சிறுகதை : முட்டாளுக்கு மாலை போட்ட யானை
சரா
கிருஷ்ண தேவராயரின் ஆட்சியின் போது அயல்நாட்டிலிருந்து வணிகர்கள் விஜயநகரத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வந்து வணிகம் செய்து கொண்டிருந்தனர். ஆகையால் அதற்கென்று தனியாக ஓர் அமைச்சரை நியமிக்க கிருஷ்ண தேவராயர் முடிவு செய்தார். அந்தப் பதவிக்கு பல மொழிகள் கற்று அயல்நாடுகளுக்குப் பயணித்து வணிகம் செய்த அனுபவம் மிக்க நபராகவும், தன் மீது மதிப்பு வைத்திருக்கும் நபராகவும் ஒருவரைத் தேர்ந்தெடுக்க விரும்பினார்.
இந்த விவகாரம் விஜயநகரம் எங்கும் பரவியது. விஜயநகரத்தில் உள்ள பெருமாள் கோவிலில் தலைமைப் பூசாரி ஜெம்மே சாஸ்திரி என்பவருக்கும் இந்த விவகாரம் காதுக்கு எட்டியது. ஜெம்மே சாஸ்திரிக்கு 2 மகன்கள். இருவருமே பயங்கர ஊதாரிகள், சோம்பேறிகள். இருப்பினும் மன்னர் கூறிய அந்த அமைச்சர் பதவியை எப்படியும் தனது மூத்த மகனுக்குக் கொடுத்தால் இனி காலம் முழுவதும் சுகபோக வாழ்வு வாழலாம். வணிக நிருவாகம் பார்க்கும் அமைச்சர் என்றால் செல்வம் கொட்டிக்கொண்டே இருக்கும் என்கிற பேராசை பிடித்த ஜெம்மே சாஸ்திரி, செய்தி கேட்டதில் இருந்து எப்படி தனது திட்டத்தை நிறைவேற்றி, தனது மகனை அரச சபையில் அமைச்சராக்கி, சுகபோக வாழ்க்கை வாழ்வது என்று இரவு பகலாகச் சிந்தித்துக்கொண்டு இருந்தார். கோவிலுக்கு யாரோ ஒருவர் தானமாகக் கொடுத்த யானைதான் நாள்தோறும் அதிகாலையில் கோவில் கதவுகளைத் திறக்கும். அப்படி திறக்கும்போது ஜெம்மே சாஸ்திரிக்கு யானை மாலை அணிவிக்கும். இதுதான் நீண்ட காலமாக நடைபெறும் வழக்கம்.
அன்றும் ஜெம்மே சாஸ்திரி கோவிலுக்குச் சென்றதும் கோவில் யானை கதவைத் திறந்து சாஸ்திரிக்கு மாலை போட்டது. உடனே அவருக்கு ஒரு தந்திர சிந்தனை உருவாகியது. கோவிலுக்கு வரும் தனக்கு மிகவும் வேண்டிய சிலரிடம் பொற்காசுகள் கொடுத்து, “இந்த யானை முன் ஜென்மத்தில் பெருமாளின் வாகனமான கருடனாகப் பிறந்து இப்பிறவியில் யானையாக மீண்டும் பிறந்துள்ளது, இந்த யானை யார் கழுத்தில் மாலை அணிவிக்கிறதோ அவர் பல மொழிகளையும், கலைகளையும் கற்ற மிகச் சிறந்த புலமை பெற்றவராகத் திகழ்வார் என்று ஊர் முழுவதும் வதந்தியைப் பரப்பச் சொன்னார். ஜெம்மே சாஸ்திரியிடம் பொற்காசு பெற்றவர்கள் நகரத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று கோவில் யானை குறித்து வதந்திகளை சாஸ்திரிகள் கூறியதைவிட அதிகமாக கட்டுக்கதைகள் சேர்த்துப் பரப்பினார்கள்.
