உழவர் மதிப்பைப் போற்று!
டிசம்பர் 23 – விவசாயிகள் நாள்
பசியே இல்லா மனிதர்கள்
பாரில் இங்கே எவருண்டு?
பசியை ஒழிக்கப் பாடுபடும்
பாரின் வேந்தர் உழவரன்றோ?
கதிரோன் எழுந்து விடும்முன்பே
கழனி தன்னில் கால்வைத்துக்
கதிரை அடித்தே உணவாக்கும்
காலம் வரையில் உழைத்திடுவர்;
வெயிலை முதுகில் தாங்கிடுவர்;
வீழும் மழையில் நனைந்திடுவர்;
உயிரைக் கொடுத்துப் பயிர்கள்தம்
உயிரை யேதான் காத்திடுவர்;
காலத் தாலே பெய்கின்ற
கனத்த மழையே அவர்க்கின்பம்;
ஞாலப் பசியைத் தீர்க்குமிவர்
நாழிக் கூழே குடித்திடுவர்;
உலக வறுமை நீங்கிடவே
உயிரை ஈந்தே உழைத்திடுவர்;
நிலமே அவர்தம் ஆதாரம்;
நீரே அவர்தம் மூச்சாகும்;
உணவை உண்ணும் நேரத்தில்
உழவர் துயரை உணர்ந்திடுவீர்;
உணவின் பருக்கை சிந்தாமல்
உழவின் மதிப்பைப் போற்றிடுவீர்!
– கே.பி.பத்மநாபன், சிங்காநல்லூர், கோவை