நோபல் பரிசுக்கான முதல் படி – பள்ளியில் இருந்துதான் துவங்குகிறது
சரவணா இராஜேந்திரன்
மருத்துவத்திற்கான நோபல் பரிசு
“நம் செல்கள், ஆக்சிஜன் தேவைக்கேற்ப எவ்வாறு தங்களை மாற்றிக்கொள்கின்றன” என்னும் தலைப்பில் ஆராய்ச்சி செய்த சர் பீட்டர் ரெட்கிளிப், வில்லியம். ஜி.கேலின், கிரேக் எல் செமன்ஸா ஆகியோருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது. இது தொடர்பாகப் பேசிய நோபல் கமிட்டி குழுவினர், “நம் வாழ்க்கைக்கு மிக இன்றியமையாத மாற்றங்கள் ஆக்சிஜனால் நிகழ்வன. இக்கண்டுபிடிப்பு, பல கேள்விகளுக்கு விடை அளிப்பதாக உள்ளது. இக்கண்டுபிடிப்பின் மூலம் புற்றுநோய் மற்றும் பல நோய்களுக்குத் தீர்வு காணலாம்” என்று கூறியுள்ளனர்.
நோபல் பரிசு பெறும் இம்மூவரும், வெவ்வேறு இடங்களில் தங்களின் ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெவ்வேறு இடங்களில் ஆராய்ச்சி செய்தாலும், செய்த ஆராய்ச்சி ஒன்றுதான். நம் உடலில் ஆக்ஸிஜன் அளவு மாறும்போது, அதற்கு ஏற்றாற்போல் எவ்வாறு நம் செல்களும் மாறுகின்றன என்பதே இவர்களின் கண்டுபிடிப்பு. திசுக்களில் ஏற்படும் ஆக்சிஜன் குறைபாட்டால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இக்கண்டுபிடிப்பின் மூலம், நம் செல்களில் ஆக்சிஜன் குறைந்த நிலையிலும் அதைத் தாக்குப்பிடிக்க வைக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளனர் இம்மூவரும்.
சர் பீட்டர் ரெட்கிளிப், வில்லியம். ஜி.கேலின், கிரேக் எல் செமன்ஸா
மூன்று ஆராய்ச்சியாளர்களுக்கும் நோபல் பரிசு அறிவிப்புச் செய்தி, இன்ப அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் மரபணுவியல் பேராசிரியரான செமன்ஸா, நோபல் பரிசு பெற்றது பற்றிக் கூறுகையில், “பள்ளியில் என் உயிரியல் ஆசிரியை எனக்குத் தூண்டுகோலாக இருந்தார் . அவர் எங்கள் வகுப்பு மாணவர்களிடம், ‘நீங்கள் நோபல் பரிசு பெறுகையில், நீங்கள் அதற்கான அடிப்படையை இங்கிருந்துதான் கற்றுக் கொண்டீர்கள் என்பதை மறக்கக்கூடாது’ என்று கூறிய வார்த்தைகள், நோபல் பரிசு பெற வேண்டும் என்பதை பசுமரத்தாணிபோல் பதிந்து, என்னை அடைய வைத்துள்ளது” என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார். இவர், ஆக்சிஜன் அளவு நம் உடம்பில் குறையும்போது, எரித்ரோபயோடினைச் சுரக்கச் செய்யத் தூண்டும் மரபணுவைக் கண்டு-பிடித்துள்ளார். எரித்ரோபயோடின் தூண்டப்-படுவதால், ஆக்சிஜன் கொண்டு செல்லும் சிவப்பு ரத்த அணுக்கள் அதிகமாகச் சுரந்து, ஆக்சிஜன் குறைபாட்டைச் சமன் செய்யும்.
வில்லியம் ஜி.கேலின், பாஸ்டனில் உள்ள டேனா பார்ப்பர் புற்றுநோய் இன்ஸ்டிட்யூட்டில், ஆராய்ச்சியாளராக உள்ளார். இவருக்கு, அதிகாலையில் நோபல் பரிசு குறித்து அறிவிக்க, ‘இது கனவா? அல்ல நனவா?’ என்று அவரால் நம்ப முடியவில்லை என்று கூறியுள்ளார். லண்டனிலுள்ள பிரான்சிஸ் கிரிக் இன்ஸ்டிட்யூட்டில் ஆராய்ச்சியாளரான சர் பீட்டர் ரெட்கிளிப்பும் இவர்களுடன் நோபல் பரிசைப் பகிர்கிறார்.