இந்த விவகாரம்பற்றி அரசவையிலும் பேசத் துவங்கினார்கள். ஜெம்மே சாஸ்திரி மிகவும் தந்திரமானவர். மன்னர் மிகவும் அதிகமாக பெருமாள் பக்தி கொண்டவர். பெருமாள் கோவில் கதவு திறந்து கோவிலில் பூஜை செய்யும் மணி ஓசை கேட்ட பிறகுதான் அவர் அந்த நாளுக்கான பணியைத் துவக்குவார். ஆகவே, யானையை வைத்து கட்டுக்கதைகளைப் பரப்பிவிட்டு, அதை மன்னன் கேட்கவைத்து தனது மகனை அமைச்சராக்கும் திட்டத்தைச் செயலாற்றினார். ஒரு நாள் மன்னர் தனது அமைச்சர்களிடம், “நான் வணிகத் துறைக்கான ஓர் அனுபவமிக்க நபரைக் கேட்டிருந்தேனே யாராவது கிடைத்தார்களா?’’ என்று கேட்டார். அனைவருமே ஒருவரை ஒருவர் பார்த்துப் பேசிக்கொண்டனர். மன்னர், “ஏன் யாருமே பதில் கூற மறுக்கிறீர்கள்?’’ என்று கேட்டபோது, ஜெம்மே சாஸ்திரியிடம் பொற்காசுகளை லஞ்சமாகப் பெற்ற அரசவை நிருவாகி ஒருவர், “மன்னா! நம்மிடம் ஒரு நல்ல உபாயம் உள்ளது. அதன்படி நாம் செயல்பட்டால் அனைத்துத் தகுதிகளும் பெற்ற ஒருவர் நமக்கு அமைச்சராகக் கிடைப்பார் என்று கூறினார். இதைக் கேட்ட அரசரும், “அப்படி என்ன உபாயம்?’’ என்று கேட்டார்.
அப்போது ஜெம்மே சாஸ்திரியிடம் பொற்காசுகளைப் பெற்ற ஒரு நிருவாகி, “அரசே, நமது ஊரில் உள்ள பெருமாள்கோவில் யானை ஊரில் பலரது கனவில் வந்துள்ளது, அப்படி வந்த யானை, “தான் முன்பு கருடனாக பெருமாளைச் சுமந்தவன். இப்பிறவியில் விஜயநகரத்தில் பெருமாள் கோவிலில் யானையாகப் பிறக்கும் பேறுபெற்றேன்’’ என்று கூறியுள்ளது, மேலும் என் மூலம் மாலையை தோளில் பெற்று அடையாளம் காட்டப்படும் நபர் மிகவும் வல்லமையான ஒருவராகத் திகழ்வார். அவரே அனைத்து அறிவையும் ஒருசேரப் பெற்றவர்’’ என்று தானும் சில ஒட்டுக்கதைகளைச் சேர்த்துக் கூறினார். மன்னரும் தீவிர பெருமாள் பக்தர் என்பதால் இவரது பேச்சை அப்படியே நம்பிவிட்டார்.
“அப்படியே செய்துவிடலாம். யானை யார் கழுத்தில் மாலை அணிவிக்கிறதோ, அவரையே வணிகத்திற்கான அமைச்சராக்கிவிடலாம் என்று கூறி, யாராவது இது குறித்து கருத்து கூறுகிறீர்களா?’’ என்றார். அரசரோ பெருமாள் பக்தர்; விசயமோ பெருமாள் கோவில் யானை தொடர்பானது. ஒருவேளை நாம் மன்னர் கூற்றுக்கு எதிராகப் பேசிவிட்டால் மன்னரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று எண்ணி, “அரசரே! உங்களின் கருத்தே உத்தமமானது, உங்களின் திட்டப்படி யானை யாருக்கு மாலை அணிவிக்கிறதோ அவரையே அமைச்சராக்கி விடலாம்” என்று எல்லோரும் ஒரே மாதிரி ஆமோதித்தனர். ஆனால், அரசவையில் அமர்ந்திருந்த தெனாலிராமன் முகத்தில் மகிழ்ச்சி இல்லை.
இதைக் கண்ட அரசன், “தெனாலி, உனது கருத்து என்ன?” என்று கேட்டார். அதற்கு தெனாலி ராமனோ, “அரசே! அய்ந்தறிவு கொண்ட யானை மிகவும் முக்கியமான ஒரு பதவிக்கான நபரைத் தேர்ந்தெடுப்பதா? அப்படி யானை யாராவது ஒரு மூடனையோ பயித்தியக்காரனையோ தேர்ந்தெடுத்து விட்டால் நாட்டின் நிலை என்ன ஆகும்? ஆகவே, இந்தக் கருத்தை நீங்கள் மறுபரிசீலனை செய்யவேண்டும்” என்று கூறினார். இதைக் கேட்ட அரசனுக்குக் கோபம் வந்துவிட்டது, “என்னது? கோவில் யானையை _ அதுவும் முற்பிறவியில் கருடனாக இருந்து பெருமாளுக்குச் சேவை செய்த யானையை _ அய்ந்தறிவு உயிர் என்று கேலி செய்கிறாயே! அதீத அறிவு படைத்தவன் என்கிற அகந்தை உனக்கு! அந்த யானை முட்டாளைத் தேர்ந்தெடுக்கும் என்று உன்னால் உறுதிப்படுத்த முடியுமா?” என்றார். “அப்படி இல்லை என்றால் காலம் முழுவதும் இந்த பெருமாள் கோவிலுக்கு உங்கள் குடும்பம் அடிமைச் சேவகம் செய்யவேண்டும்” என்று எச்சரித்தார்.
