மாமல்லபுரம் to ஆஸ்கர் விருது
அண்மையில் மாமல்லபுரம் சீன அதிபரின் வருகையால் சிறப்புக் கவனம் பெற்றது. இப்போது ஒரு சிறுமியால் அனைவரின் பார்வையும் மீண்டும் மாமல்லபுரம் பக்கம் திரும்பியுள்ளது. தினமும் காலை, மாலை என இரண்டு வேளையும் ‘ஸ்கேட்டிங்’ பலகையுடன் புறப்பட்டு வருகிறாள் 9 வயதுச் சிறுமி கமலி. கமலியின் தாய் சுகந்தி வருமானத்திற்கு மீன் விற்று பிழைப்பு நடத்துபவர். மகளின் ‘ஸ்கேட்டிங்’ ஆசையைப் புரிந்துகொண்டு, உறவினர் ஒருவர் மூலம் ‘ஸ்கேட்டிங்’ பலகையை வாங்கித் தந்தார். அதுதான் அவளை ஆஸ்கர் விருதுத் தேர்வுப் பட்டியல் வரை கொண்டு சென்றுள்ளது.
இந்தியா வந்த இங்கிலாந்து ஆவணப் படத் தயாரிப்பாளர் சாஷா என்பவர், கமலியை ‘ஸ்கேட்டிங்’ பலகையோடு அவள் செய்யும் சாகசங்களை வீடியோ எடுத்துள்ளார். அதனை ‘கமலி’ என்னும் பெயரில் ஆவணக் குறும்படமாக மாற்றினார். மும்பையில் கடந்த மே மாதம் நடந்த பன்னாட்டு குறும்பட விழா மற்றும் அட்லாண்டா திரைப்பட விழாக்களில் சிறந்த குறும்பட இயக்குநர் விருதை, சாஷாவின் ‘கமலி’ படம் பெற்றது. 2020ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கும் இப்படம் தகுதி பெற்றுள்ளது. இதுகுறித்து கமலி கூறுகையில்,
“படிப்பில், ஸ்கேட்டிங்கில் கவனமாக உள்ளேன். சாதிக்க ஆசை. மற்றவர்கள் எனக்கு உதவ வேண்டும்’’ என்கிறார். “வருமானத்திற்கு மீன் வறுவல் விற்றுப் பிழைக்கிறேன். கமலியை சிறந்த ஸ்கேட்டிங் வீராங்கனையாக உருவாக்க உறுதுணையாக நிச்சயம் அவருடன் இருப்பேன். எங்கள் வாழ்க்கைப் படம் ஆஸ்கர் விருதுத் தேர்வுக்கு தகுதி பெற்றது மகிழ்ச்சி” என்கிறார் கமலியின் தாயார். வறுமையை வென்று, சாதனை புரிந்துள்ள கமலி, அனைவருக்கும் எடுத்துக்-காட்டாக நிற்கிறார்… இல்லை சறுக்குகிறார்!
– ராகவ்
கணிதப் புதிர் – சுடோகு