பேர் சொல்லும் பிள்ளைகள்!
ஆடியும் பாடியும் அரட்டை அடித்தும்
அகமும் மகிழ்வு அடையாப் பிள்ளைகள்!
வாடியும் யாரையும் வருத்தப் படுத்தும்
வகையில் அழுதும் வடியாப் பிள்ளைகள்!
காடுகள் யாவிலும் வசித்தும் பலர்க்குக்
காட்சியும் எளிதில் கிடையாப் பிள்ளைகள்!
ஓடிடும் பாம்பையும் விரட்டிப் பிடிக்கும்
ஊக்கமும் உடைய கீரிப் பிள்ளைகள்!
கோடுகள் மூன்றுதம் முதுகில் தரித்துக்
குதித்துத் தாவித் திரியும் பிள்ளைகள்!
நாடிடும் தீங்கனி பறித்துப் புசித்து
நமக்கும் போடும் அணில் பிள்ளைகள்!
கூடுகள் கூரிய அலகால் துளைத்துக்
குடைத்து மரத்தில் அமைக்கும் பிள்ளைகள்!
சூடிடும் ஆரமும் கழுத்தில் சொலிக்கச்
சுழன்று பறக்கும் கிளிப் பிள்ளைகள்!
வீடுகள் தோப்பினில் விரும்பி வளர்க்கும்
வெயிலில் காற்றுடன் நிழல்தரும் பிள்ளைகள்!
கோடையில் யாவரும் அருந்திக் களிக்கும்
குளிரிள நீர்தரும் தென்னம் பிள்ளைகள்!
கேடுகள் தேடிஎவ் வுயிர்க்கும் கொடுக்கும்
கெடுமதி கொள்ளாமல் வாழ்கின்ற பிள்ளைகள்!
ஏடுகள் பாடமும் எழுத்தும் படிப்பும்
இல்லாமல் இயற்கையின் பேர்சொல்லும் பிள்ளைகள்!
– தளவை இளங்குமரன்