தெனாலியும் அச்சப்படாமல் பதற்றப்படாமல், “அரசே! நாட்டின் முக்கியமான ஒரு பதவிக்குத் தகுதியானவரைத் தேர்ந்தெடுக்கும் விவகாரத்தில் இப்படி அலட்சியம் காட்டினால் நாட்டின் நிலை மோசமாகும். ஆகவே, திறமையானவரை நேர்காணல் செய்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம். எனக்குச் சில நாள்கள் அவகாசம் தாருங்கள்” என்று கூறினார். அரசர் எதுவும் கூறாமல் வேகமாக அரண்மனைக்குள் சென்றுவிட்டார். அதனை அடுத்து அனைவரும், “தெனாலி இப்படிச் செய்யலாமா? மனிதர்கள் வேண்டுமென்றால் உன் சித்துவேலைக்கு அகப்படுவார்கள். யானையிடம் உன் புத்திசாலித்தனம் பலிக்காது” என்று அவனை எச்சரித்துவிட்டுச் சென்றனர். தெனாலியும் மறுநாள் அதிகாலையிலேயே நேராகக் கோவில் யானை இருக்கும் பகுதிக்குச்சென்று யாரும் அறியாமல் நோட்டமிட்டார்.
ஜெம்மே சாஸ்திரி தனது மூத்தமகனுக்கு யானை மாலைபோடச் சொல்லி பழக்கிக்கொண்டு இருந்தார். அப்போது யானை கதவைத் திறந்து ஜெம்மே சாஸ்திரிக்கு மாலை அணிவிப்பதைப் பார்த்தார். அங்கு பலர் நின்றுகொண்டு இருக்கும் போது ஜெம்மே சாஸ்திருக்கு மட்டும் யானை மாலை போட்டது. ஒருவேளை பழக்கப்படுத்திய யானையாக இருக்குமோ என்கிற அய்யம் தெனாலி மனதில் ஏற்பட்டது, தனது அய்யத்தைப் போக்க யானைகள் அதிகம் வளர்க்கப்படும் குடகு நாட்டிற்குப் பயணம் செய்தார். குடகில் யானையைப் பழக்கும் தனக்கு அறிமுகமான நபரிடம் அனைத்து விவரங்களையும் கூறினார். மேலும் யானை யாராவது ஒரு முட்டாளுக்கு மாலை அணிவித்து விட்டால் நாட்டின் நிலை மோசமாகிவிடும் என்று கவலை தெரிவித்தார்.
மேலும் அனைவரும் இருக்கும்போது ஜெம்மே சாஸ்திரிக்கு மட்டுமே யானை மாலை அணிவிப்பது குறித்தும் கேட்டார். இதற்கு யானையைப் பழக்கும் தெனாலியின் நண்பர், “யானை குறிப்பிட்ட ஒருவருக்கு மட்டுமே மாலை அணிவிப்பது பெரிய மாய மந்திரம் இல்லை. குறிப்பிட்ட ஒருவருக்கே யானையை மாலை அணிவிக்க எளிதாகப் பழக்கப்படுத்திவிடலாம்” என்றார். அப்போதுதான் தெனாலிக்குக் கோவிலில் நடந்த ஒரு காட்சி நினைவுக்கு வந்தது. அதாவது தனது மகனுக்கு மாலை போட யானையைப் பழக்கும்போது தான் நெற்றியில் வித்தியாசமான நாமத்தைப் போடாமல் தனது மகன் நெற்றியில் போட்டு யானைக்குப் பழக்கிக்கொண்டிருந்தது நினைவிற்கு வந்தது. மேலும் தெனாலி நண்பர் கூறும்போது, “யானை மிகவும் நன்றியுள்ள விலங்கு. அதற்கு யாராவது நன்மை செய்தால் அவரை அடையாளம் கண்டு, தொடர்ந்து நன்றி காட்டும்” என்றும் கூறினார்.