இக்கண்டுபிடிப்பை இவர்கள் தலைசிறந்த ஆராய்ச்சி இதழ்களுக்குப் பிரசுரிக்க அனுப்பியபோது, அவை நிராகரிக்கப்பட்டன. ஆனால், இவர்கள் மனம் தளராமல் இருந்ததற்கான பரிசாக இந்த நோபல் பரிசு கிடைத்துள்ளது. புற்றுநோய்க் கட்டிக்கு நடுவில் இருக்கும் செல்கள், ஆக்சிஜன் இல்லாமலேயே வாழும் தன்மை கொண்டன. இத்தன்மையால் அதைத் தகர்ப்பது பெரும் சவாலாக இருந்தது. இக்கண்டுபிடிப்பின் மூலம் அவற்றுக்கான விடை கிடைத்துள்ளது. புற்றுநோய் சிகிச்சையில் ஒரு பெரும் புரட்சியாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றுள்ள இம்மூவருக்கும் ஒன்பது லட்சம் டாலர்கள் _ அதாவது, இந்திய மதிப்பில் ரூபாய் 6,38,81,259 பகிர்ந்தளிக்கப்படும். மேலும், பல ஆராய்ச்சிகள் செய்து, புதிய மருத்துவ முறைகளைக் கண்டுபிடித்து, மக்களை அச்சுறுத்தும் தீவிர நோய்களைத் தகர்த்தெறியப்போகும் ஆராய்ச்சியாளர்களுக்கு வாழ்த்துகள்.
இயற்பியலுக்கு மூவர்
2019-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜேம்ஸ் பீபிள்ஸ், மைக்கேல் மேயர், திதியர் குவெலோஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பவுதிக அண்டவியல் கண்டுபிடிப்புகளுக்காக ஜேம்ஸ் பீபிள்ஸ் என்னும் விஞ்ஞானிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டும்; மைக்கேல் மேயர், திதியர் குவெலோஸ் ஆகிய இருவருக்கும் நம் சூரியக்குடும்பத்துக்கு வெளியே சூரியனைப் போன்ற நட்சத்திரம் ஒன்றைச் சுற்றிவரும் கோள்கள் பற்றிய கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டும் உள்ளது.
மைக்கேல் மேயர், திதியர் குவெலோஸ் இருவரும் வானியல் ஆய்வில் புரட்சி செய்துள்ளனர். இவர்களது ஆய்வு மூலம் பால்வெளியில் நம் சூரியக் குடும்பத்துக்கு வெளியே சுமார் 4000 கோள்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இன்னும் விசித்திர உலகங்கள், நம்ப முடியாத அளவுகளிலும் வடிவங்களிலும் நம் சூரியக் குடும்பத்துக்கு வெளியே உள்ளன. இவையும் கண்டுபிடிப்புக்குரியவை என்பதை இவர்கள் நிரூபித்தனர். பிரபஞ்சத்தின் புதிரான தோற்றம் பற்றிய, அதைவிடப் புதிரான கோட்பாடுகளின் வரலாற்றில் ஜேம்ஸ் பீபிள்ஸ் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொண்டு வரும் ஆய்வுகள் பெருவெடிப்புக் கோட்பாடு முதல் இன்றைய கோட்பாடுகள் வரை நமக்கு நவீனப் புரிதல்களின் அடிப்படைகளை வழங்கும் பேராய்வு ஆகும்.
அதாவது, இந்த மூவரது ஆய்வும் பிரபஞ்சம் பற்றிய புரிதலையும், அதில் மனிதன், பூமியின் இடம்பற்றிய புரிதலையும் மேலும் விரிவுபடுத்துவதும், ஆழப்படுத்துவதுமாகும். பால்வெளி மண்டலங்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டு வரும் ஜேம்ஸ் பீபிள்ஸ் ஸ்வீடன் அகாடெமிக்கு அளித்த நேர்காணலில், “எவ்வளவு கண்டுபிடிப்பு மேற்கொண்டாலும் டார்க் மேட்டர், டார்க் எனெர்ஜி போன்றவை நமக்கு இன்னும் புரியாத புதிராகவே உள்ளன. இன்னும் நிறைய கேள்விகள் உள்ளன, பிரபஞ்சத்தின் இந்த டார்க் மேட்டர் என்பது என்ன? என்ற கேள்வி இன்னமும் இருந்தே வருகிறது” என்கிறார்.
