நலமா பிஞ்சுகளே?
பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே!
எல்லாரும் எப்படி இருக்கீங்க? பிஞ்சுகளாகிய நீங்கள் நல்லா சாப்பிடணும். ஆனால், வீட்டுத் தின்பண்டமான நொறுக்குத் தீனியை விட்டு விட்டு _ விரைவு உணவு (Fast Food) எனப்படும் பர்கர் (Burger), பிட்சா (Pizza) _ இப்படி கண்டதையெல்லாம் ஒரு அமுக்கு அமுக்குவீர்களானால், கொஞ்சநாளில் அது உங்களை ஒரு அமுக்கு அமுக்கி, படுக்கவைத்து விடும்; எனவே, நல்ல விருப்பமான சத்துக்கள் கிடைக்கும் சாப்பாட்டை நன்றாகச் சாப்பிடுங்கள், வேளாவேளைக்குச் சாப்பிடணும் _ தெரியுமா?
அதிலே ரொம்ப முக்கியம் _ காலைச் சிற்றுண்டி. உங்களில் பலர் தாமதித்து எழுவதும், காலையில் ‘அறக்கப்பறக்க’ அம்மாவிடம சண்டை பிடித்துவிட்டு, ‘மணியாகிவிட்டது’ என்று, கொடுக்கும் உணவைச் சரிவரச் சாப்பிடாமல், வெறும் வயிற்றுடன் பள்ளிக்கு ஓடுவதும் விரும்பத்தக்கதா?
போதிய உணவு எடுத்துக்கொண்டு காலையில் கல்விச் சாலைக்குச் சென்றால்தான், வகுப்பில் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுப்பதில் கவனமும் ஈர்ப்பும் ஏற்படும். எனவே, கொலைப்பட்டினியோடு வகுப்பறைக்குப் போய் மயங்கி விழாதீர்; இடையில் பசி வயிற்றைக் கிள்ளும் நேரத்தில் எதையோ வாங்கிப் போட்டு அடைத்தால், அப்புறம் வயிற்றுவலிதான் வரும். அதனால் நல்லா சாப்பிடணும்; சரியா சாப்பிடணும்.
அதுபோலவே நல்லா படிக்கணும். ரொம்ப நேரம் பாடத்துடன் மல்லுக்கட்ட வேண்டாம்; வகுப்பறையில் நன்கு கவனித்து, வீட்டுப் பாடம் தந்தால் முடித்து, முறையாக நாளும் படித்து-வந்தால், அலுப்பு ஏற்படாது!
அதுபோலவே விளையாட்டும் சரி, தூக்கமும் சரி _ அந்தந்த நேரத்தில்.
தொலைக்காட்சி ஒரு தொல்லைக்காட்சி. அதன் முன்னே பல மணி நேரத்தைச் செலவழிப்பதோ, சதா கைப்பேசி _ செல்போனை _ வைத்து தட்டிக்கொண்டே, வெட்டிக் கதைகளை ரசிக்கும் சுவையைப் பெருக்கிக் கொண்டால், கல்வியும் தேர்வும், வெற்றியைத் தராது. தோற்ற பிறகு அழுது பயன் என்ன? மனமுடைந்த, பக்குவமற்ற நமது இளங்குருத்துகள் எப்படி தள்ளாடுகின்றன என்பதெல்லாம் உங்களுக்குப் புரிய வேண்டும்!
பள்ளியிலோ, கல்லூரியிலோ நூலகத்திற்குச் சென்று புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டா, பிஞ்சுகளே? இல்லையென்றால், உடனே உண்டாக்கிக் கொள்ளுங்கள். அது உங்களை உயர்த்தும்!
பயண நூல்கள் _ கதைகளைக் கேட்கும்போது உடனே உலக வரைபடத்தை (Atlas)
எடுத்து, அந்த நாடு எங்கே என்கிற விவரத்தைப் பார்த்துவிட வேண்டும், புரிகிறதா?
முந்தைய மாதிரி இல்லையே? சொற்களுக்குப் பொருள் கண்டுபிடிக்க அகராதிச் செயலிகள் (Dictionary Apps) போதுமே! அதைத் தட்டினால் எழுத்துப் பிழையற சரியான ‘Spelling’, உச்சரிப்புடன் தெரிந்துகொள்ள _ அதுவே நமக்கு நல்லாசிரியர் போலச் சொல்லிக் கொடுக்கிறதே! அதைப் பயன்படுத்தி தமிழ், ஆங்கிலச் சொற்களைக் கற்றுக்கொண்டு உரையாடணும்; மேடைப் பேச்சுக்கு அவை உங்களுக்கு உதவும்.
இது முன்னுரைதான். எனது அமெரிக்கப் பயணத்தில் கண்ட விநோதங்கள் _ வரலாறுகளை, அடுத்த இதழிலிருந்து உங்களுடன் கலந்து உரையாட வருவேன். தயாராக இருங்கள். அதற்கு… அமெரிக்காவைப் புரட்டுங்கள்; தெரிந்து-கொள்ளுங்கள். சந்திப்போமோ?
அன்புடன்,
ஆசிரியர் தாத்தா
கி.வீரமணி