இதைக் கேட்டவுடன் தெனாலியின் மூளையில் ஒரு திட்டம் உதித்தது. அதனை அடுத்து யானையின் குடலில் பூச்சி இருந்தால் அதனை வெளிக்கொண்டு வர பேதிமருந்து அதன் உணவில் கலந்து கொடுப்பார்கள். அந்த மருந்தையும், அப்படி யானைக்கு பேதி போனால் அதை நிறுத்தக் கொடுக்கப்படும் மாற்று மருந்தும் கேட்டு வாங்கிக்கொண்டு விஜயநகரத்திற்குத் திரும்பினார். தெனாலியில் பெருமாள் பக்தர் வேடம் போட்டு கோவிலுக்குச் சென்றார். “அங்கு 40 மண்டலம் பெருமாளுக்கு விரதமிருந்து முடித்தேன். அதுதான் பெருமாளை தரிசித்துவிட்டு யானைக்கு அன்னதானம் கொடுக்க வந்தேன்” என்று கூறி யானைக்கு தான் கொண்டுவந்த பேதி மருந்து கலந்த உணவைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். யானையும் அதை உண்ட பிறகு சில மணி நேரம் கடந்து பேதி போக ஆரம்பித்தது, இதைக் கண்ட ஜெம்மே சாஸ்திரி உடனே மருத்துவரை அழைத்தார்.
மருத்துவரும் யானைக்கு பேதியானால், அதற்கு கொடுக்கவேண்டிய மருந்து குறித்து அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. அப்போது அங்கு வந்த தெனாலி தனக்குத் தெரிந்த ஒருவர் யானைக்கு மருந்து கொடுப்பதில் புலமை பெற்றவர் என்று கூறி, அவ்வூரில் வேலையில்லாமல் சோம்பேறியாக தெருவில் சுற்றிகொண்டு இருந்த _ அனைவருக்கும் நன்கு தெரிந்த மகாமுட்டாள் ரங்கராஜ் என்றொருவனைப் பிடித்து, “யானைக்கு தொடர்ந்து நான் கொடுக்கும் மருந்தைக் கொடு. அதன் அருகில் இருந்து கவனித்துக்கொள். உனக்கு நிறைய பணம் தருகிறேன். நீ வேலை செய்யத் தேவையே இல்லை. காலம் முழுவதும் சுகமாக வாழலாம்” என்று ஆசை வார்த்தை கூறி அவனிடம் யானைக்கான மாற்று மருந்தைக் கொடுத்து அனுப்பினார்.
அவரும் கோவிலுக்கு வந்து யானைக்கு மருந்து கொடுத்து அதன் உடனிருந்தே கவனித்துக் கொண்டார். தொடர்ந்து பேதியினால் அதிகம் சோர்ந்திருந்த யானை, ரங்கராஜ் கொடுத்த உணவின் மூலம் மெல்ல மெல்ல உடல் நலம் பெற ஆரம்பித்துவிட்டது.
இதனையடுத்து மீண்டும் கோவில் கதவைத் திறக்கவும் ஜெம்மே சாஸ்திரிக்கு மாலை போடவுமான தொடர் பணியைச் செய்தது. யானைக்கு மருந்து கொடுத்த ரங்கராஜும், தனக்குத் தின்பதற்கு சோறும் தூக்குவதற்கு இடமும் கிடைப்பதால் அவனும் யானையை நன்றாகப் பார்த்துக்கொண்டான். இந்த நிலையில் அரசரிடமிருந்து ஓர் அறிவிப்பு வந்தது, “குறிப்பிட்ட நாளில் வணிகத்துறை நிருவாக அமைச்சராக யாருக்கொல்லாம் தகுதி உள்ளது என்று நினைக்கின்றீர்களோ அவர்கள் எல்லாம் குறிப்பிட்ட பகுதிக்கு வந்துவிடவேண்டும். கோவில் யானை யாருக்கு மாலை அணிவிக்கிறதோ அவரே அமைச்சராவார்” என்று அறிவித்துவிட்டார்.
இந்த நாளைத்தான் ஜெம்மே சாஸ்திரி எதிர்பார்த்துக் காத்திருந்தார். தெனாலியும் அந்த நாளை எதிர்பார்த்தார். முதல் நாள் இரவு யானைக்கு மருந்து கொடுத்து அதைப் பராமரித்து வரும் ரங்கராஜிடம் சென்று, “நாளை நீ மன்னர் அறிவித்த இடத்திற்கு வந்து நின்றுவிடு. உனக்கு நான் கூறிய அனைத்தையும் செய்துவிடுகிறேன்” என்று கூறினார்.