“மற்ற கோள்களில் உயிரினங்கள் இருக்க வாய்ப்புள்ளதா?” என்னும் கேள்விக்கு பீபிள்ஸ் கூறும்போது, “பூவுலகில் இருப்பது போன்ற உயிரினமா என்பது குறித்து எனக்கு அய்யமாகவே உள்ளது. வேதியியல் விஞ்ஞானிகள் அந்த அய்யத்தைப் போக்க வாய்ப்புள்ளது, அங்கு உயிரினங்கள் இருந்தாலும் நாம் ஒருக்காலும் அதைப் பார்க்க முடியாது என்பதே உண்மை” என்றார்.
இரண்டு எழுத்தாளர்களுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு
இந்த ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு இந்த ஆண்டுக்கு ஒத்தி போடப்பட்டது.
தேர்வுக்குழுவில் இடம் பெற்றிருந்த பலர் “மீ டூ” பாலியல் புகாரில் சிக்கியதால் ஸ்வீடன் அகாடமி குழுவில் இடம் பெற்றிருந்த நிரந்தர செயலாளர் சாரா டேனியஸ் உள்பட 7 பேர் பதவியிலிருந்து விலகினர்.
இதையடுத்து புதிய உறுப்பினர்கள் மூலம், தேர்வுக்குழு மாற்றியமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் 2018ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு போலந்து நாட்டைச் சேர்ந்த ஓல்கா டோகார்சுக் என்பவரை தேர்வு செய்துள்ளனர்.
இவரது கவிதை, கதைகள், நாவல்கள் சிறந்த கற்பனை வளத்துடன் கூடிய கலைக் களஞ்சியமாக உள்ளன. அதற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு ஆஸ்திரியாவைச் சேர்ந்த பீட்டர் ஹேண்ட்கே என்பவரையும் தேர்வு செய்துள்ளது.
மொழியில் கூர்மையுடன் கூடிய இவரது நாவல்கள் மற்றும் திரைக் கதைகள் மனித அனுபவத்தின் எல்லைகளையும், தனித்-தன்மையையும் ஆராய்வதாக உள்ளன.
அதற்காக இவர் இவ்வாண்டின் நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மூன்று வேதியியலாளர்களுக்கு நோபல் பரிசு
வேதியியலுக்கான நோபல் பரிசு, இவ்வாண்டு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. லித்தியம்_ அயன் பேட்டரியை மேம்படுத்தியதற்காக இவ்விருது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இவ்விருது, வேதியியல் பேராசிரியர்களான அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் ஜான் குட்டெனாப், நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஸ்டான்லி விட்டிங்ஹாம், ஜப்பானின் மிஜோ பல்கலைக்கழகத்தின் அகிரா யோசினோ ஆகியோருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் முதல் எலக்ட்ரிக் வாகனங்கள் வரை அனைத்து மின்னணுக் கருவிகளையும் நீடித்துச் செயல்பட வைக்கும் லித்தியம்_அயன் பேட்டரிகளை மேம்படுத்தியவர்கள் இவர்கள்தாம்.
1970ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நிலவிய சமயத்தில், விட்டிங்ஹாம் முதன்முதலில் பெரிய அளவிலான லித்தியம் அயன் பேட்டரிகளை உருவாக்கினார். அவருடன் ஜான் குட்டெனாப், யோசினோ ஆகியோர் இணைந்து சிறிய வடிவிலான செயல்திறன் மிகுந்த லித்தியம் பேட்டரிகளை மேம்படுத்தினர். இவர்களின் பங்களிப்பைச் சிறப்பிக்கும் வகையில் டிசம்பர் 10ஆம் தேதி வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது. அப்போது மூவருக்கும் தங்கப்பதக்கத்துடன், சுமார் ரூ.6.5 கோடி பகிர்ந்தளிக்கப்படும்.
