோடு, தம் முட்டாள்தனத்தைத் தனக்கே வெளிச்சமிட்டுக் காட்டிய தெனாலியையும் புகழ்ந்தார். மன்னரை முட்டாளாக்கிய தெனாலி தனது சவாலில் வெற்றி பெற்றும் விட்டார்.