அவனும் மறுநாள் காலை அறிவிப்பில் சுட்டிக்காட்டிய இடத்திற்கு வந்தான். அங்கே ஜெம்மே சாஸ்திரி மகன் தனது தந்தையைப் போல் வித்தியாசமாக பெரிய நாமத்தை நெற்றியில் பூசிக்கொண்டு பட்டாடை உடுத்தி கோவிலில் தனது தந்தை எப்படி இருப்பாரோ அப்படியே இருந்தார். அங்கு திறமைசாலிகள் சிலரும் நின்றுகொண்டு இருந்தனர். அவர்கள் ஊடே தெனாலி அழைத்துவந்த முட்டாள் ரங்கராஜும் நின்று கொண்டு இருந்தான். மன்னரும் யானையின் தும்பிக்கையில் மாலையைக் கொடுத்து அதை வணங்கி அனுப்பிவிட்டார்.
யார் கழுத்தில் யானை மாலை போடப்போகிறது என்று பார்க்க மன்னர் உள்பட அனைவருமே ஆர்வமாக இருந்தனர். ஜெம்மே சாஸ்திரியோ நாம் நமது மகனின் நெற்றியில் போட்ட நாமம்தான் யானையின் நினைவில் நிற்கும். ஆகவே, நமது மகன்தான் அமைச்சராவான் என்று மகிழ்வோடு காத்திருந்தார். யானை ஒவ்வொருவராகப் பார்த்துகொண்டு இருந்தபோது, தான் உடல் நலிவுற்று இருந்தபோது மருந்து கொடுத்து தன்னைக் காப்பாற்றி இன்றுவரை பரிவாகத் தன்னைக் கவனிக்கும் ரங்கராஜ் அங்கு நிற்பதைப் பார்த்து, உடன் அவன் கழுத்தில் மாலையைப் போட்டு அவன் அருகிலேயே நின்றுவிட்டது, இதைக் கண்ட அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர்.
காரணம், யானை மாலை போட்ட ரங்கராஜ் எந்தச் சிந்தனையும் இல்லாத முட்டாள் என்று விஜயநகரத்தில் உள்ள அனைவருக்குமே தெரியும். இதைக் கண்ட மன்னரும் அதிர்ச்சி அடைந்தார். சரி, சொன்ன சொல் தவறக்கூடாது என்று கூறி அவனை அழைத்தார். உடனே அங்கு வந்த தெனாலி, “அரசே! நான் அன்று கூறியது நினைவில் உள்ளதா? அய்ந்தறிவு உள்ள யானைக்கு ஒருவரின் தகுதி திறமை எதுவுமே தெரியாது. பல நாள்களாக பெரிய நாமம் போட்ட ஜெம்மே சாஸ்திரிக்கும் அதே நாமம் போட்டுப் பழகிய அவனது மகனுக்கும் மாலை போடாமல், படுமுட்டாள் ஒருவனுக்கு யானை மாலை போடுகிறது என்றால் என்ன காரணம்? யானைக்குத் தன்மீது யார் பரிவு காட்டுகிறார்களோ அவர்களிடம் பாசம் காட்டும் குணம் மட்டுமே உண்டு” என்று கூறி, ஜெம்மே சாஸ்திரி தனது மகனுக்கு அமைச்சர் பதவி பெறவேண்டி செய்த சூழ்ச்சி, அவரிடம் பொற்காசுகளைப் பெற்றுக்கொண்டு வதந்தியைப் பரப்பியவர்கள் குறித்து அனைத்தையும் சொல்லி முடித்தார்.
இதைக் கேட்ட அரசரும், “சரி, தெனாலி… யானை யாருக்கு மாலை போடுகிறதோ அவருக்குப் பதவி வழங்குவதாக வாக்கு கொடுத்துவிட்டேனே” என்றார். அதற்கு தெனாலி, “பரவாயில்லை, யானை மாலைபோட்ட நபரும் இந்தப் பதவியை ஏற்றுக் கொள்ளமாட்டார். அவருக்கு யானையைப் பராமரிக்கும் பணியையே கொடுத்துவிடுங்கள்! இங்கு திறமைசாலிகள் சிலர் வந்துள்ளனர். அவர்களை நேர்காணல் செய்து தகுதியானவரை அமைச்சராக்குங்கள்” என்று கூறினார். அப்படியே தனது நாட்டிலேயே குடும்பத்தோடு தங்கி வணிகம் செய்த தன் நம்பிக்கைக்குரிய அராபியர் ஒருவரை அத்துறை அமைச்சராக்கினார்.