பணமதிப்பிழப்பைக் கண்டித்தவருக்கு நோபல் பரிசு
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற பணமதிப்பிழப்பைக் கண்டித்தவருக்கு நோபல் பரிசு. அபிஜித் பானர்ஜி பள்ளிப் பருவத்தில் மோசமான கையெழுத்துக்காகத் தண்டனை பெற்றவராம்.
பொருளாதாரப் பிரிவில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜி, அவர் மனைவி எஸ்தர் மற்றும் மைக்கேல் கிரம்மர் ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு வறுமை ஒழிப்பு சோதனை அணுகுமுறைக்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் அபிஜித் பானர்ஜி தனது பள்ளிப்படிப்பைக் கொல்கத்தா நகரில் பயின்றுள்ளார்.
அபிஜித் பானர்ஜிக்கு ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கணித ஆசிரியையாக இருந்த தீபாலி சென்குப்தா அவரைக் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். அவர், “அபிஜித் பானர்ஜி எட்டாம் வகுப்பு படிக்கும்போது எப்படி இருப்பார் என்பது எனக்கு இன்னும் நினைவில் உள்ளது. அவர் ஒல்லியாக, உயரமாக, மொத்தையான கண்ணாடி அணிந்திருப்பார்.
அவர் மிகவும் அமைதியான மாணவர் ஆவார். அவர் எனது வகுப்பறையில் எங்கு அமர்ந்திருந்தார் என்பது இன்னும் என் நினைவில் உள்ளது. அவர் கணக்கில் மிகச் சிறந்து விளங்கிய போதிலும் முதல் மாணவராக இருந்ததில்லை. இதற்கு முக்கிய காரணம் அவருடைய மோசமான கையெழுத்து ஆகும்.
இதற்காக நான் அவருக்குப் பல முறை தண்டனை அளித்துள்ளேன்.
அத்துடன் அவருடைய தாயாரை அழைத்து அவருடைய மோசமான கையெழுத்து குறித்து புகார் அளித்துள்ளேன்.” என்று கூறினார். அபிஜித் பானர்ஜி கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு தவறு என்று கருத்து தெரிவித்தவராவார்.
வங்கத்தின் மைந்தருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு
* அபிஜித் பேனர்ஜி மேற்குவங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் பிறந்தவர். தற்போது அமெரிக்காவில் குடியேறி அந்நாட்டின் குடியுரிமை பெற்றுள்ளார்.
* மிகவும் குறைந்த வயதில் பொருளா-தாரத்துக்கான நோபல் பரிசுக்கு அறிவிக்கப்பட்டவர் என்கிற பெருமையை எஸ்தர் டஃப்லோ பெற்றுள்ளார். அவருக்கு வயது 46. அபிஜித்தும், எஸ்தர் டஃப்லோவும் கணவன் – மனைவி என்பது குறிப்பிடத்தக்கது
* அபிஜித்திற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “மேற்குவங்கத்தை சேர்ந்த மற்றொரு நபர் தேசத்திற்கு பெருமை தேடித்தந்-துள்ளார். நாங்கள் மிகவும் மகிழ்சியடை-கிறோம்” என பதிவிட்டுள்ளார்.
* மேற்கு வங்கத்தை சேர்ந்த சிறந்த எழுத்தாளரும், பொருளியலாளருமான அமர்த்தியா சென் ஏற்கெனவே பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் என்பது கவனிக்கத்தக்கது.
* கடந்த நூற்றாண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற இரவீந்திரநாத் தாகூர் வங்கத்தைச் சார்ந்தவராவார்.
¨ அபிஜித் பேனர்ஜி பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் முதல் பெரும் விமர்சனத்திற்கு உள்ளான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவராவார். மேலும் மாணவர் போராட்டம் ஒன்றில் கைதாகி திகார் சிறையில் இருந்தவர்.
¨ இவரது பொருளாதார திறமைகளை கண்டு உலகவே வியந்துள்ளது. நூறு நாள் வேலைவாய்ப்புத்திட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நலத்திட்டங்களில் இவரது ஆலோசனையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது